அனுபவம் புதுமை…..! தொடர்.….1…..சங்கர சுப்பிரமணியன்.
“தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற பாரதிதாசனின் கவிதையை தமிழர்அறிவர். இருப்பினும் பஞ்சவர்ணக்கிளி என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையிசைப் பாடலாக வந்தபோது அது பெருவாரியாக அனைவராலும் அறியப்பட்டது எனலாம்.
அதில் வரும் வரிகளில் ஒன்றான “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்ற வரியை உச்சரிக்கும்போது பலமுறை மயிர்கூச்செறிதல் அடைந்துள்ளேன்.
ஆனால் சிலசமயங்களில் உண்மை எனக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. எனக்கு பிடித்த அந்த வரியானது வேறுவிதமாக மாறி “எங்கள் பகைவர் இன்றே இணைந்தார் இங்குள்ள தமிழர் வேறாதல் கண்டே” என்று என் செவிகளில் விழுகின்றது.
வள்ளுவன் வாய்மொழிக்கிணங்க மிகை நாடி மிக்க கொள்வதால் கசப்பான அனுபவம் எதையும் வெகுவாக நான் கண்டு கொள்வதில்லை. இருந்தாலும் மொழிபெயர்ப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டஇரு அனுபவங்களை இங்கு விவரிக்கிறேன்.
ஒரு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் பல பகுதிகளில் பலவிதமான பேச்சுவழக்கை பின்பற்றுகிறார்கள். ஒரு நாட்டிற்குள்ளே பல பகுதிகளில் பல பேச்சுவழக்கில் பேசும் மக்கள் இருக்கும்போது ஒரே மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் வெவ்வேறு நாடுகளில் வாழும்போது அவர்களின் பேச்சு வழக்கு வித்தியாசப் படுவதில் வியப்பில்லை.
சான்றாக தமிழ் நாட்டில் நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ் மற்றும் கோவைத்தமிழ் என்று வேறுபட்ட பேச்சு வழக்கை காணலாம். அதே போன்று வேறு நாடுகளில் வாழும் தமிழரான மலேசியர், இலங்கையர் மற்றும் இந்தியர் என்று இவர்களுக்கு இடையிலும் பேச்சுவழக்கில் வேறுபாடு உள்ளன.
இது தமிழ்மொழிக்கு மட்டுமல்ல. மற்ற மொழிகளிலும் இருக்கிறது. ஆங்கில மொழியை இங்கிலாந்தில் ஒரு மாதிரி பேசினால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேறுவிதமாகப் பேசுகிறார்கள். தெலுங்கு மொழி ஆந்திராவில் பேசும் தெலுங்கு ஒருவிதமாகவும் தமிழ்நாட்டில் வேறுவிதமாகவும் உள்ளது. இருப்பினும் இவர்கள் எவரும் ஒருவர் பேசுவதை ஒருவர் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்வதில்லை.
கேரளாவை விட்டு வெளியே எந்த நாட்டில் சந்தித்தாலும் ஒரு மலையாளி இன்னொரு மலையாளியிடம் அவர்கள் பேசும் மலையாளம் புரியவில்லை என்று சொல்வதில்லை. அதே மாதிரிதான் ஆங்கிலேயர்களும் மற்ற மொழியினரும் தம்மொழியை வேறுநாட்டில் வாழும் தம்மவர்கள் பேசும்போது அவர்களின் பேச்சுவழக்கின் காரணமாக புரியவில்லை என்று சொல்வதில்லை.
உலகின் மூத்த மொழி என்று பெருமையடையும் நாம் வேறுநாட்டில் நம் மொழி பேசப்படும்போது அதை புரியவில்லலை என்று கூறி பெருமையடைகிறோம். இதை நான் பொய்யாக கூறவில்லை. உண்மையைத்தான் கூறுகிறேன்.
இந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர் பேசும் தமிழை புரியவில்லை என்கிறார்கள். கொஞ்சம் கவனித்து கேட்பதை விடுத்து உடனடியாக புரியவில்லை என்று சொன்னால் அதை ஏற்கமுடியாது. அதேபோல் இலங்கைத் தமிழரும் இந்தியத் தமிழர் பேசும் தமிழ் புரியவில்லை என்கிறார்கள். எல்லோரும் இப்படியல்ல. சிலமனிதர்கள் இப்படி. சில நேரங்களில் சில மனிதர்கள்.
எனக்கு இது வியப்பாய் உள்ளது. திரைப்படம் பார்க்கும்போது புரிகிறது. வானொலியில் திரையிசைப் பாடலை கேட்கும் போது புரிகிறது. தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்கும்போது புரிகிறது. பேசுவது மட்டும் புரியவில்லையா செந்தமி்க் கடவுளே செந்தூர் வடிவேலா!
அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. தேவை என்று வந்தால் எவர்க்கும் எதுவும் புரியும் என்ற உண்மைதான் அது. ஒரு ஆங்கிலேயரிடம் நாம் ஒரு தேவைக்காக சென்றால் நாம் பேசுவது புரியாததுபோல நடிப்பார். நம் பெயரை உச்சரிக்க முடியாமல் கடித்து துப்புவார்.
ஆனால் அவர்கள் பெயரான பெர்னாட்ஷா, சேக்ஸ்பியர் என்பதை உச்சரிக்கும் போது அவர்களின் நாக்கு சுளுக்காது. ரஷ்யர்களின் பெயரை உச்சரிக்கும் இவர்களுக்கு தமிழர்களின் பெயரை உச்சரிக்க நாக்கு வளையாதாம்.
அதே வெள்ளையருக்கு நம் தேவை தேவைப்படும்போது அவர் வாயில் தட்சணாமூர்த்தி, சுப்பிரமணியன் போன்ற பெயரெல்லாம் ஒலி பிசகாமல் ஒலிக்கும். மதுரை என்பதை மட்டும் சொல்ல முடியாமல் மஷுரா என்பார்களாம். என்னிடம் ஒரு சீன மருத்துவர் பேசும்போது சுப்பிரமணியன் என்று சிறிதும் தடையின்றி உச்சரித்து உங்கள் பெயரை சரியாக சொல்கிறேனா என்று கேட்டு என்னிடம் நற்சான்றும் பெற்றுக்கொண்டார்.
இந்த இடத்தில் ஒரு கொச்சையான பழமொழியை சொல்வதற்கு மன்னிக்கவும். “தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் (ஆண்குறி) களை எடுக்குமாம்” என்பதே அது. புரிந்து கொள்ள தங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.
இந்த அனுபவம் எனக்கும் நான் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் நடந்துள்ளது. பலர் என்னிடம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று கேட்டிருக்கிறார்கள். நானும் திருநெல்வேலி என்று சொல்லி சிறிதுநேர இடைவெளிக்குப்பின் நான் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்தவன் என்பேன். அதற்கு அவர்கள் அப்படி ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே என்பார்கள்.
நான் பெங்களூரில் வாழ்ந்தபோது அங்குள்ள வேலூர் மற்றும் பெங்களூர்த் தமிழர்கள் நீங்கள் பேசும் தமிழில் திருநெல்வேலி மணம் கமழவில்லையே மாறாக பொதுவான தமிழில் பேசுகிறீர்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
மாறாக கசப்பான அனுபவங்களும் நிகழ்ந்துள்ளன. ஒருமுறை நான் மொழிபயர்க்கும்போது சம்பந்தப்பட்டவர் இவருக்கு நான் பேசும் தமிழ் புரியவில்லை தப்பு தப்பாக சொல்கிறார் என்று என்னிடம் சொல்லாததை எல்லாம் ஆங்கிலத்தில் விளக்கமாக சொன்னார்.
அவர் முதலிலேயே எனக்கு ஆங்கிலம் புரியும் மொழிபெயர்ப்பாளர் தேவையில்லை என்று சொல்லியிருக்கலாம். என்னிடம் தமிழில் கதைக்கவே தயங்கினார். கதைக்க விருப்பமின்றி வாய்க்குள்ளே முனுமுனத்தார். ஆனால் தொழில் நெறிஞரிடம் ஆங்கிலத்தில் என்னிடம் விவரிக்காததை எல்லாம் விளக்கமாக சொன்னதுடன்இவர் இந்தியத் தமிழர் என்றும்சொன்னார்.
அப்போது அவரைப்பற்றி புரிந்து கொண்டேன். உடனே நான் தொழில் நெறிஞரிடம் இவருக்கு தேவையான மொழிபெயர்ப்பாளரை அழைத்திருக்க வேண்டும். இவரே அதை வலியுறுத்தி சொல்லியிருக்க வேண்டும் என்றும் கூறினேன். அதன்பின்தான் உண்மை புரிந்தது. அவர் இலங்கைத் தமிழர்தான் வேண்டுமென வலுயிறுத்தியிருக்கிறார். அதற்காக தொழில் நெறிஞர் என்னை அழைத்திருந்தது அவரது தவறென்று கூறி என்னிடம் மன்னிப்பு கேட்டார்.
எனக்கு நான் நல்லவனா கெட்டவனா என்று நாயகன் கமல் போன்று சந்தேகம் வந்தது. ஏனென்றால் பலமுறை பலர் என்னிடம் அடுத்த முறையும் நீங்கள் எனக்கு மொழிபெயர்ப்பு செய்வீர்களா? நீங்கள்தான் வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள்.
எல்லா துறைகளிலும் போட்டி இருப்பதுபோல் மொழிபெயர்ப்பு துறையிலும் போட்டி உள்ளது. இங்கோஎனக்கு வித்தியாசமான போட்டி. மொழிபயர்ப்பாளர்களுடனும் போட்டிபோட வேண்டும். மொழிபெயர்க்க வேண்டியவர்களின் விருப்பு வெறுப்புக்கும் ஆளாக வேண்டும். என்னைப் பொருத்தவரை ரத்ததானம் செய்பவரும் மருத்துவரும் நடந்து கொள்வதைப்போலவே நடந்து கொள்கிறேன்.
ஒருமுறை ஷெப்பர்டன் நீதிமன்றத்துக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றிருந்தேன். அன்று எனக்கு சரியான இருமல். கொஞ்சநேரம் தொடர்ந்து பேசினால் இருமல் வந்துவிடும்.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.