கட்டுரைகள்

மலையக இலக்கிய – தொழிற்சங்க வரலாற்றை ஆவணப்படுத்திய அந்தனி ஜீவா….- முருகபூபதி

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிரந்தர தொழிலோ, வருவாயோஇல்லாமல் வாழ்ந்துகொண்டு எழுத்துப்பணியிலும், கலைத்துறையிலும் தொடர்ந்தும்அயர்ச்சியின்றி ஈடுபடுவது கடினம்.

ஆனால், அந்த கடினமான பாதையை கடந்து வந்திருக்கும் படைப்பிலக்கியவாதி,நாடகக்கலைஞர், ஊடகவியலாளர், தொழிற்சங்க செயற்பாட்டாளர் அந்தனிஜீவாஅவர்கள் 1960 களில் எழுத்துலகில் பிரவேசித்தவர்.

ஆறுதசாப்த காலத்திற்கும் மேலாக குறிப்பிட்ட துறைகளில் ஈடுபட்டுவந்திருக்கும்அந்தனி ஜீவா, எமது கலை, இலக்கிய உலகில் கலகக்காரனாகவும் விளங்கியவர்.

எனினும் இவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதுஎனது அவதானம். ஆயினும் இலங்கை கலை, இலக்கிய மற்றும் தமிழ்ஊடகத்துறையில் அந்தனி ஜீவா தவிர்க்கமுடியாத ஆளுமையாக திகழ்கிறார்.

மலையக எழுத்துக்களை படைத்தவர்களைப் பற்றியும் மலையக தொழிற்சங்கங்களின்வரலாறு பற்றியும் எழுதிய மூத்த படைப்பாளி இவர்.  “ படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில்மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின்ராகமாகத் திகழ வேண்டும். “ எனச்சொல்லி வந்திருக்கும் அந்தனிஜீவா, தனதுநாடகங்கள் மற்றும் கலை, இலக்கியப்பிரதிகளின் ஊடாக சமூகத்திற்காகவும்பேசினார். சமூகத்தையும் பேசவைத்தார்.

தொடக்கத்தில் சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர்,மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி ஆகியனவற்றில்எழுதிவந்திருக்கும் அந்தனிஜீவா, பின்னாளில் சிரித்திரன், மல்லிகை, ஞானம், ஜீவநதிமுதலான இதழ்களிலும் தனது படைப்புகளை வரவாக்கியவர்.

மலையக இலக்கிய வரலாற்றை ஆய்வுசெய்யத் தயாராகும் பல்கலைக்கழகமாணாக்கர்களுக்கு அந்தனி ஜீவாவின் பல நூல்கள் உசாத்துணையாகத் திகழும்.இதழியலில் டிப்ளோமா பெற்றிருக்கும் அந்தனிஜீவா, கொழுந்து, குன்றின் குரல்,ஜனசக்தி , செஞ்சக்தி ( மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகை ) இதழ்களின்ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர்.

பாரதப்பிரதமர் இந்திரா காந்தி முதல், இலங்கை மலையகத்தின் மூத்ததொழிற்சங்கவாதிகள் கோ. நடேசய்யர் மற்றும் சி. வி. வேலுப்பிள்ளை உட்பட பலஆளுமைகளின் வரலாற்றை கதைபோன்று பதிவு செய்து ஆவணப்படுத்தியவர்அந்தனி ஜீவா.

கொழும்பில் மேடை நாடகங்கள் 1970 களில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருந்தன.அந்தனிஜீவாவின் பல நாடகங்கள் கொழும்பிலும், மலையகத்திலும்மேடையேற்றப்பட்டுள்ளன.

அவரது அக்கினிப்பூக்கள் நாடகம் மேடையேற்றப்பட்டபோது அச்சமயம்எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் பிரதம விருந்தினராககலந்துகொண்டு சிறப்பித்தார்.

1978 இல் இலங்கைக்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர் தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள், அந்தனிஜீவாவின்எழுத்தாற்றலையும், நாடகத்துறையிலிருந்த ஈடுபாட்டையும் அவதானித்துவிட்டு,அந்த ஆண்டில் தமிழ்நாடு திருப்பூரில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கியபெருமன்றத்தின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

“ அம்மாநாட்டில்   “ ஈழத்தில் தமிழ் நாடகம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்.அவரது உரையில், உலக நாடகப் பின்னணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சிகுறித்தும், நாடக வளர்ச்சியிலும், கூத்து ஆராய்ச்சியிலும் ஈழத்தவர்களின் பங்குகுறித்தும் விரிவாகப் பதிவு செய்தார். அவரது உரை நூலாக சிவகங்கை அகரம்பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. “ என்ற தகவலை கீற்று இணைய இதழ்பதிவுசெய்துள்ளது.

அம்மாநாட்டில் கலந்துகொண்ட அந்தனி ஜீவா, சென்னையில் எழுத்தாளர்ஜெயகாந்தனை நேரில் சந்தித்துவிட்டு வந்து தினகரன் வார மஞ்சரியில் விரிவானதொடரும் எழுதியிருந்தார்.

பாரதி நூற்றாண்டு காலத்தில் இளங்கீரனின் மகாகவி பாரதி நாடகப்பிரதியைவைத்துக்கொண்டு, அதனை நெறியாள்கை செய்தவரும் அந்தனிஜீவாதான்.இந்த நாடகம் பாரதி நூற்றாண்டு காலத்தில் சில தடவைகள் மேடையேற்றப்பட்டது.

இதனை தமிழகத்திலிருந்து அப்போது வருகை தந்திருந்த எழுத்தாளர்கள் தொ. மு. சி.ரகுநாதன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரும்பார்த்து ரசித்து பாராட்டியிருக்கின்றனர்.

இவர்கள் மூவரும் பாரதி இயலில் ஈடுபாடு கொண்டிருந்தமையால், இவர்களைஇளங்கீரனின் பிரதியும் அந்தனி ஜீவாவின் நெறியாள்கையும் பெரிதும்கவர்ந்திருந்தது.

கண்டியில் அந்தனிஜீவா ஆரம்பித்த மலையக கலை இலக்கியப்பேரவை, பலகருத்தரங்குகளை நடத்தியிருக்கிறது. அத்துடன் இந்த அமைப்பினால் பல நூல்களும்பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன.இதற்கெல்லாம் அந்தனிஜீவா செலவிட்டிருக்கும் நேரம் பெறுமதியானது.

ஓயாமல் இயங்கியிருக்கும் அந்தனிஜீவாவை சமகாலம் வயது மூப்பின் காரணத்தால்வீட்டிலே முடங்கியிருக்கச் செய்துள்ளது.எனினும் அவர் வீட்டிலிருந்தவாறே கடந்த காலத்தையும் பயணித்த பாதையையும்சந்தித்த மனிதர்களிடம் பெற்றதையும் கற்றதையும் நினைவிலிருத்தி நனவிடைதோய்ந்துகொண்டிருப்பார் என நம்புகின்றோம்.

( நன்றி: யாழ். ஜீவநதி )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.