ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நம்பிக்கையூட்டும் இளம் கவிஞர்!…. கலாநிதி செ. சுதர்சனின் தாயிரங்கு பாடல்கள்!!… முருகபூபதி.
படித்தோம் சொல்கின்றோம்:
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நம்பிக்கையூட்டும் இளம் கவிஞர் !
கலாநிதி செ. சுதர்சனின் தாயிரங்கு பாடல்கள்
முருகபூபதி.
புகை மண்டிய கொண்டல்
புழுதி மேவிய வடலி
சன்னங்கள் வேயுமூரின்
குருதி பாவிய இருள்,
கருணை போட்டு
வயிறு தள்ளிய மண்மடி,
கூரை பற்றி எரியும்
நெருப்பு வெளி,
கருவாட்டு வாசமணல்,
இழுவையிசைப் பண்,
நுரை தள்ளித் தெளிக்குமொரு
நிலக்கரை மடிப்பு,
இன்னும் விழியில்
அடங்காதிருக்கையில் எழுதி ஒட்டினார்கள்
“ சிங்கம் தின்ற நிலம் “
வடபுலத்தின் யாழ். மாவட்டத்தில் பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்த வசாவிளான் ஊரிலிருந்து இரவோடு இரவாக இடம்பெயர்ந்து சென்றவர்கள் பின்னாளில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
அவர்களிடமிருந்து வாய்மொழிக்கூற்றாக அந்த இடப்பெயர்வு வலிகளை கேட்டுத்தெரிந்துகொண்டிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரில் எனது அயலவர்களான தமிழர்கள் சிலர், வசாவிளான் பற்றியும் அந்த மண்ணின் வளம்
பற்றியும், தாம் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் கதைகதையாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
பல மணிநேரம் அக்கதைகளை கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது, பேராதனை பல்கலைக்கழகத்தில் நான் முதல் முதலில் நேருக்கு நேர் சந்தித்த இளம் தலைமுறை படைப்பாளி செ. சுதர்சன், தான் எழுதியிருந்த தாயிரங்குப்பாடல்கள் கவிதை நூலை எனக்கு படிக்கத்தந்தார்.
அவர் வழங்கிய இந்நூலின் முதலாவது கவிதையைத்தான் இங்கே தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
செ. சுதர்சன், யாழ்ப்பாணம் – வசாவிளான் கிராமத்தை பூர்வீகமாக்கொண்டவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை பயின்று, முதல்தரச் சித்தியில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்றவர்.
அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிகழ்த்தி, முது தத்துவமாணிப்பட்டத்தையும் பெற்றார். தஞ்சை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றியவாரே இலக்கியத்துறையிலும் பங்களிப்பு செய்துவருகின்றார்.
கோட்பாட்டு ஆய்வாளராகவும், கவிஞராகவும் விமர்சகராகவும் அறியப்படும் சுதர்சன், தமிழ் நாட்டில் வெளியான க்ரியாவின் தற்கால அகராதியின் புதிய பதிப்பிலும் பங்கேற்றவர்.
எனக்கு இவர் முதலில் மின்னஞ்சல் ஊடாகத்தான் அறிமுகமானார். எனது இலங்கையில் பாரதி நூலை புதுச்சேரி முனைவர் அரிமளம் பத்மநாபனுக்கு சேர்ப்பித்து, அவர் பாரதி தொடர்பாக மேற்கொண்டுவரும் ஆய்வுக்கும் உதவியிருப்பவர்.
எனது கணங்கள் சிறுகதையை படித்துவிட்டு தனது நயத்தலை எழுதியிருந்தார். இச்சிறுகதை சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருப்பதுடன் எனது கதைத் தொகுப்பின் கதை நூலிலும் இடம்பெற்றுள்ளது.
சுதர்சனின் நயப்புரையும் அந்த நூலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இம்முறை இலங்கைப்பயணத்தில் சுதர்சனையும் அவசியம் சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றிருந்த என்னை, எனது நீண்ட கால இலக்கிய நண்பர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான், கண்டி
பஸ் நிலையத்திலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச்சென்று, அங்கே சுதர்சனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
நாம் இருவரும் முன்னர் ஒரு சில மெய்நிகர் அரங்குகளில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசியிருந்தாலும், அன்றுதான் நேருக்கு நேர் சந்திக்கின்றோம்.
பேராசிரியர் நுஃமானின் அபிமான மாணவர்களுள் ஒருவரான சுதர்சனின் தாயிரங்குப்பாடல்கள் நூலுக்கு அறிமுகவுரை எழுதியிருப்பவரும் நுஃமான்தான்.
சிங்கம் தின்ற நிலம் என்ற தலைப்பில் நான்கு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இராணுவ ஆக்கிரமிப்பினால், வசாவிளான் கிராமம் பற்றி எரிந்தபோது இடம்பெயர்ந்த மக்களின் வலியின் குரல் சுதர்சனின் வரிகளில் இவ்வாறு அமைந்துள்ளது:
கள்ளியிலும்
காட்டுப் பூவரசிலும்
பாலூறுமென்று கட்டிக்
காற்றாட்டும் ஆட்டிளங்கொடிகள்
கருகத் தொடங்கிய மாலையில்தான்
கால்நடைகளானோம் !
ஒரு காலத்தில் கமமும் கலையும் கொழித்த தனது ஊர் வசாவிளானிலிருந்து வெளியேறிய அந்த நாட்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
“ தன்பாட்டில் எதுவும் தானாக விளையும் செம்பாட்டு நிலம். போர் வெடித்த நள்ளிரா ஒன்றில், எரிந்துகொண்டிருந்த ஊரைப்படையினர் பறித்தனர். கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக ஊரைவிட்டு வெளியேறினோம். ஆங்காங்கு ஓட்டத்தை நிறுத்தி, அவ்வப்போது நின்று நின்று திரும்பிப் பார்த்தோம். வீடுகளும் பாடசாலையும் ஆலயங்களும் எரிந்து பனைக்கு மேலான உயரத்தில் நெருப்பு வெளிச்சத்தில், புகைப்படலம் திரள் திரளாக எழுந்துகொண்டிருந்தது. வாழ்விடம் சாம்பலாகுவதைப் பார்த்து, கையிலும் தலையிலுமிருந்த பைகளைப் போட்டுவிட்டு, எல்லோரும் விம்மி விம்மி அழுதார்கள். ஹெலிகொப்டர் துரத்தி துரத்தி சுடத்தொடங்கியது.
தொண்ணூரில் வெளியேறிய நான் இன்னும் ஊருக்குத் திரும்பவில்லை. “
சுதர்சனைப்போன்று ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தங்கள் பூர்வீக ஊருக்குத்திரும்பாமல்தான் இருக்கிறார்கள்.
போர் தின்ற அந்த நிலத்தின் காட்சியை தனது கவிதைகளில் சித்திரிக்கும் சுதர்சன், தென்னிலங்கையில் கடந்த ஆண்டு ( 2022 ) காலிமுகத்திடலில் நடந்த மக்கள் எழுச்சிப்போராட்டம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
சுவாலை என்னவாகும் ? என்ற தலைப்பில் அமைந்த கவிதை இது:
வயிற்றிலடிக்கிறபோது….
ஒரு கொடிப்போராட்டமும்
ஒரு எதிர்ப்புச் சுலோகமும்
ஒரு பெரும் புரட்சியை,
எவ்வாறு நிகழ்த்தும் !
ஒரு துண்டு பாணும்
ஒரு பால்மா பையும்
ஒரு கலன் எரிபொருளும்
இன்னும்,
மின்வெட்டும்
அதை எவ்வாறு நிகழ்த்தும்
பசியின் நெருப்பிலிருந்து
புரட்சியின் முதல் பொறி
பற்றுகிறதெனில்….
உண்டாறும் காலம் வருகையில்
அதன் சுவாலை என்னவாகும் ?
அதிகாரக் கதிரையின் கால்களை,
விலை ஏற்றம் அசைக்கும்
என்ற நம்பிக்கையை
எங்கிருந்து பெறுவேன் !
‘ எதிர் ‘ என்றொரு சொல்லை
எங்கு நடுவேன் ?
எவ்வாறு வளர்ப்பேன் ?
காலிமுகத்திடல் போராட்டம் இறுதியில் என்னவாகும்? என்ற எதிர்காலக் கவலையும் இந்த இளம் கவிஞரின் மனதில் துளிர்த்திருக்கிறது.
சுதர்சன் காலிமுகம் 22 தொடர்பாக எழுதிய கவிதைகள் சில சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஆறாவது தலைமுறையாக உருவெடுத்திருக்கும் செ. சுதர்சன், எற்கனவே சில படைப்புகளை வரவாக்கியிருப்பவர்.
சமூகத்திற்காக பேசும் இவர், சமூகத்தையும் தனது எழுத்துக்களினால் பேசவைப்பவர்.
இலக்கிய உலகில் நம்பிக்கையூட்டும் செ. சுதர்சனுக்கு எமது வாழ்த்துக்கள்.
—-0—-