இலக்கியச்சோலை

முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் … எழுத்தாளனின் பார்வையில் சினிமா… ஒரு கண்ணோட்டம்! …. கிறிஸ்டி நல்லரெத்தினம்

ஐம்பது தசாப்தங்களுக்கும் மேல் எழுத்துலகில் தடம்பதித்துள்ள எழுத்தாளர் முருகபூபதியின் முப்பதாவது நூல் “சினிமா: பார்த்ததும் கேட்டதும்”. ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள 128 பக்கங்கள் கொண்டிருக்கும் இந்த நூல், இலங்கை, இந்திய மற்றும் உலக சினிமாக்களை விமர்சிப்பதுடன் மட்டுமல்லாமல், சினிமா உலகில் எம்மை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அவர்களில் சிலருக்கும் தனக்கும் நிகழ்ந்த சந்திப்புகளையும் உரையாடல்களையும் சுவாரசியமாக முருகபூபதி விபரிக்கிறார்.

இந்நூலுக்கு அட்டைப்படம் வடிவமைக்க என்னிடம் தட்டச்சுப் பிரதியை நூலாசிரியர் தந்தபோது, அதைப் படித்ததும் இந்நூல் வழமையான ‘சினிமாப் புத்தகம்’ அல்ல என புரிந்துகொண்டேன். வர்த்தக சுழலில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் தற்கால தமிழ் சினிமாவுக்கும் முன்னர் ஒரு பொற்காலம் இருந்தது என்பதை பல கட்டுரைகள் துல்லியமாக விபரிப்பதை இந்நூலில் கண்டுகொண்டேன்.

சினிமாவைப் பற்றி நாம் எத்தனையோ செய்திகளையும் கட்டுரைகளையும் அச்சு ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் படித்திருக்கிறோம். எனவே வாசகர்களாகிய நீங்கள் இந்த கட்டுரைத் தொகுப்பு நூல் எந்த வகையில் வேறுபடுகிறது – ஏன் இதை படிக்க வேண்டும்? என வினவலாம். ஒரு எழுத்தாளனின் பார்வை, ஒரு சாமானிய திரைப்பட ரசிகனின் பார்வையில் இருந்து எப்படி வேறுபடுகிறது ? என்பதை இந்நூலின் பக்கங்களைப் புரட்டி வாசிக்கும்போது உங்களுக்கு புரியும்.

ஒரு எழுத்தாளன் தான் திரையில் ரசித்ததை மனதில் உள்வாங்கி, தனது ரசனை அனுபவத்தை கூறுபோட்டு விமர்சனப் பார்வையுடன் சமகால சிந்தனை எனும் அளவுகோல் கொண்டு தரம்பிரித்து அதை வார்த்தைகளாக்கி எமக்கு வழங்குகிறான்.

இந்நூலில் பிரபலங்களுக்கோ, கோடிகளைக் கொட்டி ரசிகர்கள் காதில் பூச்சொருகும் இயக்குனர்களுக்கோ, யதார்த்தங்களை மீறும் போலிகளுக்கோ இடமில்லை என்பதை பக்கங்களை புரட்டும் வாசகருக்குப் புரியும். சினிமா எவ்வாறு சமூகப் பண்பாட்டின் கூர்ப்பிற்கு உதவுகிறது, அதை எங்கனம் மாற்ற எத்தனிக்கிறது என்பதே ஒரு எழுத்தாளன் சினிமாவை நோக்கும் பார்வை.

கனவுத்தொழிற்சாலை என நாம் அழைக்கும் இந்த ராட்சச இயத்திரத்தின் சில்லுகளான நடிகர்கள், இயக்குநர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரின் பங்களிப்பினாலேயே திரைஉலகம் நகர்கிறது. இவர்களுள் மிகச்சிலரே இந்த இயந்திரம் நகரும் திசையை ஒரு புதிய பாதையில், ஒரு சமூக விடிவை நோக்கி, நகர்த்த எத்தனிக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு, அந்த வலிநிறைந்த எத்தனிப்புகளை எமக்கு விபரித்து வெற்றி கண்டுள்ளார் இந்த நூலாசிரியர் என்றே கூற வேண்டும்.

ஒரு திரைப்படத்தில் கதை மட்டுமா இருக்கிறது? இல்லை ஒரு வாழ்க்கைமுறையும் இருக்கிறது. கலாச்சாரத்தில் நிழல் தெரிகிறது, மனிதநேயம் இருக்கிறது. பொழுதுபோக்கு சாதனமாக 1931 இல் தோன்றிய தமிழ் சினிமா? கூர்ப்படைந்து தற்போது பல பரிமாணங்களை தொட்டுள்ளது என்பதை மறுக்க முடியது. இந்த பரிமாணங்களை இந்த நூலில் இடம்பெறும் 16 கட்டுரைகளிலும் ஆசிரியர் எமக்கு வெளிச்சம்போட்டு காண்பிக்கிறார்.

சினிமா பற்றிய இந்த நூலில் முதல் அத்தியாயம் யாரைப் பற்றி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசனைப் பற்றியா? பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சங்களில் வீற்றிருந்த எம்.ஜி.ஆர். பற்றியா? இயக்குனர் திலகம் பாலச்சந்தரைப் பற்றியா ? கண்ணதாசனா அல்லது மெல்லிசை மன்னர் விஸ்வநாதனைப் பற்றியா? இல்லை! முதல் அத்தியாயத்தின் தலைப்பு: ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும்! ஆம், இந்நூலில் உள்ள நீளமான அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஜெயகாந்தன் என்ற எழுத்தாளன் எவ்வாறு கூர்ப்படைந்து ஒரு சினிமா இயக்குனரானார் எனும் கதையை பல சுவாரசியமான சம்பவக் கோர்வைகளுடன் விளக்குகிறார் முருகபூபதி.

ஜெயகாந்தனை 1990 இலும் மற்றும் 2008 இலும் சந்தித்து அளவளாவிய தருணங்களை ஒளிப்படங்களுடன் பதிவு செய்கிறார். இந்தக் கட்டுரை மட்டுமே ஒரு எழுத்தாளன் எவ்வாறு சினிமாவை நோக்குகிறான் என்பதற்கு சான்று.

இந் நூலாசிரியர் இன்னும் ஒரு படி மேலே சென்று ” தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும்” எனும் நீண்ட 14 பக்கங்கள் கொண்ட ஆய்வுக்கட்டுரையையும் எமக்கு அறிமுகப்படுத்துகிறார். திரைப்படத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் அதன் பயணத்திலும் இலக்கியத்தின் பங்களிப்பு எத்தகையது? என்பதை விளக்குகிறார்.

இந்நூலில் திரையுலகுடன் பயணித்த எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமல்லாமல், தேர்ந்த ஒரு வாசகரைப்பற்றியும் விபரிக்கிறார் ஆசிரியர். இதனை “முள்ளும் மலரும் மகேந்திரன்” என்ற கட்டுரையில் படிக்கலாம். உமாச்சந்திரனின் நாவலான முள்ளும் மலரும், புதுமைப்பித்தனின் குறுநாவலான சிற்றன்னை ( உதிரிப்பூக்கள்), பொன்னீலனின் உறவுகள்

(பூட்டாத பூட்டுகள்) சிவசங்கரியின் நாவலான நண்டு ஆகிய படைப்புகளுக்கு திரைவடிவம் கொடுத்தவர் மகேந்திரன். அழகியல் சினிமாக்களை எமக்கு வழங்கியவர் மகேந்திரன் அவர்கள். ஆம், அத்தகைய தீவிர இலக்கிய வாசகனுக்கும் ஒரு அத்தியாயத்தை முருகபூபதி ஒதுக்கியுள்ளார்.

கிழக்கிலங்கையைச் சேர்ந்த பாலு மகேந்திரா எனும் சினிமா படைப்பாளியைப் பற்றிய அத்தியாயத்தில் ( இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா ) பாலுமகேந்திரா பற்றிய குறும் சரித்திரத்துடன் அவரின் வாசிப்பு அனுபவம் எவ்வாறு அவரின் திரைப்படமொழியை சீர் செய்தது என்பதை முருகபூபதி விளக்குகிறார். அக்கட்டுரை இவ்வாறு முடிகிறது: ” இந்திய சினிமாவின் நூற்றாண்டு காலத்துள் பாலு மகேந்திராவின் இடம், அவரது அழியாத கோலங்கள் போன்று அழியாத தடம் பதித்திருக்கிறது.”

ஈழத்து இயக்குனர்களுக்கும் இடம் ஒதுக்கி, அவர்களையும் கௌரவப்படுத்த மறக்கவில்லை இந்த நூலாசிரியர். இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ, மற்றும் பிரசன்ன விதானகே ஆசியோருக்கு மூன்று கட்டுரைகளை ஒதுக்கி, இவர்கள் சிங்கள சினிமாவுக்கு ஆற்றிய சேவைகளையும் சிங்கள சினிமாவை வேறு தளத்திற்கு அவர்கள் உயர்த்திய கதையையும் விபரிக்கிறார்.

பிரசன்ன விதானகேயின் “பௌர்ணமியில் ஒரு மரணம்” (Death on a Full Moon day ) திரைப்படம் பற்றி ஒரு ஆழ்ந்த நோக்குடனான கட்டுரையில், ” திரைக்கதை நாயகன் வின்னிஹாமி, தனது மகன் இறக்கவில்லை எனும் ஒரு மையச் சிந்தனையை அடையாளமாகக் கொண்டு தன்னைச் சுற்றி உள்ள சமூக கும்பலின் முரண்பாடுகளை எப்படி தவிடுபொடியாக்குகிறான் என்பதை என்னமாய் விதானகே படைத்துள்ளார்! ” எனக் கூறி திரைக்கதையை ஆராய்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஈழத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சியை விபரிக்கும் கட்டுரை: “ஈழத்து கலைஞர்களின் பொன்மணி”, காவலூர் ராஜதுரையின் நாவலான “பொன்மணி” திரை வடிவமான சரித்திரத்தை நோக்கி விஜயம் செய்கிறது இந்தக்கட்டுரை.

என்ன..? சினிமாவைப் பற்றிய நூலில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமே ஆசிரியர் தனி இடம் ஒதுக்கிவிட்டாரே..? என்று அங்கலாய்க்க வேண்டாம் வாசகர்களே ! “இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ்”, “மனோரமா ஆச்சி” ஆகிய கட்டுரைகள் பாயாசத்தில் முந்திரிப்பருப்பாய் உங்களை மகிழ்விக்கும்.

மொத்தத்தில் திரைப்பட துறையில் நாம் அனேகமாகக் காணும் சிலுசிலுப்புகளை களைந்து, ஒரு எழுத்தாளனின் பார்வையில் இந்த கனவுலகின் இலக்கிய மையத்தை எமக்கு காண்பிக்கும் ஆசிரியரின் முயற்சி வீண்போகவில்லை என்பதை உறுதியாக நம்பலாம்!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.