இலக்கியச்சோலை
போர் முனையில் போரிட்டவர்க்கு சமமாக பேனா பிடித்த ஈழத்தின் ஊடகப் பேராசான் எஸ்.எம். கோபாலரத்தினம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(ஈழப் போர்க் களத்தில் பேசப்படாத பக்கங்களை வரைந்த ஊடகப் பேராசான் எஸ்.எம்.ஜி அவர்களின் 1930 அக்டோபர் 03இல் பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
ஈழத்தின் ஊடக வரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் தனது எழுத்துக்களின் ஊடாக தமிழ் மக்களுக்கான உண்மை விடயங்களை தெரிவித்துக் கொண்டிருந்தவரே ஊடகப் போராளி எஸ்.எம்.ஜி எனும் போற்றுதற்குரிய கோபாலரத்தினம்.
ஈழத் தமிழ் ஊடகவியலில் தனித்துவ முன்னெடுப்பாளராக வாழ்வுத் தடமிட்ட கோபு எனும் எழுத்தாணியே எஸ்.எம்.ஜி எனும் எஸ்.எம். கோபாலரத்தினம் 2017 நவம்பர் 15இல் மட்டக்களப்பில் இயற்கை எய்தினார்.
ஈழ ஊடகத்துறையில் அனுபவம் மிகுந்த பேராசானாக விளங்கிய எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், அவர்களால் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் திகதி விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஈழத்தின் போர்க்கால வரலாற்றில் கள முனையில் நின்று போரிட்டவர்களுக்கு சமமாகப் பேனா பிடித்து எழுதியவர்களில் எஸ்.எம். கோபாலரத்தினம் முதன்மையானவர்.
அவர் எழுதிய ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தில் பேசப்படாத பக்கங்களில் ஒரு சில பக்கங்களை நிரப்பும் நூலாக அமையும் வகையில் மிக முக்கியமானதொரு ஆவணமாகத் திகழ்கின்றது.
ஈழத்தின் பத்திரிகைத்துறையில் பல சிறந்த பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் இவர் உருவாக்கினார். தமிழ் தேசியம் சார்ந்து இவர் ஆற்றிய பணிகளுக்காகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம்:
ஊடகத்துறையினரால் பெரிதும் மதிக்கப்பட்ட ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், 87 வயதில் மட்டக்களப்பில் இயற்கை எய்தினார்.
1930ஆம் ஆண்டு அக்டோபர் 03ஆம் திகதி பிறந்த எஸ்.எம்.ஜி, கொழும்பில் வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக ஊடகத் துறைக்குள் காலடி எடுத்து தடம் பதித்தவர்.
இவர் பத்திரிகை ஆசிரியராக செயற்பட்ட காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் பெற்றது.
ஏழு ஆண்டுகள் பணியில் கடமையாற்றிய பின்னர், யாழ்ப்பாணத்தில் ஈழநாடு நாளிதழில் பணியாற்றத் தொடங்கினார். ஈழநாடு நாளிதழின் செய்தி ஆசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிய அவர், பின் ஈழமுரசு, ஈழநாதம் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராகவும் செயற்பட்டார்.
1981இல் இலங்கை இராணுவத்தால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்ட போது கோபாலரத்தினம் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.
ஊர்சுற்றி, கோபு, எஸ்.எம்.ஜி, செந்தூரன், போன்ற பல புனை பெயர்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதிக் குவித்தவர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு நாளிதழின் ஆசிரியபீட கௌரவ ஆலோசகராகவும், இவர் பணியாற்றியிருந்தார். ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்கை செய்தே எழுத வேண்டிய நிலை இருந்தது. ஒரு சில விதிவிலக்குகள் இருப்பினும் இதுவே நடைமுறை யதார்த்தம். இதனை எல்லாம் மீறி உண்மையை பறை சாற்றியவர் எஸ்.எம்.ஜி.
ஆறு தசாப்த பத்திரிகையாளர்:
ஆறு தசாப்தங்களாகப் பத்திரிகையாளராக வாழ்ந்தவர் எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்கள் எழுதிய ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் ஈழத்தில் போர்கள வரலாற்றுப் பதிவாகும்.இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் “1987 ஒக்ரோபர் முதல் 1990 பெப்ரவரி வரை இலங்கையிலிருந்த அமைதிப்படை பற்றி வாத விவாதங்கள் நிறைய உண்டு. வரலாற்றின் தவிர்க்க முடியாத குருதிக் குலைவுகளில் ஒன்றாக அது அமைந்து விட்டது.
இன்று ஒரு தசாப்தத்தின் பின் மீளத் திரும்பிப் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தில் (இலங்கையின் இனக் குழும நெருக்கடி) இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வகிபாகம் உண்டு என்பது புறக்கணிக்கப்படக் கூடாத உண்மை என்பது புலனாக்கப்பட்டுள்ளது. இதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்என்கிறார், இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பி.
எம்.எஸ்.கோபாலரத்தினம் வீரகேசரியில் தொடங்கி ஈழநாடு, ஈழ முரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழ நாதம், தினக்கதிர் (மட்டக்களப்பு), சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். இவரின் அரை நூற்றாண்டுப் பணிக்காக 2004 ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனால் தேசிய சின்னம் பொறித்த தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.
அத்துடன் ஶ்ரீ ரங்கன் என்ற பெயரில் சிறுகதைகளில் எழுதியதோடு எஸ்.எம்.ஜி, பாலரத்தினம், ஊர் சுற்றி ஆகிய பெயர்களில் பத்திரிகையில் பணியாற்றியிருக்கிறார். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை, அந்த உயிர் தானா உயிர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு ஆகிய நூல்களையும் எழுதியிருக்கிறார்.
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை:
1987களில் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 62 நாட்கள் சிறையில் இருந்த போது பெற்ற அனுபவம், அங்கு கண்டு கேட்டுப் பெற்றவைகளையே . ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறையில்
எழுதியிருக்கிறேன் என்று நூலாசிரியர் எம்.எஸ்.கோபாலரத்தினம் குறிப்பிடுகிறார்.
1987 அக்டோபர் 10ஆம் அதிகாலை வேளை, தமிழர் பூமியை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம், தமிழர்களின் குரலாக வெளிவந்து கொண்டிருந்த ஊடகங்கள் மீதான தனது எதேச்சாதிகார நடவடிக்கையை மேற்கொண்ட கரி நாளாகும்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987 ஜூலை 29இல் கைச்சானதின் பின்னர், ஈழத்தில் ஊடகத்துறையின் சுதந்திரத்தை முடக்க உருவாக்கும் வகையில், நிதர்சனம், ஈழமுரசு, முரசொலி நிலையங்களின் தகர்ப்பு அழிப்பு நிகழ்ந்தது.
1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைகளான ஈழமுரசு, முரசொலி காரியாலயங்களுக்குள் புகுந்து, பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர்.
இந்திய அமைதிப் படை போர்:
இந்தியப் அமைதிப் படை 1987 அக்டோபர் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகளிற்கெதிராகப் போரைப் பிரகடனம் செய்து தமிழரிற்கெதிரான போரினை நடத்தியது. போரில் இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
அத்துடன் ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் போன்ற ஊடகங்களை தகர்த்தொழித்து தமிழர்கள் மீதான போர் பற்றிய செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்திய அமைதிப் படை.
அமைதி காப்பதற்காகவும் , ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பதற்காக வந்த இந்திய இராணுவம் ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை அமைத்தது. இவ் இந்திய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு இவ் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரியாளரின் பதிப்பாக இது அமையப்பெற்றுள்ளது.
இச்சிறையில் விடுதலைப் புலிகள் என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானவர்ளுடன், ஈழமுரசு, முரசொலி பத்திரிகையின் ஆசிரியரும் கைது செய்யப்பட்டனர் .
இந்திய அமைதிப் படைகளால் சிறைவைக்கப்பட்டிருந்த போது, எழுதிய எஸ்.எம். ஜி இன் சிறைக்குறிப்புகள், தமிழ்நாட்டில் ஜூனியர் விகடன் இதழில் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தொடராக வெளியாகி பெரும் பரபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை தாய் நாடு என்றும், இலங்கையினை சேய் நாடு என்றும் அழைத்து வந்த காலங்கள் இந்தியப்படையினரின் இப்படிப்பட்ட அநாகரியமான செயலினால் , இந்திய அரசின் சுயநல நோக்கத்திற்காக ஈழ மக்களினை பல துன்பியலுக்கு உட்படுத்தப்பட்டதனை எம் தமிழ் இனத்தின் சிந்தனையில் இருந்து ஒரு போதும் அழித்து விட முடியாது என்பதே நிதர்சண உண்மையாகும் என எஸ்.எம்.கோபாலரத்தினம் எழுதிய ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி காப்பதற்காகவும் , ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பதற்காக வந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறிய பின் ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை அமைந்தது. இவ் இந்திய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு இச்சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரியாளரின் பதிவாக ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை எனும் நூல் அமையப்பெற்றுள்ளது.
முக்கியமான வேதனைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால் இலங்கை இராணுவத்தினால் அமைக்கப்பட்ட ‘பூசா’ தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட பலரும் இந்திய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டது, மட்டுமல்லாது பல கஷ்டங்களையும் சந்தித்தனர் என்பதனை நேரில் பார்த்த பல வேதனையினை ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ எனும் நூல் விபரிக்கின்றது.
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களினை பாதுகாப்பதற்காக வந்த இந்திய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் கை மற்றும் கால்களினை கட்டி வைத்து அவர்களை துன்புறுத்தி அதனை பார்த்து சந்தோஷப்பட்டார்கள் இந்திய இராணுவத்தினர் என்பதனை கவலையுடன் எழுதியுள்ளார்.
இவ்வாறு தான் பெரும்பாலான எம் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை இப்படிப்பட்ட சிறைகளுக்குள்ளே முடக்கப்பட்டு இருந்துள்ளது என்பதனை எம்மால் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருப்பதது , மட்டுமல்லாது உதவி செய்வதாக வந்து எம் இனத்துக்கு துரோகம் செய்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.
அந்த ஒரு உயிர் தானா உயிர் :
வீரகேசரி நாளிதழில் தனது பத்திரிகைத்துறைப் பிரவேசத்தை ஏற்படுத்திக்கொண்ட ஆசிரியர் தலையங்கங்கள் அந்த ஒரு உயிர் தானா உயிர் எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களைத் தவிர மற்றவை மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்டவை.
அனைத்தும் சமகால அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவை. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் எந்தக் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் வெளியுலகம் அறியமுடியாதவாறு ஊடக முடக்கம் 1987இல் இந்தியப் படைகளால் தொடர்ந்தது. இது உண்மைகளை அறிவிக்கும் ஊடகங்களின் ஊடகச் சுதந்திரம் அற்ற நிலையை உருவாக்கியது.
அப்பாவித் தமிழ் மக்கள் வாய் பேசா ஊமைகளாக மௌனிகளாக இந்தியப் படைகளின் போர்க் காலத்தில் வாழத் தலைப்பட்டனர். இராணுவ இயந்திரத்தின் கட்டுப் பாட்டில் தமிழ் மக்களின் குரல் எப்படி வெளிவரும்? அவர்களின் அபிலாசைகள் எங்கேயும் எப்பொழுதும் வெளிவராமல் தடுக்கப்பட்டன.
ஆயினும் வியட்நாம் போரின்போது 1974-ஆம் ஆண்டு போர்க்களத்தில், பாஃன் தி கிம் என்ற வியட்நாம் சிறுமி ஒருவள் உடலில் தீக்காயங்களோடு நிர்வாணமாக ஓடி வரும் அந்த ஒரு காட்சி உலகையே உறைய வைத்தது. அந்தப்படம் போருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட பேருதவி செய்தது. அதனை செய்ததும் இதே போன்ற ஊடகங்கள்தான்.
இதற்கு ஒப்பாகவே ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தினை விபரிக்கும் சாட்சியமாக, மிக முக்கியமானதொரு ஆவணமாக உள்ளது.
எஸ்.எம்.கோபாலரத்தினம் தான் கைபிடித்த பேனாவை – எழுதுகோல் கருவியை நேசித்து வரலாற்றை புனைவின்றி உண்மையின் பதிவாக காலத்தின் பதிவேடுகளில் பதிந்தவர். ஊடகர் எஸ்.எம்.கோபாலரத்தினம் எழுத்துக்கள் ஈழப்போர்க்கால களத்தின் சாட்சியங்களாக வரலாற்றில் நிலைபெற்றிருக்கின்றன.
ஐங்கரன் விக்கினேஸ்வரா