இலக்கியச்சோலை
‘இரவல் தாய்நாடு’ படைத்த எழுத்தாளுமை செ.யோகநாதன் : தழிழ்த் தேசியத்தில் பற்றுள்ள முற்போக்கு படைப்பாளி! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
எந்த ஒடுக்குமுறையும், அது சமூக ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன, தேசிய இன ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன, அதை எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் எழுத்தாளனின் பொறுப்பாக உள்ளது.
இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியது ஒரு எழுத்தாளனின் இன்றியமையாக் கடமை என்றே எண்ணுகிறேன். தம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வை அவதானித்துப் பயின்று அவர்களின் சிந்தனையைத் தூண்டிச் செயற்படுத்தும் விதத்திலே எழுத்து அமைய வேண்டும் “என ‘கிட்டி’ நாவலின் முன்னுரையில் செ. யோகநாதன் எழுத்தாளனின் கடமையை வலியுறுத்தியுள்ளார்.
பெருமளவு சிறுகதைகளையும் குறும் புதினங்களையும் எழுதிய செ. யோகநாதன் அக்டோபர் 1, 1941 இல் பிறந்த ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளராவார். புனைவுகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகள், குழந்தை இலக்கியம் என தொன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
ஈழகேசரியின் மாணவர் மலருக்கு கவிதைகள், கட்டுரைகள் எழுதிப் பரிசுகள் பெற்றவர். 1962 இல் சிற்பியின் கலைச்செல்வி இதழில் இவருடைய முதற்கதை வெளியானது. இதனை அடுத்து இவரது “மலர்ந்த நெடு நிலா” என்ற குறும் புதினமும் கலைச்செல்வி வெளியானது.
ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்கியவர்.
சிறுகதை, நாவல், நாடகம், சினிமா என பல்துறையிலும் ஈடுபாடு கொண்டு கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் என பல பத்திரிகைகளிலும் செ. யோகநாதன் எழுதி வந்தவர். ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பல ஆண்டுகள் கலைப் பணியாற்றியவர்.
தழிழ்த்தேசியத்திலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர். ஐந்து தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியாலும் பாராட்டும் பரிசும் பெற்றவர்.
கொழும்புத்துறை பிறப்பிடம்:
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கண்டியில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் இலங்கை நிர்வாகச் சேவையில் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார்.
மார்க்சிய சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். 1980களில் தமிழ்நாடு சென்று அங்கு பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து 1996 இல் இலங்கை திரும்பினார். இறுதியாக கொழும்பில் உள்ள எம். டி. குணசேனா நிறுவனம் தமிழ் நூல்கள் வெளியிடத் தொடங்கிய போது அதற்குப் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார்.
மக்களின் மொழியிலே எழுதப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுத வேண்டும். இலக்கியமென்பது வெறுமனே தனக்கு எதிரிலே நடந்தவற்றைப் பதிவு செய்கிற ஒன்று என்பதை நான் என்றுமே ஒப்புக் கொண்டதில்லை. அதற்கும் மேலாகப் போய் வாசகன் மனதில் ஒரு செய்தியை அல்லது செயலக்கான ஊக்கத்தை அது பதிவு செய்தாக வேண்டும்.
படைப்பாளி தனது மக்களின் வாழ்வையும், உணர்வுகளையும், காலத்தையும் பதிவு செய்கின்றவன். இப்படிப் பதிவு செய்தே தனது எழுத்தை அவர்களின் போராட்டத்துக்குரிய ஆயுதமாக மாற்றிவிடுகிறான். “என ‘கிட்டி’ நாவலின் முன்னுரையில் செ. யோகநாதன் எழுத்தாளனின் கடமையை வலியுறுத்தியுள்ளார்
பேராதனைப் பல்கலை மாணவன்:
பேராதனைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்த 1964 ஆம் ஆண்டில் இவரது பத்துச் சிறு கதைகளைக் கொண்ட யோகநாதன் கதைகள் சிறுகதைத் தொகுதி முதலில் வெளி வந்தது. அஞ்சலி இதழில் வெளிவந்த ஒளி நமக்கு வேண்டும் குறுநாவல் 1974 இல் நூலாக வெளிவந்து இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. பின்னர் பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் தமிழக இதழ்களில் நிறைய சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எழுதினார்.
ஈழத்தமிழுலகு நன்கு தெரிந்த படைப்பாளி செ.யோகநாதன் உண்மையிலேயே தமிழுலகம் நன்கு அறிந்த படைப்பாளி என்றே கருதலாம்.
செ.யோகநாதன் ஆயிரத்து தொழாயிரத்து அறுபதுகளில் ஆற்றல் மிக்க இளம் எழுத்தாளனாக உருவெடுத்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அவரை உருவாக்கிய பெருமை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு உரியது. யோகநாதன் அவர்கள் கைலாசபதி அவர்களோடு மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் பல்கலைக்கழகத்திற்கு வந்த காலத்தில் இருந்தே அங்கு ஒரு புதிய இலக்கியக் குரல் ஒலிக்கத் தொடங்கியது என மூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மத்திய அரசு விருது:
செ. யோகநாதன் இந்திய மத்திய அரசின் பரிசு உட்பட தமிழக அரசின் விருதினை நான்கு தடவைகள் பெற்றுள்ளார். உயர் இலக்கிய விருதான இலக்கியச் சிந்தனை விருதினையும் நான்கு தடவைகள் பெற்றுள்ளார். இலங்கை சாகித்திய விருது நான்கு தடவை கிடைத்துள்ளது. 1994 இல் இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் என்று ஒவ்வொன்றும் 650 பக்கங்கள் கொண்ட வெள்ளிப் பாதசரம், ஒரு கூடைக் கொழுந்து ஆகிய இரண்டு தொகுதிகளை வெளியிட்டார்.
குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.
அத்துடன் பேராதனை பல்கலைக் கழகத்தில் இருந்தோரோடு, பல்கலைக்கழகத்துக்கு வெளியே தெணியான், தெளிவத்தை யோசப், பெனடிக்ட் பாலன் போன்ற எழுத்தாளர்களும் ஈழத்து சிறுகதை இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றனர் என்பது முக்கியமான சங்கதியாகும்.
பல்கலைக்கழகத்தில் இருந்தபோது பல்கலைக் கழக வெளியீடாக வந்த கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் செ.யோகநாதன் அவர்களுடைய கதைகள் வெளிவந்திருக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகம் 1960, 64 களில் வெளிக்கொண்ர்ந்த முக்கிய படைப்பாளிகளில் யோகநாதனும் ஒருவர் என்பதை எவரும் மறுக்கமுடியாது என மூத்தஎழுத்தாளர் செங்கை ஆழியான் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.
இன மொழி உணர்வு மிக்கவர்:
முற்போக்கு இலக்கியம் வாழ்வின் அடிநிலையிலிருக்கிற ஓடுக்கப்பட்ட மக்களையும், அவர்களைவிட சற்றுமேலே, ஆனால் அடிமைத் தனங்களில் உழல்கிற மானிடர்களையும் சித்தரிப்பதும், அவர்களை கைப்பிடித்து முன்னே கூட்டிச் செல்வதுமாகவும் உள்ளதை இலக்காகக் கொண்டவை.
அடிப்படையில் இந்த எழுத்தின் வேர்கள் சேற்றிலும், சகதியிலும், வியர்வையிலும், இரத்தத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான சொல்லிலும், செயலிலும் ஆழப்பதிந்திருக்கின்றன என ‘சுபமங்களா’ இதழில் வெளிவந்த நேர்காணலில் முற்போக்கு இலக்கியம் குறித்து செ.யோகநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.
வீரார்ந்த மூச்சோடு எதிர்க்குரல் கொடுக்கின்றன. இவை இந்த மக்களின் உயிர்த்துடிப்புள்ள மொழியை அப்படியே சொல்கின்றன. இந்த மக்களின் மொழி நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களால் பேசப்பட்டு, வளமைப்படுத்தப்பட்டு, செம்மையுற்று செழுமைப்படுத்தப்பட்டது என ‘சுபமங்களா’ இதழில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் செ.யோகநாதன் அவர்கள் ஆரம்பத்திலேயே இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவராக தமிழரசுக் கட்சியின் பால் கவரப்பட்டவர். தன்னுடைய இரத்தத்தை எடுத்து கூட்டத்திலே தேவராஜா என்பவரைக் கூப்பிட்டுக் கொடுத்து தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்குப் பொட்டு வைத்த தொண்டராகவும் அவர் இருந்திருக்கின்றார். ஆனால் பின்னர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபடத்தொடங்கியதும் ஒரு மார்க்சிய முற்போக்குவாதியாகி தேசியம், மண்வாசனை, யதார்த்தம் ஆகிய கரிசனைகளுக்கு உட்பட்டிருந்தார்.
அவர் மார்க்சிய முற்போக்குவாதியாகக் கடைசிவரை வாழ்ந்திருக்கின்றார்.
1983 இலே தமிழ்த் தேசியவாதம் இவரின் கதைகளில் ஆழவே வேரூன்றி உள்ளதைக் காணலாம். இதில் மூன்று நிலை அவரிடம் இருந்திருக்கின்றது. முதலில் சமஷ்டி நிலையில் இருந்திருக்கின்றார். பிறகு கம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கு எழுத்தாளராக இருந்திருக்கின்றார். பிற்காலத்திலே தமிழ்த் தேசியம் அவரது கதைகளிலே ஆழவே வேரூன்றி இருப்பதைக் காணலாம்.
எவ்வாறாயினும் யோகநாதனின் கதைகள் சமூக வாழ்க்கை விமர்சனங்களாக விளங்குகின்றன. தமிழ்த் தேசிய உணர்வுக் காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு காத்திரமான பங்களிப்பாக அமைவன யோகநாதனின் கதைகளாகும். ஈழத்து வாழ்க்கைப் பிரச்சனைகளின் மையங்களை இனங்கண்டு வார்த்தைகளில் உணர்வோடு பதிய வைத்திருக்கின்றார்.
தமிழகப் பத்திரிகைகளில் படைப்புகளால் அரசோச்சிய காலத்தில் எழுதிய “என்று தணியும்”, “அகதி”, “வீழ்வேனென்று நினைத்தாயோ”, “அன்னையின் குரல்”, “தேடுதல்”, “சரணபாலாவும் சின்னக்குட்டியும்”, “இன்னொரு மனிதன்”, “அவர்களின் மகன்” , “அடிமைகள் இல்லாத இடத்தில்”, “பூ முதிரை” முதலான சிறுகதைகளின் சிருஷ்டிகர்த்தாவாக, தமிழீழப் போராட்ட காலத்தில் இந்திய அமைதி காக்கும் படை நடாத்திய நடவடிக்கைகளையும், இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களையும், போராளிகளின் தியாகங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ் மக்களின் அகதி வாழ்வின் அவலங்களையும் இன ஒடுக்கல் நடவடிக்கைகளையும், சாதிப்பிரச்சனைகளையும் யோகநாதன் சிறுகதைகளாக உள்ளடக்கிக் கொண்டுள்ளார் என எழுத்தாளர் செங்கை ஆழியான் இவரின் ஆற்றலை விபரித்துள்ளார்.
“இரவல் தாய்நாடு“
தமிழகத்திலே இவர் எழுதாத பத்திரிகைகளே கிடையாது. எழுத்தாளர் அமரர் தி.ஜானகிராமன் அவர்கள் நினைவாக கணையாழி பத்திரிகை நடாத்திய குறுநாவல் போட்டியிலே “இரவல் தாய்நாடு” என்ற படைப்பை எழுதினார். உண்மையிலேயே எழுத்துலகில் அற்புதமான ஒரு குறுநாவல் இது.
அதற்குப் பிறகு தான் தமிழகமே விழித்துக் கொண்டு, ஒரு அற்புதமான படைப்பாளி இலங்கையில் இருந்து தமிழகம் வந்து தம்மிடையே இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட காலகட்டம் அதுதான்.
அந்த இரவல் தாய்நாடு என்ற குறுநாவலைப் படித்துவிட்டுத்தான் கலைஞர் கருணாநிதி கூட அவரோடு தொடர்பு கொண்டார். கலைஞர் கருணாநிதி எழுதிய “பாயும் புலி பண்டார வன்னியன்” என்ற கதையைக் கூட யோகநாதன் தான் தேவையான ஆவணங்களை எடுத்துக் கொடுத்தார் என்பது அவர் எழுதிய கடிதத்தில் இருந்து புரியக் கூடியதாக இருக்கின்றது. பாயும் புலி பண்டார வன்னியன் ஓர் அற்புதமான நாவலாக உருவாகுவதற்கு யோகநாதன் மூல காரணமாக இருந்திருக்கின்றார்.
யோகநாதன் எழுதிய “கண்ணீர் விட்டோ வளர்த்தோம்” என்பது மிக முக்கியமான இன்னோரு சிறுகதைத் தொகுதி. அது இந்தியாவிலே வெளிவந்தது. இதற்காக இந்திய இலக்கியச் சிந்தனை, எழுத்தாளர் பேரவை எல்லாம் அவருக்கு பரிசளித்துக் கெளரவித்தன.
ஈழத்துச் சிறுகதைத் துறையிலே செ.யோகநாதனின் பாரிய பங்களிப்பாக விளங்குவது, அவர் தமிழகத்திலே வாழ்ந்த காலத்திலே “இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்” என்ற இரண்டு பெரிய சிறுகதைத் தொகுதிகளை ஈழத்தின் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்டு வெளியிட்டார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இரண்டு பெரிய சிறுகதைத் தொகுதிகளாக, அவர் தமிழகத்தில் இருந்தபோது வெளியிட்டிருக்கின்றார்.
தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென்று நிற்காது, ஈழத்திலே மறந்து கிடந்த எழுத்துலகச் சிற்பிகளை எல்லாம் அதிலே அவர் அறிமுகப்படுத்தி யிருக்கின்றார். “வெள்ளிப்பாதரசம்” ஒரு தொகுதி, “ஒரு கூடைக் கொழுந்து” இன்னொரு தொகுதி இந்த இரண்டு தொகுதிகள் மூலம் ஈழத்தைச் சேர்ந்த குறைந்தது ஐம்பது எழுத்தாளர்களையாவது அவர் தமிழகத்திலே அறிமுகம் செய்திருக்கின்றார். இதன் மூலம் ஒரு சிறந்த ஒரு படைப்பாளியாக அவர் தொழிற்பட்டிருக்கின்றார் என்பதாகவே நான் சொல்லுவேன் என எழுத்தாளர் செங்கை ஆழியான் வழங்கிய ஆய்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கூடைக் கொழுந்து :
இதுவரையில் யோகநாதன், கண்ணீர் விட்டோ வளர்த்தோம், தேடுதல், இத்தனையும் ஒரு கனவாக இருந்தால், அண்மையில் ஒரு நட்சத்திரம், அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், அவளுக்கு நிலவென்று பேர், கனவு மெய்ப்படும், ஒரு சொல், மாசறு பொன்னே, வீழ்வேனென்று நினைத்தாயோ?, விநோதினி, இன்னும் இரண்டு நாட்கள், அன்னை வீடு, கண்ணில் தெரிகின்ற வானம், அசோகவனம், மூன்றாவது பெண், காற்றினில் ஏறி விண்ணையும் சாடலாம் என 18 சிறுகதைத் தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளார்.
இச்சிறுகதைத் தொகுப்புகள் , ஈழத்தில் நடைபெறும் விடுதலைப் போரை மட்டுமின்றி, உலகம் முழுவதிலும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நடந்த, நடைபெறும் – நடைபெறவிருக்கும் ஒடுக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிரான, தேசிய விடுதலைப் போராட்டங்களின் அவசியத்தையும், அனுகூலத்தையும் நமக்கு எடுத்து விளக்குவதாக அமைந்துள்ளது என ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பதிவு செய்துள்ளார்.
தமிழீழப் போராட்டச் சூழலில் இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகளையும், இலங்கை இராணுவத்தினரின் அட்டூழியங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ் மக்களது அகதி வாழ்வின் அவலங்களையும், போராளிகளின் தியாகங்களையும், இனவொடுக்கல் நடவடிக்கைகளையும், சாதிப்பிரச்சனைகளையும், பெண்கள் மீதான கொடுமைகள் மற்றும் சுரண்டலையும், குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது உழைப்புச் சுரண்டல்களையும் செ. யோகநாதன் தமது சிறுகதைகளின் உள்ளடக்கமாகக் கொண்டு படைத்துள்ளார்.
அரசியலென்ற கட்டுமானத்தின் மேலேதான் யாவும் அமைகின்றன. நாறிப் போய், இற்று விழுந்து கொண்டிருக்கின்ற சமூகத்தில் வலிமை வாய்ந்த சிற்றுளியாக இந்தக் கலை இலக்கியமென்ற மறைமுக அரசியல் இயங்க முடியும். அத்தகைய சிற்றுளிகளாக இன்றைய இலக்கியப் படைப்பாளி விளங்குவான். அவன் நாளைய நிர்மாணத்தை செதுக்குவதோடு இன்றைய நிர்வாண கலாச்சாரத்தை அடித்து துவைத்து அழிந்து போக வைப்பான். அத்தகைய படைப்பாளி, தனித்திருந்து வாழும் தவமணியாக இராது மக்கள் கூட்டத்தோடு நின்று அவர்களின் குரலில் கலந்து ஒலிப்பான் என செ. யோகநாதன் தமது சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
மானுட மேன்மை நிலை நிறுத்தியவர் :
நான் சகலவித ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என் எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம், என் சுவாசம் என ‘காற்றின் குழந்தைகள்’ என்ற சிறுவர்க்கான நூலில் தமது இலக்கியக் கொள்கையை, படைப்பாளியின் பணியை செ. யோகநாதன்
எடுத்துரைத்துள்ளார்.
இவரது நூல்களில் சில : யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் (குறுநாவல் தொகுதி)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)
அன்பான சிறுவர்களே(குழந்தைக் கதைகள், 2000)
சகலவித ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்பிய செ. யோகநாதன் 2008, சனவரி 28இல் மாரடைப்பினால் தனது 66-வது அகவையில் காலமானார்.
நண்பர் ஐங்கரன் விக்னேஸ்வரா, ( அமரர் ) செ. யோகநாதன் பற்றி அருமையான கட்டுரையை விரிவாக எழுதியிருக்கிறார்.
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் செ. யோகநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது.
இந்தப்பதிவை எழுதியிருக்கும் எழுத்தாளர் ஐங்கரன் விக்னேஸ்வராவுக்கு எமது வாழ்த்துக்கள்.
முருகபூபதி
நன்றி