இலக்கியச்சோலை
சிட்னியில் வெளியான மாத்தளை சோமுவின் வியக்க வைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள் நூல்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
பழந்தமிழர்க்கு இருந்த தனித்த அறிவுத் திறத்தை வெளிப்படுத்தும் மாத்தளை சோமுவின் 28வது நூலான
‘வியக்க வைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்’ சிட்னியில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
சமகாலத்தில் முன்னணி ஈழத்து எழுத்தாளர் வரிசையில் நோக்கப்படும் மாத்தளை சோமு அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் அமைதியாக தனது எழுத்துப்பணியை சமூக நோக்கோடு செய்துவருபவர்.
அவரது இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நேற்று ‘வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்’ சிட்னியில் வெளியானது.
இந்நூல் வெளியீட்டு விழா நேற்று (02-10-2023)திங்கள் கிழமை சிட்னியில் உள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்தில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். தலைமை உரையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஸ்தாபக பீடாதிபதி, டாக்டர் திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள் ஆற்றினார்.
நியூசிலாந்தில் இருந்து வருகை தந்த முனைவர் இலக்குவனார் சொக்கலிங்கம் (ஆங்கில போதனாசிரியர்,பயிற்சியாளர், நியூசிலாந்து அரச கல்வித் திணைக்களம்) அவர்கள் வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள் பற்றிய சிறப்பு சொற்பொழிவை ஆற்றினார்.
மாத்தளை சோமுவின் வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள் திருச்சி தமிழ்க்குரல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலில் அறம், கடவுள், மன்னன், கல்வி, வணிகம், உலகம், மண்ணியல், உழவியல், நீர் மேலாண்மை, அறிவியல், மருத்துவம்,
மனித உரிமை ஆகியன குறித்து பன்னிரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி. மாத்தளை சோமுவிற்கு எழுத்தே அவரின் மூச்சாக இருக்கிறது. தமிழுக்குள் பல மரபுகள் ஊடாடியிருந்தாலும், தமிழர் சிந்தனை மரபுகளையெல்லாம் உட்செரித்து தனது தனித்துவத்தைத் துலக்கமுறக் காட்டுகிறது என்பதை பழந்தமிழ் இலக்கியத் தரவுகளோடு நிறுவியுள்ளார் நூலாசிரியர் மாத்தளை சோமு.
மாத்தளை சோமு சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதி மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். அத்துடன் மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றிய மாத்தளை சோமுவின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பரிச்சயமானது. இலக்கியத் துறையில் தனக்கென தனியான ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர்.
பழந்தமிழர்க்கு இருந்த தனித்த அறிவுத்திறத்தைத் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் உழைப்பு வியக்கவைப்பதாக உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்புடத்தக்கது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா.