இலக்கியச்சோலை

விடுதலைப் புலிப் போராளிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல: சிங்கள நூல் வெளியீட்டில் தீபச்செல்வன் உரை!

தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல என்று தெரிவித்துள்ள தீபச்செல்வன்தலைவர் பிரபாகரன் அதனை தீர்க்கமாக எடுத்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டத்தில் இடம்பெற்ற பதுங்குகுழியில் பிறந்த குழந்தை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீட்டில் தீபச்செல்வன் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்அவர் அங்கு மேலும் தெரிவித்தவாவது:
இரண்டு இனங்களுக்கு இடையிலான உரசல்:
“இந்த உரையை உங்கள் முகங்களைப் பார்த்து உங்கள் மொழியில் பேசமுடியாத நிலையையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். ஏனென்றால் சிங்கள மொழியென்பது, எங்கள் சிறுபராயத்திலே போரின் மொழியாக, எங்கள்மீதான ஒடுக்குமுறையின் மொழியாகத்தான் எம் செவிகளுக்கு வந்தது என்பது இந்த தீவினுடைய துரதிஷ்டமான உண்மை. சிங்கள மொழியில் கேட்கின்ற சொற்கள் எங்களுக்கு அச்சமூட்டுவதாக எங்கள் உயிர்களை பறிப்பதாக இருந்தது என்பதுதான் நாங்கள் கடந்து வந்த வரலாறு, உண்மையில் அந்த நிலையையிட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். என்னுடைய மொழியில் பேசுகின்ற பொழுது நிச்சமாக உங்கள் செவிகளுக்கு அது புரியாத இந்த நிலை, எனக்கு அதிருப்தி தருவதாக துயரம் தருவதாக இருந்தாலும் இலங்கைத்தீவில் இரண்டு இனங்களுக்கும் இரண்டு மொழிகளுக்கும் இடையில் இருக்கும் உரசலின் உண்மை நிலை இது என்பதுதான் துதிஷ்டமான துயரம் தருகின்ற நிலைமை. இருந்தாலும்கூட இந்த நிலை மாறி வருகின்ற ஒரு வெளிப்படாக இந்த நூலினுடைய வெளிப்பாடு அமைந்திருக்கிறது என்று நான் கருதுகின்றேன்.
என்னுடைய முதல் நாவல் நடுகல். அது சிங்களத்தில் மொழியாக்கப்பட்ட போது அதற்கு சிங்கள சமூகம் மிகப் பெரிய வரவேற்பை அளித்தது. கல்வியியலாளர்கள், படைப்பாளிகள், சாதாரண சிங்கள இளைஞர்கள், மக்கள் என்று மிகப் பெரிய வரவேற்பை எனக்கு அளித்தனர். உண்மையில் மிக ஆச்சரியமாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் எதிரான சில தமிழர்கள்கூட, என்னுடைய நாவல்மீது சேறடிப்புக்களையும் அவதூறுகளையும் வீசிய போதும்கூட என்னுடைய நாவல் குறித்து ஒரு எதிர்ச்சொல்லைக்கூட நான் சிங்கள சமூகத்திடம் இருந்து கேட்கவில்லை. எனவே சிங்கள சமூகத்திடமும் சிங்கள மொழியிலும் ஒரு மாற்றம் உருவாகி வருவதை எங்கள் இனம்மீது எங்கள் மக்கள்மீது ஒரு அணைப்பு ஏற்பட்டு வருவதை நான் உணர்கின்றேன். அந்த அடிப்படையில்தான் இந்த கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வும் அரங்கேறி இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.
சிங்களப் படைப்பாளிகளை கொண்டாடிய புலிகள்:
இந்த வெளியீட்டில் பெருந்திரளான மக்கள் அமர்ந்திருப்பதும்கூட எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகின்ற விடயமாகும். இந்த இடத்தில் சிங்கள மக்களின் இதயங்களைப் பார்த்து அவர்களின் அன்பைப் பார்த்து நான் மிகவும் ஆசுவாசப்படுகிறேன். மிகவும் மகிழச்சி அடைகிறேன். இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். 2001ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் சமாதானச் சூழல் இலங்கையில் ஏற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு இலக்கிய மாநாடு ஒன்றை மானுடத்தின் ஒன்றுகூடல் என்ற தலைப்பில் நடத்தியிருந்தது. அதில் பெருமளவான சிங்கள முற்போக்குப் படைப்பாளிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
உண்மையில் சிங்களப் படைப்பாளிகளை தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பெரியளவில் கொண்டாடினார்கள், மதித்தார்கள் என்ற விடயத்தை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன. ஊடகவியலாளர் பாஷண அபேவர்த்தன போன்ற படைப்பாளிகள் அன்று எங்களுடைய மண்ணில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்துகொண்டு மானுடத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிகழ்வை இந்த இடத்தில் நினைவுகூர்கிறேன். பின்வந்த காலத்தில் எங்களுக்காக குரல் கொடுத்தமைக்காக அவர்கள் இந்த நாட்டில் உயிர் அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்த நிலையையும் நினைவுபடுத்துகிறேன்.
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விதைத்துள்ளோம்:
எங்களுடைய போராளிகள் என்பவர்கள், எங்களுக்குப் பிறிதானவர்களல்ல. என்னுடைய வீட்டில் எனது சகோதரன் ஒரு விடுதலைப் புலிப் போராளி. எங்கள் வீடுகள் தோறும் ஒவ்வொரு போராளிகள் இருந்தார்கள். அவர்கள் எங்களுடைய மக்களின் விடுதலைக்காக எங்களுடைய தேசத்திற்காக தங்களுடைய இளம்வயதில் தங்களுடைய வாழ்க்கை, தங்கள் நலன்கள், கனவுகளைத் துறந்து, போராடச் சென்றார்கள். நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொருவரையும் எங்கள் மண்ணில் விதைத்திருக்கின்றோம். நான் எங்கள் போராளிகளைப் பற்றி பேசுவது தயவு செய்து நீங்கள் எங்கள் போராளிகள் மீது தவறான எண்ணம் கொள்ளக் கூடாது.
ஏனென்றால் எங்கள் போராளிகள் தெளிவாக ஒன்றைச் சொன்னார்கள். நாங்கள் சிங்கள மக்களுக்கு ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் சிங்கள மக்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களல்ல. நாங்கள் சிங்கள மக்களை ஏற்றுக்கொள்ளுகிறோம். சிங்கள மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளுகிறோம். சிங்களப் பேரினவாத அரசுக்குத்தான் நாங்கள் எதிரானவர்கள். அதற்கு எதிரானதுதான் எங்கள் போராட்டம் என்பதை எங்களுடைய போராளிகள், எங்களுடைய தலைவர் பிரபாகரன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறா்ர. அந்த அடிப்படையில்தான் எங்கள் மண்ணில் அந்தப் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
சிங்களப் படைப்பாளிகளின் இதயத்தில் எங்கள் விடுதலை :
இப்போதும் நாங்கள் நிராயுதமாக்கப்பட்டவர்களாக, காவல் இழந்தவர்களாக, அச்சுறுத்தப்பட்டவர்களாக, சுதந்திரமற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த இடத்தில் பெருமளவான சிங்கள படைப்பாளிகள் வருகை தந்து என்னுடைய நூல் தொடர்பாகவும் இலங்கையின் நிலவரம் தொடர்பாகவும் பேசக்கூடிய நிலமை இங்கே இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கில் ஒரு தமிழ் படைப்பாளியின் நூல் வெளியீட்டு விழாவில் இவ்வளவு சிங்களப் படைப்பாளிகள்கூட கலந்துகொண்டு பேசமுடியாத அடக்குமுறை சூழல் அங்கே இருக்கிறது. நாங்கள் இப்போதும் ஒன்றை தெளிவாக நம்புகிறோம். மஞ்சுள வெடிவர்த்தன போன்ற  சிங்கள சமூகத்தின் மனசாட்சிக் கவிஞர் போல பாசண பேவர்த்தன போன்ற சிங்கள சமூகத்தின் மனசாட்சி ஊடகவியலாளர் போன்றவர்கள் மீண்டும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். எங்களுடைய மக்களுக்காக வடக்கு கிழக்கினுடைய அமைதிக்காக வடக்கு கிழக்கின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். உண்மையில் எங்கள் மக்களின் விடுதலையும் எங்கள் நிலத்தின் அமைதியும் சிங்களப் படைப்பாளிகளின் இருதயத்தில்தான் தங்கியிருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
தொடர்ந்தும் இந்த தீவில் இனமேலாதிக்கமும் இன முரண்பாடும் நீடிக்குமாக இருந்தால் இலங்கை மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க நேரிடும். சந்திராயன் என்கின்ற விண்கலத்தை  இந்தியா நிலவுக்கு அனுப்பியிருந்தது. அந்த விண்கலம் நிலவில் கால் பதித்த தருணத்தில் வடக்கில் தமிழர்களின் தொண்மையான பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான போட்டியும் முரண்பாடும் நிகழ்ந்தது. அங்கு தமிழர்கள் ஒரு பொங்கல் வழிபாட்டை செய்ய முடியாத அடக்குமுறை நிகழ்ந்தது. இந்தியா நிலவில் கால் பதிக்கும் சமயத்தில் இலங்கையில் – வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்புக்காக கால் பதிக்கின்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. வரலாறு முழுவதும் தமிழர்களை ஒடுக்குவதிலும் அழிப்பதிலும்தான் இலங்கை அரசு தன்னுடைய பொருளாதாரத்தையும் தன்னுடைய அறிவுப்புலத்தையும் செலவிட்டு வந்துள்ளது. அந்த அறிவுப் புலத்தை  விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் அறிவியல்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் இலங்கை அரசு பயன்படுத்தியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்திராமல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பேராளுமை மிக்க இயக்கத்தின் கோரிக்கையான அரசியல் தீர்வினை முன்வைத்து அந்த இயக்கத்தை அணைத்துச் சென்றிருந்தால் இலங்கை அரசாங்கம் நிலவில் கால் பதித்திருக்க முடியும்.
இலங்கையில் இரண்டு தேசங்கள் மலர்ந்தால்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்த விடயத்தை தீர்க்கமாக ஒருமுறை பேசியிருந்தார். இலங்கைத் தீவில், தமிழர்களின் உரிமை அங்கீகரிக்கப்படுதமாக இருந்தால் இலங்கையில் இரண்டு சம அந்தஸ்துள்ள தேசங்கள் மலருமாக இருந்தால் இலங்கையும் தமிழர் தேசமும் வல்லமை கொண்ட தேசமாக இந்த உலகத்தில் மளிரும் என்று அவர் கூறியிருந்ததும் அந்த அடிப்படையில்தான்.
அன்புக்குரிய நண்பர்களே! போர் எங்கள் கனவுகளைத் திருகியிருந்தது. போர் தொடர்பான ஞாபகங்களை மறக்க முடியாது. அதனுடைய வடுக்களாகத்தான் எங்கள் இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றன. நாங்கள் பெயருக்காகவும் புகழுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் படைப்புக்களை எழுதத் துவங்கவில்லை. எங்கள் இருப்புக்காகவும் அடையாளத்திற்காகவும் விடுதலைக்காகவுமே எங்களுடைய படைப்புக்களை எழுதி வருகின்றோம். அந்த அடிப்படையிலே முதன் முதலிலே மிக நெருக்கமான என்னுடைய கவிதைகள், சிங்கள இதயங்களோடு என்னுடைய கவிதைகள் பேசத் தொடங்கும் இந்தத் தருணம், மிக நெக்ழ்ச்சியும் மிகிழ்வும் ஆறுதலும் தருகிறது. இந்தப் பயணம் தொடர வேண்டும். மேலும் பல ஈழத் தமிழ் படைப்பாளிகளினுடைய படைப்புக்கள் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வே்ணடும். இது தொடர்பாக உரையாடல்கள் நிகழ வேண்டும். இலங்கைத் தீவில் அமைதியும் சமாதானமும் தமிழர்களுக்கான விடியலும் ஏற்பட வேண்டும் என்று வேண்டி விடைபெறுகிறேன்…” என்று கவிஞர் தீபச்செல்வன் மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.