முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் வாசிப்பு அனுபவம்!… ஞா.டிலோசினி.
“ தகவல்கள் நிறைந்த ஆவணம் “
ஞா.டிலோசினி.
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் முருகபூபதி அவர்கள் இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். புலம்பெயர் சூழலில் இருந்து பல்துறை சார்ந்து எழுதி வருகின்றார்.
இவரது நூல்களின் வரிசையில் முப்பதாவது வரவாக சினிமா : பார்த்ததும் கேட்டதும் என்ற கட்டுரை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் முருகபூபதி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதையும் பெற்றுள்ளார்.
அத்துடன் இம்மாதம் ( ஓகஸ்ட் 06 ஆம் திகதி ) பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார்.
முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் நூலை ஜீவநதி தனது 274 ஆவது வெளியீடாக வரவாக்கியுள்ளது.
இந்நூல் சினிமாவைப் பற்றிய 16 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும், பாதி உண்மையாகிப்போன ஓம்புரி, தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும், கவிதையும் திரைப்படப் பாடல்களும், முள்ளும் மலரும் மகேந்திரன், மனோரமா ஆச்சி, இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ், இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா, சிலையாகும் சரித்திரங்கள், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, ஈழத்து கலைஞர்களின் பொன்மணி, சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர் வினைகளும், பேசாப் பொருளைப் பேசத் துணிந்த திரைப்படம் President Supper Star ஆகிய தலைப்புகளில் 16 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
சினிமா தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது அனுபவங்களை இக்கட்டுரைகள் மூலம் முருகபூபதி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நூலின் முதலாவது கட்டுரையாக ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் அமைகின்றது.
தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயக்காந்தன், ஏன் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் ? என்ற வினாவுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கின்றது. இக்கேள்விக்கான பதிலை விமர்சகராகிய தியோடர் பாஸ்கரனின் கருத்துடன் முருகபூபதி ஒப்பிட்டு கூறுகிறார்.
ஏனைய சிறுகதை, நாவல் ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள் பற்றிக் கூறி, அவர்களிலிருந்து ஜெயகாந்தன் வேறுபட்டவர், தனித்தன்மையுடையவர் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுக்களுடன் கட்டுரையில் முன்வைத்து விபரித்துச் செல்கிறார்.
இக்கட்டுரையில் ஜெயகாந்தனின் நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தமை ( உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், கைவிலங்கு குறுநாவல் (காவல் தெய்வம் என்ற பெயரில் வெளிவந்தது ), காலங்கள் மாறும் தொடர்கதை ( சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பெயரில் வெளிவந்தது ), ஊருக்கு நூறு பேர் பற்றியும், அவரது சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள் தொலைக்காட்சி நாடகங்களாக ( நல்லதோர் வீணை – ( பாரிசுக்குப் போ தொடர்கதை), மௌனம் ஒரு பாஷை ( சிறுகதை), சினிமாவுக்குப் போன சித்தாளு ( குறுநாவல் ) ஒளிபரப்பானமை பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஜெயகாந்தனின் சில கதைகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டாலும் அவை வெளிவரவில்லை என்ற தகவலையும் அக்கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் ஆழமாகத் தடம் பதித்த ஜெயகாந்தனின் ஆற்றலை இக்கட்டுரையில் பதிவு செய்யும் ஆசிரியர், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, ஜெயகாந்தனையும் பல தரமான படங்களை எடுத்தவர்களையும் கண்டுகொள்ளவில்லை என்ற தனது மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.
கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும் என்ற கட்டுரை, எம்.ஜி.ஆர் ‘கலைஞர்’ என விளித்தார், ஜெயலலிதா ‘ஏய் கருணாநிதி’ என திட்டினார் என்ற கருணாநிதியின் ஆதங்கத்துடன் தொடங்குகின்றது.
இக்கட்டுரையில் கருணாநிதியின் ‘கலைஞர்’ பட்டம் பற்றி விவாதிக்கப்படுவதோடு, கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெறுகின்றன. கருணாநிதியின் அரசியலைப் பற்றி அக்கப்போர் நடத்தும்
கற்றுக்குட்டிகள் அவரிடம் கற்கவேண்டிய பாடங்கள் அதிகமுண்டு என்ற கருத்தை முன்வைத்து அக்கட்டுரையை நிறைவு செய்கிறார்.
பாதி உண்மையாகிப் போன ஓம்பூரி என்ற கட்டுரை, ஒரு உருதுக் கவிஞரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு வெளியான In Custody என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்த ஓம்புரி பற்றியதாகும்.
எழுத்தாளர் சுஜாதாவும் கவிஞர் அக்கினி புத்திரனும் ஓம்பூரி நடித்த இத்திரைப்படத்தை முருகபூபதிக்கு அறிமுகம் செய்தவர்களாவர். இவர்களின் தூண்டுதலால் ஓம்பூரி நடித்த படங்களைப் பார்த்த கட்டுரையாசிரியர், ஓம்பூரி நடித்த படங்களை மாத்திரம் குறிப்பிடாமல் அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் குறிப்பிட்டுச் செல்கிறார்.
ஓம்பூரி நடித்த திரைப்படக் கதைகளைச் சுருக்கமாக கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இது படக்காட்சிகளை நேரில் பார்த்த மனவேட்டத்தை ஏற்படுத்துகின்றது. இந்திய திரையுலகிற்கு பெரிய இழப்பாக அமையும் ஓம்பூரி, நடித்த In Custody, City of joy படங்களை நேரம் கிடைக்கும் போது பாருங்கள் என நயமாக வாசகருக்கு ஆசிரியர் கூறிச் செல்கிறார்.
இத்தொகுப்பில் இடம்பெறும் நீண்ட கட்டுரையாக தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும் அமைகின்றது. இக்கட்டுரை இதிகாச, காவிய இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள் ( சிறுகதை, நாவல், தொடர்கதை ) வரை இலக்கியப் படைப்புக்கள் – திரைப்படங்களாக, குறும்படங்களாக, நாடகங்களாக உருவானமை பற்றிப் பேசுகின்றது.
வால்மீகியின் இராமாயணம் கம்பரால் இலக்கியச் சுவையூட்டப்பட்டு, கம்பராமாயணம் ஆகியது. தற்காலத்தில் இராமாயணம் தொலைக்காட்சி சீரியலாக வெளிவந்துள்ளமை பற்றிக் கூறுகிறார். வியாசரின் மகாபாரதத்தில் இருந்து ‘ வீர அபிமன்யு’ , ‘ கர்ணன் ’ முதலான சினிமாக்கள் தோன்றியமை பற்றிக் கூறுகின்றார்.
இலக்கியங்கள் செய்யுளாக, கவிதையாக, உரைநடையாக திரையில் வசனமாகியதை இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகின்றார்.
திரைப்படங்களுக்கான கதைகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்தே எடுக்கப்படுகின்றன என்ற கருத்தை இக்கட்டுரை வலியுறுத்துகின்றது. இந்திய சினிமா, மேற்கத்தைய சினிமா, ஈழத்து சினிமா என்பன ஏற்கனவே இலக்கியமாக வாசிக்கப்பட்டவையே என்ற கருத்தைக் கூறி இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் இடையிலான தொடர்பு எடுத்துக்காட்டப்படுகின்றது.
இக்கட்டுரையில் இலக்கியப் படைப்புக்கள் திரைப்படங்களாக உருவானமைக்குப் பல எடுத்துக்காட்டுக்கள் கூறப்படுகின்றன. அந்த வரிசையில் ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியங்களும் திரைப்படங்களானமை பற்றியும் கூறப்பட்டுள்ளது. செங்கை ஆழியானின் வாடைக்காற்று , காவலூர் இராசதுரையின் பொன்மணி ஆகிய நாவல்கள் பற்றியும், பாலுமகேந்திராவின் கதைநேரம் பற்றியும் விலங்கு மருத்துவர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலை திரைப்படமாக்க முயன்ற முள்ளும் மலரும் மகேந்திரன் பற்றியும் இக்கட்டுரை பேசுகின்றது.
இக்கட்டுரையின் இடையே இலக்கியப் படைப்பாளிகளாகவும் சினிமாத்துறையில் ஈடுபட்டவர்களின் வரிசையில் ஜெயகாந்தன் மற்றும் தங்கர்பச்சான் பற்றியும் சொல்லப்படுகிறது.
இலக்கியப் படைப்புக்களைத் திரைப்படங்களாக்கும் போது இந்திய சினிமாவில் பெரும்பாலும் மூலக் கதையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் சிங்கள நாவல்களை, மூலக்கதை சிதையாமல் திரைப்படமாக்கி சர்வதேச விருதுகளைப் பெற்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை தமிழகத் திரையுலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தும் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறுகதை, நாவலாசிரியர்களின் கதைகளைத் திரைப்படமாக்கும்போது ஏற்பட்ட சில மாறுதல்களுக்கு அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், மனக்கசப்புக்களையும் வெளிப்படுத்தும் இக்கட்டுரை, இலக்கியத்தின் படைப்பு மொழியும் சினிமாவின் திரை மொழியும் இணைவதில்தான் கதையொன்றை படமாக்குவதன் வெற்றி தங்கியிருக்கின்றது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
கவிதையும் திரைப்படப் பாடல்களும் என்ற கட்டுரை, இருபதாம் நூற்றாண்டு முதல் தமிழ்த் திரைப்படங்களில் கவிதை எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதைப் பற்றிக் கூறுகின்றது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, வைரமுத்து, அப்துல்ரகுமான் உட்பட பல கவிஞர்களின் கவிதைகள் திரைப்படப் பாடல்களாக வெளிவந்தமை பற்றி எடுத்துக்காட்டப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களும் பாரதியாரின் கவிதைகளாகும் என்பதை கட்டுரையாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இக்கட்டுரையில், பாடல்களின் பெயர்களில் திரைப்படங்களின் பெயர்கள் வெளிவந்தமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோசப்.ஜெ.அலெக்சாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட இயக்குநர் மகேந்திரனின் சினிமா உலகம் பற்றியதாக முள்ளும் மலரும் மகேந்திரன் என்ற கட்டுரை அமைகிறது.
இவர் முள்ளும் மலரும் மகேந்திரன் என்றே அழைக்கப்படுகிறார். இக்கட்டுரையில் மகேந்திரன் எழுதிய சுயசரிதை நூலான சினிமாவும் நானும் என்ற நூல் பற்றிய கருத்துக்கள் இடம்பெறுகின்றன. நாவல்களுக்கு மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவதோடு, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதினாலும் அது படமாகவில்லை என்ற தகவலும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் வன்னியில் திரைப்படக் கலைஞர்களுக்கு பயிற்றுவித்து, ஈழத்து எழுத்தாளர்களின் கதைகளையும் குறும்படங்களாக்கி உதவிய மகேந்திரன், தனது 79 ஆவது வயதில் 2019ஆம் ஆண்டு மறைந்தார் என்ற செய்தியைக் கூறி அக்கட்டுரை நிறைவடைகிறது.
மனோரமா ஆச்சி என்ற கட்டுரை நமது மனங்களில் நீங்காத இடம்பிடித்த சகலகலா வல்லமை படைத்த மனோரமாவின் சினிமா வாழ்வையும் அவரது நிஜ வாழ்வின் குறுகிய பக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பள்ளத்தூரில் இருந்து நாடக மேடைக்கு வந்தமையால் இவர் பள்ளத்தூர் பாப்பா என அழைக்கப்பட்டார் என்ற நாம் அறியாத தகவலையும் கூறுகின்றது. இக்கட்டுரையின் இறுதியில் மனோரமா பற்றிய ஆவணப் படங்கள் எதிர்காலத்தில் தயாராக வேண்டும் என்ற தனது அவாவையும் கட்டுரையாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் நாகேஷைப் பற்றியது இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ் என்ற கட்டுரை. திரையுலகில் நாகேஷ், எதிர்நோக்கிய இன்னல்களைப் பற்றியும் கூறும் இக்கட்டுரை, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்த நாகேஷின் ஆற்றலைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.
ஒரு திரைப்படத்தில் அவர் பிரேதமாக நடித்த காட்சிகளைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்த இரசிகர்கள், 2009 ஆம் ஆண்டு நாகேஷ் உண்மையாகவே பிரேதமாகியபோது யாரும் சிரிக்கவில்லை என்ற சோகவுணர்வையும் எடுத்துக்காட்டியுள்ளது.
சத்யஜித்ரே, பாலுமகேந்திராவை வாழ்த்திய கூற்றை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கின்றது இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா என்ற கட்டுரை. இக்கட்டுரை இலங்கையில் பிறந்து, வளர்ந்து இந்திய சினிமாத் துறையில் அங்கீகாரம் பெற்றவரான பாலுமகேந்திராவின் சினிமாவுலகம் பற்றியதாகும்.
இக்கட்டுரையில் இடம்பெறும், “ ஒரு இலங்கையர் இந்தியா சென்று முக்கியமான ஒரு துறையில் ஈடுபட்டுழைத்து அங்கீகாரம் பெறுவது என்பது முயற் கொம்புதான்” என்ற ஆசிரியரின் கூற்று முக்கியமானது.
சிலையாகும் சரித்திரங்கள் என்ற கட்டுரை வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றிய வரலாறுகளை கூறுகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால், நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பில் அவரைக் கண்டுகொள்கின்றோம். கட்டபொம்மனாக நடித்திருக்கும் சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலை கட்டுரையாசிரியர் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
கட்டபொம்மன் படத்தில் வரும் பின்வரும் வசனத்தை ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். இது இக்கட்டுரைக்கு ஒரு அழகியலைத் தருகின்றது.
“வரி – வட்டி – கிஸ்தி – வானம் பொழிகிறது. பூமி விளைகிறது.
எங்களோடு வயலுக்கு வந்தாயா? உழவருக்கு கஞ்சி, களையம்
சுமந்தாயா?
அல்லது எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? மாமனா? மச்சானா?”
இவ்வரிகள் அங்கதச் சுவையுடன் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படுவதை அவதானிக்க முடியும். 1799 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி பிரித்தானிய மேஜர் பானர் மேனின் உத்தரவுக்கு அமைய தனது கழுத்தில் தானே தூக்குக் கயிற்றை மாட்டி, உயிர் துறந்த வீரனுக்கு, சிவாஜிகணேசன், அவன் தூக்கிலிடப்பட்ட அந்த நிலத்தை அரசிடம் வாங்கி வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்பட தோற்றத்தில் ஒரு சிலையைத் திறந்து வைத்தார் என்ற தகவலையும் கூறும் இக்கட்டுரை, அச்சிலை தொடர்பாக எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் விமர்சனத்தையும் பதிவுசெய்துள்ளது.
இந்திய திரையுலகில் சத்யஜித்ரே போன்று சிங்கள திரையுலகில் விளங்கிய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது இயக்குநர் கலாநிநி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற கட்டுரை. இலங்கையில் சிறந்த சிங்களப் படைப்புக்களை திரையில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லெஸ்டர் ஜேம்ஸ்
பீரிஸ். இக்கட்டுரையில் இலங்கை அரசு 2010 இல் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – சுமித்திரா பீரிஸ் ( மனைவி ) மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி வர்த்தமானியில் பிரகடனப்படுத்திய குறிப்பையும் காணலாம்.
இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ என்ற கட்டுரை, சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய இயக்குநர் தர்மசேன பத்திராஜவின் திரைப்படங்களைப் பற்றிப் பேசுகின்றது.
ஈழத்து கலைஞர்களின் பொன்மணி என்ற கட்டுரை காவலூர் இராசதுரை தயாரித்து, 1976 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்மணி திரைப்படத்தைப் பற்றிய தகவல்களை கூறுகின்றது.
இக்கட்டுரை பொன்மணி திரைப்படத்தின் சாராம்சம் போல் அமைகின்றது. அத்திரைப்படத்தில் நடித்தவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் என்ற கட்டுரை திரைப்படங்களுக்கான கதை திருடல்கள், தழுவல்கள், சாயல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களைப் பற்றிப் பேசுகின்றது.
இக்கட்டுரையில் அயலி திரைப்படத்தின் கதை தனது தில்லையாற்றங்கரை நாவலின் கதை என குற்றம் சாட்டும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் குரலை முன்வைத்து, அயலி திரைப்படம் மற்றும் தில்லையாற்றங்கரை நாவல் பற்றி விமர்சன நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் இக்கட்டுரையில் நொயல் நடேசனின் மலேசியன் ஏர்லைன் 370 என்ற சிறுகதை போன்றே, மலேசியா To அம்னீசியா என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் வெளிவந்துள்ளது எனவும் மாதவன் நடித்த நளதமயந்தி திரைப்படத்தின் கதையானது, அவசரம் எனக்கொரு மனைவி வேண்டும் என்ற தனது சிறுகதைதான் எனக் குற்றம் சாட்டிய எழுத்தாளர் அருண்.விஜயராணியின் ஆதங்கத்திற்கு, அதன் சாயல் இருக்கிறதே தவிர அது திருட்டோ, தழுவலோ இல்லை என முருகபூபதி குறிப்பிடுகின்றார்.
இந்நூலில் இறுதியாக இடம்பெறும் கட்டுரை பேசாப்பொருளை பேசத் துணிந்த President Supper Star என்ற திரைப்படம்.
சமூகப் பிரக்ஞையுடன் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளிவந்து, சிங்கள மக்கள் மத்தியில் பரவலடைந்த இத் திரைப்படம் பற்றிய குறிப்புகளை தருவதாக இக்கட்டுரை அமைகின்றது. அக்கட்டுரையில் குறித்த திரைப்படம் பற்றிச்
சொல்லும்போது, “ மக்களின் குறைகளைக் கேட்கச் செல்லும் அரசியல் வாதிகள், ஊடக விளம்பரத்திற்காக ஏழைக் குழந்தைகளை தூக்கி கொஞ்சுவதும், பின்னர் கைகளை உதவியாளரின் ஆடையில் துடைத்துக் கொள்வதையும் எள்ளி நகையாடுகிறது ” என்கிறார்.
ஆகவே முருகபூபதியின் இந்நூலில் அமைந்த கட்டுரைகள் நாம் பார்த்த, அறிந்த திரைப்படங்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பின்னணியில் எமக்குத் தெரியாத பல்வேறுபட்ட தகவல்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இக்கட்டுரைகளில் நாம் அறிய வேண்டிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. எளிமையாக, ஆதாரபூர்வமாக தகவல்களை முருகபூபதி கூறிச்செல்வதை அவதானிக்கலாம்.
இக்கட்டுரைகளின் ஊடாக சினிமா தொடர்பான பல்வேறுபட்ட நூல்கள் பற்றிய அறிவு, நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்துப் பெற்ற அனுபவம், எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்களை வாசித்துப் பெற்ற அனுபவம், ஏனையோரிடம் பெற்ற கருத்தனுபவம் என பல்வேறுபட்ட திறமைகள் ஆசிரியரிடம் வெளிப்படுவதைக் காணலாம்.
இக்கட்டுரைகள் சினிமாத் தகவல்களை மட்டுமன்றி வரலாற்று ரீதியாகவும் பல தகவல்களைப் பதிவு செய்துள்ளன. அந்த வகையில் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமை, நாம் அறியாத கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் பற்றிய வரலாறுகள் குறிப்பிடத்தக்கன.
இந்நூலில் பெரும்பாலும் திரையுலகில் பயணித்து மரணித்தவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகமாகவுள்ளன. அண்மைக்கால இயக்குநர்கள், நடிகர்கள் பற்றிய கட்டுரைகளும் நூலில் இடம்பிடித்திருந்தால் இன்றைய இளம் சமூகத்தினர் இந்நூலை ஆர்வத்தோடு வாசித்திருப்பார்கள். எனினும் நூலில் உள்ள தகவல்கள் யாவும் பெறுமதி வாய்ந்தவையாகும்.
—0—