விவாகரத்தைக் கொண்டாடலாமா? …. ஏலையா க.முருகதாசன்.
கலைஞர் தொலைக்காட்சி வா தமிழா வா என்ற விவாத அரங்கு நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது.இந்நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.அங்கம் மூன்றில் விவாகரத்தை கொண்டாடலாமா என்ற பொருளுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாலினி என்ற பெண் தனது கணவரை விவாகரத்துச் செய்ததை கேக் வெட்டிக் கொண்டாடியதுடன் சிவப்பு உடை அணிந்து தனது கணவரின் படத்தைக் கிழித்தெறிந்து காலில் போட்டு மிதித்து தனது வெறுப்பை ஆத்திரத்தை தீர்;த்துக் கொண்டாடியிருந்தா.
அதனை அவர் காணொளியாகவும் எடுத்து வெளியிட்டிருந்தார்.அவரையும் இவ்விவாத அரங்கிற்கு அழைத்து அவரின் கொண்டாட்ட உள்ளுணர்வையும் தொகுப்பாளர் கேட்டறிந்தார்.
இவ்விவாத நிகழ்ச்சியில் விவாகரத்துச் செய்து கொண்ட பெண்களும்,விவாகரத்துச் செய்வதில் தப்பில்லை ஆனால் அதைக் கொண்டாட்டமாகக் கொண்டாடக்கூடாது என்று கணவருடன் வாழும் பெண்களும் பங்குபற்றி தமது கருத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
இது தொடர்பாக கனடாவிலிருக்கும் திருமதி.பாமா இதயகுமார் அவர்களிடம் அவரின் அபிப்பராயத்தைக் கேட்ட போது அவர் எழுதி அனுப்பிய சிறுகட்டுரைதான் அடுத்து வருவதாகும்.
திருமதி.பாமா இதயகுமார் அவர்கள் ஏற்கனவே எமது கவிதைத் தொடரில் பங்குபற்றியவராவார்.அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
பிரச்சனை இல்லாத மண வாழ்க்கை இல்லை, அந்த மண வாழ்க்கையை சமாளித்து கொண்டு வெற்றியாக கரை சேர்பவர் ஒரு சாரார் . அந்த பிரச்சனையை போராடி கரை சேர்பவர் மறுசாரார். அந்த பிடிக்காத வாழ்வை , ஆளை விடுங்கள் போதும் என்று அந்த பந்தத்தில் இருந்து வெளி வந்து சுதந்திரமாக வாழ்வோர் என்று பல விதமான சிக்கல்கள் நிரப்பியது தான் இந்த திருமண பந்தம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமை உண்டு தங்கள் வாழ்வை எப்படி வாழ்வது என்று முடிவு எடுக்கும் உரிமை. இதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அது பெற்று வளர்த்து வாழ்வை அமைத்து கொடுத்த பெற்றோர் ஆகட்டும், தங்கள் இஷ்டப்படி காதலித்து திருமணம் செய்தோர் ஆகட்டும். வாழ்வு அவர்களுக்கு உரியது. முடிவும் அவர்களுக்கே உரியது. அதனால் ஏற்படும் மகிழ்ச்சியோ, துன்பமோ அவர்களுக்கானது. இதை இப்படி செய் அப்படி செய் என்று சொல்லுவதற்கு யாருக்குமே அருகதையோ, தகுதியோ இல்லை. அது அவர்களுக்கானது.
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கு சமூக பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது. அது இந்த சமூகத்தை பாதிக்காத வரை மற்றவர்கள் மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால் அதே சமூகத்தின் அங்கத்தவர்களான அவர்கள் இந்த சமூகத்தை சீர்குலைக்கும் , இளம் சமுதாயத்தை திசை திருப்பும் அநாகரிமான, பண்பற்ற செயல்களை செய்வதால் இது இனி வரும் சந்ததியினரை பாதிக்குமா என்றால் அதை தவறு என்று சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
இப்போது புரிந்து இருக்கும் நான் எதை பற்றி குறிப்பிடுகிறேன் என்று, சமீபத்தில் தனக்கு பிடிக்காத மண வாழ்வில் இருந்து விவாகரத்து பெற்று கேக் வெட்டி கொண்டாடிய பெண்மணியின் காணொளி பற்றியது . பிடிக்காத மண வாழ்வில் இருந்து வெளியேறுவது இன்று நேற்றல்ல பண்டைய காலம் தொட்டு வருகிறது. புதுமையாக ஊடகங்களுக்கு விருந்தாக இப்படி , அதாவது சம்பந்த பட்டவர் புகைப்படத்தை கிழித்து எறிந்து அட்டகாசமாக சோசியல் மீடியாவில் , போடுவதால் ஒரு தவறான செயலை எல்லோரும் பார்த்து, இனி வரும் சந்ததியினர் இன்னும் கொஞ்சம் மோசமான எல்லைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.
பிடிக்காத வாழ்வை பிரித்து செல்லும் போது கூட நட்போடு பிரிந்து செல்லும் பக்குவம் தான் இல்லை ,முடியவில்லை என்றாலும், கண்ணியதோடு, ஆணோ , பெண்ணோ சராசரி , பரஸ்பர மனிதாபிமானத்தோடு பிரிந்து செல்வதன் மூலம் இரு பாலருக்கும் ஒரு மரியாதையாக இருப்பது மட்டுமல்ல. நமக்கு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் இந்த பந்தம் அவசியம் இல்லாமல் போகலாம், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தாயும் வேண்டும் தந்தையும் வேண்டும். அவர்கள் இப்படி பெற்றோர் மிக சின்ன தனமாக நடந்து கொண்டால் பெற்றோரிடம் இருந்து என்னத்தை கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பற்ற போக்கிரி தனத்தையா ?
உங்களுக்கு பிடிக்காத வாழ்வில் இருந்து விலக எல்லா உரிமை இருப்பது எவ்வளவு சரியோ. அதே போல இந்த சமூகத்தை கெடுக்காமல் இருக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது ஒவ்வொருவருக்கும்.
அன்புடன்
திருமதி.பாமா இதயகுமார்.
Bama Ithayakumar