இலக்கியச்சோலை
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்….. 02 …. T .சௌந்தர்.
1950 களிலும் ஹிந்திப் பாணியில் பாடும் முறையைக் கொண்டிருந்தவர்களாக ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா போன்ற பாடகர்களைக் காண்கிறோம்.மெல்லிசைப்பாங்கான காதல் மெட்டுக்களை பாடுவதென்றால் , அதற்குரியவர்கள் இவர்களே [ ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா ] என்று சொல்லுமளவுக்குப் பாடல்கள் வெளிவந்தன எனபதற்கு உதாரணமாக அமைந்த சில பாடல்களை இங்கே உதாரணமாக கூறலாம்.
01 ஆடும் ஊஞ்சலைப் போலெ – என் தங்கை [1952 ] -டி.ஏ.மோதி + பி.லீலா – இசை : சி.என்.பாண்டுரங்கன்
02 மைவிழி மேல் பாய்ந்தே நீ – நல்ல பிள்ளை [1953 ] – ஏ.எம்.ராஜா பி.லீலா – இசை : வேதா
03 மணி அடித்ததினால் -நல்ல பிள்ளை [1953 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை : வேதா
04 சிங்கார பைங்கிளியே பேசு – மனோகரா [1954 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
05 நிலாவில் உல்லாசமாய் பாடலாம் – மனோகரா [1954 ] -டி.ஏ.மோதி + டி.வி.ரத்தினம் – இசை : இசை :எஸ்.வி.வெங்கடராமன்
06 ஓ..ஓ..தேவதாஸ் – தேவதாஸ் [1952 ] – கண்டசாலா + கே.ராணி – இசை :சி.ஆர்.சுப்பராமன்
07 வான வீதியிலே பறந்திடுவோம் – நால்வர் [1953 ] – திருச்சி லோகநாதன் + பி.லீலாஎம்.எல்.வசந்தகுமாரி – இசை :எஸ்.வி.வெங்கடராமன்.
குறிப்பாக முகமத் ராபி [ Mohammad Rafi ] பாடும் பாணி இன்றுவரையும் அதிக செல்வாக்கு செலுத்துகிறது என்பதை நாம் காண்கிறோம். 1950 ஆண்டு புகழின் உச்சியிலிருந்து திலீப்குமார்,அசோக்குமார் போன்றோருக்கு அதிகமாகப் பாடும் வாய்ப்பை நௌசாத், சி.ராமச்சந்திரா போன்ற இசையமைப்பாளர்கள் முகமத் ராபிக்கு வழங்கினார்கள்.
முகம்மது ரபி யின் பாடும் பாணியை பின்பற்றி உருவான பாடகர்களான ஜேசுதாஸ் , ஜெயசந்திரன், பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் நம் கவனத்திற்குரிய அடுத்த சந்ததிப் பாடகர்கள் என்பது அவரது பாடும் பாணியின் பாதிப்பாகும்.
S.P.பாலசுப்ரமணியம் ராபியை பின்றினார் என்று கூறினாலும் அவர் கண்டசாலாவைப் பிரதி பண்ணியவர் என்பதே உண்மை.
1940 களின் நடுப்பகுதியில் ஹிந்தியில் முன்னணியிலிருந்த சம்சாட் பேகம் ,நூர்ஜகான், சுரையா போன்ற பல பாடகிகள் பின்தள்ளப்பட்டு அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த இசையமைப்பாளர்களான அணில் பிஸ்வாஸ், ஹெம்சந்த் பிரகாஷ் ,ஷகீல் , மாஸ்டர் கைடெர் போன்றவர்களால் வாய்ப்பு வழங்கப்பட்டு முன்னணிக்கு கொண்டுவரப்பட்டவர் லதா மங்கேஷ்கர்.
மெல்லிசைமன்னர்கள் தமக்கான ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டதும் தங்களுக்குத் தோதான ,அல்லது தாம் விரும்பிய ஒரு சில பாடகர்களை முன்னிலைப்படுத்தினர்.
அவர்களில் முதன்மையானவர்களாக டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா , பி.பி.ஸ்ரீனிவாஸ் , எல்.ஆர்.ஈஸ்வரி , கே.ஜமுனாராணி போன்றோரை நாம் குறிப்பிடலாம்.
பொதுவாக குறித்த சில தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் தங்களுக்கான தொழில் நுட்பக்கலைஞர்களை ஒரு குழுவாக வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொரு கலைஞர்களும் ஒருவரின் இயல்புகளை இலகுவாகப் புரிந்து கொள்ளவும் வழி அமைத்துக் கொடுப்பதென்பதால் குழுக் குழுவாக இயங்குவதை நாம் இன்றும் காண்கிறோம். அதன் மூலம் குழுமனப்பான்மை அன்றும் நிலவியதை காண்கிறோம்.
அந்தவகையில் மெல்லிசைமன்னர்கள் தங்களுக்கு பிடித்தமான சிலகலைஞர்களை பயன்படுத்தினார்கள். சிலரை பயன்படுத்தாமலே விட்டு சென்றனர். அவர்களால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட கே.ஜமுனாராணியையும் ,ஏற்கனவே புகழ் பெற்றிருந்த ஏ.எம்.ராஜாவையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அக்காலத்தில் ” முதலாளிகள் ” என்ற அந்தஸ்த்திலிருந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடிகர்களையே மிரட்டி வைக்கக்கூடியவர்களாக இருந்தனர்.அவர்கள் முன் கைகட்டி வாய் பொத்தி நின்ற கலைஞர்கள் ஏராளம்.பின்னர் நடிகர்கள் முன்னணிக்கு வந்தாலும் “முதலாளி” களை கனம் பண்ணியே வந்தனர்.இந்த நிலையிலே மெல்லிசைமன்னர்கள் , தாம் நினைத்ததை சாதிக்கும் ஒரு நிலைக்கு வந்ததும் தமக்குப் பிடித்த பாடகர்களை கவிஞர்களை முன்னணிக்கு கொண்டுவந்ததையும் , பிடிக்காதவர்களை புறம் தள்ளுவதையும் காண்கிறோம்.
“அமுதும் தேனும் எதற்கு ” என்ற புகழ் பெற்ற பாடலை இயற்றிய புகழபெற்ற கவிஞர் சுரதாவிடம் ” நீங்கள் ஏன் அதிகமான பாடல்கள் எழுதவில்லை ” என புலபெயர் தொலைக்காட்சி பேட்டி நிகழ்சசி ஒன்றின் கேள்விக்கு ” நான் அதற்கு பின் ஒரு சில பாடல்கள் தான் எழுதியுள்ளேன். ” விண்ணுக்கு மேலாடை “நான் எழுதிய பாடல் தான். இசையமைப்பாளர்கள் யாராவது கூப்பிட்டால் தானே எழுத முடியும் !?
இளம்வயதில் ஆர்மோனியம் வாசித்த விஸ்வநாதனை நான் தான் எம்.எஸ்.ஞானமணியிடம் சேர்த்து விட்டேன் ; அவர் கூப்பிட்டாரா ..? என்று வருத்தப்பட்டார்.
எத்தனையோ ஆற்றல்மிக்க பாடலாசிரியர்கள் மறக்கடிக்கப்பட்டு விரல்விட்டு எண்ணக் பாடலாசிரியர்களே குழுவாக இயங்கினர்.
1950 களில் புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நடிகர்களுக்கு இன்னார் பாடினால் நன்றக இருக்கும் என்ற ஒருவிதமான போலிக் தோரணை உருவாக்கப்பட்டது.
சிவாஜி நடித்த முதல்படமான பராசக்தி அமோகமான வெற்றி பெற்றது.
அந்தப்படத்தில் அவருக்கான பின்னணிப்பாடல்களைப் பாடியவர் அக்காலத்தில் பெரும் புகழபெற்றிருந்த இசைத்சித்தர் என்று போற்றப்பட்ட சி.எஸ்.ஜெயராமன் ஆவர்.படத்தின் வெற்றிக்கு வசனமும் பாடல்களும் பெரும் பங்காற்றின.சிவாஜிக்கு சிதம்பரம் ஜெயராமனின் குரல் தான் பொருத்தம் என்ற எண்ணம் சிவாஜிக்கும் இருந்ததாகவே தெரிகிறது.
இருப்பினும் பராசக்தியைத் தொடர்ந்து சிவாஜி நடித்த அன்பு [ 1953 ] , கண்கள் [ 1953 ] ,மனிதனும் மிருகமும் [ 1953 ] , இல்லற ஜோதி [ 1954 ] ,கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி [ 1954 ] , எதிர் பாராதது [ 1954 ] , காவேரி [ 1954 ] ,மங்கையர் திலகம் [ 1954] படங்களில் சிவாஜிக்கு பெரும்பாலான காதல் பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா மற்றும் டி.ஏ.மோதி மற்றும் எம்.சத்யன் போன்றோர் பாடினார்கள்.
சிவாஜிக்கு ஏ.எம்.ராஜா பாடிய சில பாடல்கள் :
01 எண்ண எண்ண இன்பமே – அன்பு [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : டி.ஆர்.பாப்பா
02 ஆடவர் நாட்டினிலே – அன்பு [1953 ] – ஏ.எம்.ராஜா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : டி.ஆர்.பாப்பா
03 ஒன்றும் புரியவில்லை தம்பி – அன்பு [1953 ] – ஏ.எம்.ராஜா – இசை : டி.ஆர்.பாப்பா
04 கன்னியரின் வெள்ளை மனம் போல் – திருப்பிப்பார் [1953 ] – ஏ.எம்.ராஜா + சுவர்ணா – இசை : ஜி.ராமநாதன்
05 சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை :சி.என்.பாண்டுரங்கன்
06 தேன் உண்ணும் வண்டு – அமரதீபம் [1955 ] – ஏ.எம்.ராஜா + சுசீலா – இசை : டி.சலபதிராவ்
07 நீ வரவில்லையெனில் ஆதரவேது – மங்கையர் திலகம் [1955 ] – எம்.சத்தியன் – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
இதே காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி [1952] குமாரி [1953] நாம் [1953] , ஜெனோவா [1953] குலேபகாவலி [1953] போன்ற படங்களின் முக்கியமான பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
1954 இல் எம்.ஜி.ஆர்,சிவாஜி இணைந்து நடித்த படமான கூண்டுக்கிளி [1954] படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் ” கொஞ்சும் கிளியான பெண்ணை ” என்ற பாடலை டி.எம் சௌந்தரராஜன் முதன் முறையாக சிவாஜிக்காகவும் , மலைக்கள்ளன் [1953] படத்தில் ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலை எம்.ஜி.ஆருக்குக்காகவும் பாடினார்.ஆயினும் அக்கால்க் காதல் பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
01 மயக்கும் மாலை பொழுதே நீ போ – குலேபகாவலி [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : கே.வி.மகாதேவன்
02 இருளிலே நிலவொளி போல் – குமாரி [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : கே.வி.மகாதேவன்
03 கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ – ஜெனோவா [1953 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
04 கண் மூடும் வேளையிலும் – மகாதேவி [1957 ] – ஏ.எம்.ராஜா + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்காத இக்காலத்தில் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற ஒரு நிலை இல்லாமல் எல்லாப் பாடகர்களும் எல்லா நடிகர்களுக்கும் பாடினார்கள்.தூக்குத் தூக்கி படத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற திருச்சி லோகநாதன் பாடல்கள் குறித்த ஊதிய பிரச்சனையால் விலகிய நிலையில் ,குறைந்த விலையில் பாட டி.எம்.சௌந்தர்ராஜனை சிபாரிசு செய்தததும் ,ஏற்கனவே ஜி.ராமநாதனின் ஆதரவு பெற்ற டி.எம்.எஸ் அந்த வாய்ப்பை பெற்றார்.
எனினும் ஏலவே சிவாஜிக்கு டி.எம்.எஸ்.பின்னணி பாடியிருந்தும் சிவாஜி, தனக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் வேண்டும் என்ற நிலையில் ,படத்தின் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் சிவாஜியிடம், ” புதுப்பையன் [டி.எம் சௌந்தரராஜன்] பாடுவதைக் கேளுங்கள் ,பிடிக்கவில்லை என்றால் மாற்றி விடுவோம்” என்ற பரிந்துரையில் சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்கு காண்பிக்கப்பட்டது.சில பாடல்களை ஈடுபாடில்லாமல் கேட்ட சிவாஜி ” ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு ” என்று டி.எம்..சௌந்தரராஜன் ஓங்கிக்குரல் எடுத்துப் பாடிய நாட்டுப்பாங்கான பாடலைக் கேட்டு வியந்து பாராட்ட நேர்ந்தது.பிசிறின்றி ஓங்கி ஒலித்த அந்தக் குரல் பின்னாளில் சிவாஜியின் நிரந்தரக்குரலாக மாறியதற்கு ஆரம்பப்புள்ளியாய் அமைந்தது தூக்குத்தூக்கி திரைப்படம்.
டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் சிவாஜிக்கு பொருத்தம் என்று பெயர் பெற்றாலும் அதைத் தொடர்ந்த திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்றவர்களுக்கு ஆங்காங்கே பாடிவந்தாலும் சீர்காழி கோவிந்தராஜன் ,சிதம்பரம் ஜெயராமன்,ஏ.எம்.ராஜா போன்றோரும் முக்கியமான பாடல்களை பாடினர்.
பின்னணி என்பதே ” நடிகர்கள் பாடுவதில்லை” என்று பரவலாக தெரிந்த பின்னரும் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவாகி நிலைநிறுத்தப்பட்டது மெல்லிசைமன்னர்கள் காலத்திலேயே !
மெல்லிசைமன்னர்கள் இசையில் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி என்ற திரைப்படத்தில் ” அநியாயம் இந்த ஆடசியிலே அநியாயம் ” என்ற பாடலே டி.எம்.எஸ் பாடிய முதல் பாடலாக அமைந்தது. கொடுமைக்கார அரசியின் வரிமுறையின் அநீதிகளை பட்டியல் போட்டு எதிர்த்துத் தட்டிக் கேட்கும் இந்தப்பாடல் எம்.ஜி.ஆறும் அவரைச் சார்ந்த தி.மு.க கடசியின் பிரச்சார முறைக்கும் தோதாக அமைந்தது.இந்தப்படத்தின் மூலம் டி.எம்.எஸ் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னிலை பெற்றதும் மெல்லிசைமன்னர்களின் கூட்டின் பங்காளியானதும் நாம் அறிந்ததே.தொடர்ந்து மெல்லிசைமன்னர்கள் இசையில் மட்டுமல்ல கே.வி.மகாதேவன் போன்ற பலரது இசையிலும் டி.எம்.எஸ் பல பாடல்களை பாடினார்.
டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல்வளம் , பாடும் திறன் , குரலின் தனித் தன்மை , தனிச் சிறப்பொலி, தொனி போன்றவற்றை உணர்ந்து புது வகையில் பாட வைத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.
ஜி.ராமநாதனின் இசையில் வார்த்தெடுக்கப்பட்டு ,பட்டை தீட்டப்படட ஓங்கி குரலெடுத்து பாடும் குரலை பாடல்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உயிர்ப்பண்பிற்கு ஏற்ப வடிவமைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
புதிதான மெல்லிசைப்பாணியில் பாடல்களை அமைத்தாலும் , மரபு சார்ந்து ஓங்கிக்குரல் எடுத்துப்பாடும் அவரின் குரலின் சுருதிக்கு அனுசரணையாகவும் வேகம்மிக்க விறுவிறுப்பான பாடல்களை அமைத்து புதுமை செய்தார்கள்.
பின்னணி பாடுவது என்பது தொழில் நுடபத்தின் வளர்ச்சியில் கிடைத்த ஒன்று.காலமாற்றத்தின் வளர்ச்சியில் பாடும் மரபிலிருந்து வந்த கலைஞர்களின் பற்றாக்குறையும் , பாட முடியாத புதிய கலைஞர்களின் வருகையும் பின்னணி பாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது.அழகான தோற்றம் கொண்ட நடிகர் ,நடிககைகளால் பாட முடியாத தன்மையையும்,அவர்களின் கவர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்ககளாலும் காலப்போக்கில் பின்னணி பாடுவது என்பது தவிர்க்க முடியாத முக்கிய அம்சமாகவும் மாறியது.
1945 இல் வெளிவந்த ஸ்ரீவள்ளி படத்தில் நடிகை லட்சுமியின் தாயாரான ருக்மணி , டி.ஆர்.மகாலிங்கத்திற்கு இணையாக பாட முடியாத காரணத்தால் பி.ஏ.பெரியநாயகி பின்னணி பாட நேர்ந்தது.அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை ” கிட்டப்பாவின் பாட்டுக்களை பயன்படுத்தி கொண்டு மகாலிங்கத்தை நடிக்க செய்துள்ளனர் ” என்று அன்றைய பத்திரிகைகள் எழுதின.[தகவல் : திரை இசை அலைகள் – வாமனன் ]
பின்னணி பாடுவதால் பல புதிய பாடகர் ,பாடகிகள் முன்னணிக்கு வந்தார்கள். 1950 களில் பல்வகைக்குரல்கள் ஒலித்தன.1950 களின் இறுதிவரை இன்னாருக்கு இன்னார் பாட வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் எல்லா பாடகர்களும் எல்லா நடிகர்களுக்கும் பாடினார்கள். பின்னாளில் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற நிலையில்லாமல் பாடலின் தன்மை , உணர்வுகளுக்கு ஏற்ப பாடகர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
உதாரணமாக சிவாஜி , எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களுக்கு பலவிதமான பாடகர்களும் குரல் கொடுத்தார்கள். உதாரணமாக எம்.ஜி .ஆர் பாடல்கள் சில.
01 ஆணழகா எனது கைகள் செய்த புண்யமே – சர்வாதிகாரி [1951 ] – திருச்சி லோகநாதன் + பி.லீலா – இசை: வி.தட்க்ஷிணாமூர்த்தி
02 தடவி பார்த்து தெரிந்து கொள் – சர்வாதிகாரி [1951 ] – வி.தட்க்ஷிணாமூர்த்தி + பி.ஏ.பெரியநாயகி – இசை: வி.தட்க்ஷிணாமூர்த்தி
04 காணி நிலம் வேண்டும் பராசக்தி – என் தங்கை [1952 ] – சி.எஸ்.ஜெயராமன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.என் பாண்டுரங்கன்
05 எல்லையில்லாத இன்பத்திலே – சக்கரவர்த்தி திருமகள் [1957 ] – சீர்காழி + பி.லீலா – இசை: ஜி.ராமநாதன்
06 காணி நிலம் வேண்டும் பராசக்தி – என் தங்கை [1952 ] – சி.எஸ்.ஜெயராமன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.என் பாண்டுரங்கன் சிவாஜிகாக்கவும் பலரும் பாடினார்கள். சில உதாரணங்கள்:
01 நான் ஏன் வரவேண்டும் – பூங்கோதை [1953 ] – டி.பி.ராமசந்திரன் + ஜிக்கி – இசை: ஆதிநாராயணராவ்
02 பூனை கண்ணை மூடிக் கொண்டால் – ராஜாராணி [1955 ] – எஸ்.சி.கிருஷ்ணன் – இசை: டி.ஆர்.பாப்பா
03 விந்தியம் வடக்காக – தென்னாலிராமன் [1953 ] – வி.என்.சுந்தரம் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஆடரி படர்ந்த -தென்னாலிராமன் [1953 ] – வி.என்.சுந்தரம் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 சிங்கார பைங்கிளியே பேசு -தென்னாலிராமன் [1953 ] – ஏ.எம்.ராஜா + ராதா ஜெயலட்சுமி – இசை: எஸ்.வி.வெங்கடராமன்
06 காணா இன்பம் கனிந்ததேனோ -சபாஷ் மீனா [1953 ] – டி.ஏ. மோதி + பி.சுசீலா – இசை: டி.ஜி.லிங்கப்பா.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒருவிதமான ” சாய்ந்தால் சாய்ந்த பக்கம் சாயும் செம்மறி ஆடுகள் ” போல சாயும் ஒரு போக்கு அன்றிலிருந்து இன்றுவரை நிலவி வருவதை நாம் காண்கிறோம்.வர்த்தக சூத்திரத்தின் மந்திரமான “வெற்றிக்கனிகள் ” பறிக்கும் ஒருவிதமான கற்பனாவாதம் கட்டமைக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்குவது.அதன் சாராம்சம் “வெற்றி பெற்றவர்களே புத்திசாலிகள் “என்ற தவறான கண்ணூட்டம் ஆகும்.அன்றிலிருந்து இன்றுவரை ” மார்க்கட் நிர்ணயம் ” என்ற அடிப்படையில் மாறாமல் இருந்து வருகிறது.
[ இதன் தொடர்ச்சி ..Part3 அடுத்த பதிவில் ]