இலக்கியச்சோலை
“பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல” …. தீபச்செல்வனின் நூலுக்கு நடிகர் நாசர் அணிந்துரை!
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல’ நூல் முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல் முல்லைப் பாடசாலைகளுக்கு டாக்டர் விக்கினேஸ்வரா நினைவாக
நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
போர் கடுமையாக இடம்பெற்ற காலத்தில்கூட வடக்கு கிழக்கின் கல்வி வீதம் கொழும்புக்கு சவால் விடுமளவுக்கு உச்சத்தில் இருந்தது. ஆனால் இன்று கடைநிலையில் 24 ஆக முல்லையும் 25 ஆக கிளிநொச்சியும் ஆகியுள்ளது.
வன்னியில் குழந்தைகள் மீண்டும் ஒருமுறை கல்விப்புரட்சி நிகழ்த்த “பள்ளிக்கூடங்கள் வெறும் கட்டடக்கூடுகள் அல்ல” கல்வி சார் விழிப்புணர்வு நூல் வழங்கப்பட்டது.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய இந்த நூலை டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா முதலாம் ஆண்டு நினைவாக ஜீவநதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முல்லைதீவு மாவட்டத்தின் மல்லாவி, பாலிநகர் மற்றும் கோட்டைகட்டியகுளம் பிரதேசத்திலிருந்து யாழ்பல்கலைக்கழகம் சென்ற வ.கலையரசி, கி.அலெக்ஷன், சி.கருணிகா, யோ.துசாந்தன், ப.கயல்விழி, அ. ராதிகா, ச.சாலினி ஆகிய மாணவ மாணவிகளால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மல்லாவி மத்திய கல்லாரி தேசிய பாடசாலை, துணுக்காய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, உயிலங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம், பாலிநகர் மகாவித்தியாலயம். முதலிய பாடசாலைகளுக்கு பள்ளிக்கூடங்களது முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நூல் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களும் மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர்,ஆசிரியர் குழாமிற்கும் இடையில் பாடசாலைகளது தேவை, கல்வி வளர்ச்சிக்கான பாதைகள் பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
டாக்டர் விக்கினேஸ்வரா முதல் ஆண்டு நினைவாக :
ஈழத்தின் இன்றைய முக்கிய இலக்கிய ஆளுமைகளில் தமிழ்த் தேசியத்திலும், தாய் மண்ணிலும் தீராப் பற்றுள்ள கவிஞர். தீபச்செல்வன் எழுதிய “பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகள் அல்ல” எனும் கட்டுரைத் தொகுப்பு டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் முதல் ஆண்டு நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டது.
முதன் முதலில் ஈழத்தில் பதிப்பிக்கப்படும் நூல் என்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன் என்றும்,
இந்த நூலிற்கு நடிகரும், அன்பிற்குரிய நாசர் அவர்கள் சிறந்த அணிந்துரை வழங்கியிருப்பது கூடுதல் மகிழ்வான செய்தியாகும் என கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நடிகர் நாசரின் அணிந்துரை:
கவிதை, கட்டுரைகள், கதைகளால் மட்டுமல்ல, தம்பி தீபச்செல்வனை பழகியும் பேசியும் பயணித்தும் அறிவேன். உன்னால் உலோக் குண்டுகளால் எம் மக்களை சுட்டு சாகடிக்க முடியுமானால், நான் என் சொற் குண்டுகளால் நீ மறைத்த ரகசியங்களை பொய்களை சுட்டு சிதறிடிப்பேன் என எழுத்தே ஆயுதமாய், நடுகல் பதித்த வெளியிலே, பயங்கரவாதியாய் தீர்க்கமாய் திரிபவன் தீபச்செல்வன்.
இதோ இன்று, பள்ளிக்கூடங்கள், கட்டடக்கூடுகள் அல்ல என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவாக அர்ப்பணிக்கிறார். நடந்தாலோ, நீந்தினாலோ, நான்கு மணிக்கு உள்ளாக அடைந்துவிட முடியும் என்கின்ற பிறகே அடைந்துவிட முடியும் என்கின்ற தேசத்தில் நடந்த அவலம் என் கண்ணில் தெளிவாய் தெரியாமற் போனதென்ன?
வான் கீழிடை எழுந்த ஓலங்கள், என் செவி சேராததென்ன? எங்களுர் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் நேர்த்தியாய் தேர்ந்தெழுடுத்தும் கவனமாய் ஒதுக்கித் தள்ளியும் நிகழ்வுகளை மிகைப்படுத்தியும் ரசனை ஊட்டியும் திரித்தும் மறைத்துமாய் தங்களுக்கு ஆதாயப்படும் வகையில் எங்கள் மனதுக்கு கொண்டு சேர்த்தனர்.
நாங்களும் எங்கள் கற்பனை வரலாற்றின் வழி ஆளுக் கொன்றாகத் திரித்து பகிர்ந்து கொண்டோம். ஒன்று அதீத உணர்ச்சிவசப்பட்டோம். அல்லது தூர நின்று வேடிக்கை பார்த்தோம். எதிர்பார்ப்பின்றி, ஆதாயமற்று, ஒரு எழுத்தாளன், தன் ஐம்புலனும் அனுபவித்ததை தேர்ந்தெடுத்த சொற்களால் சொற் தொடர்களால் புதினங்கள் உருவாகும் போதுதான் கலங்கித் தணிந்த நீரின் படிகத் தெளிவுபோல அகக் கண்ணுக்குப் புலப்படுகிறது. ஐயோவெனக் கதறத் தோன்றுகிறது.
ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டுமென்றால் அதின் அறிவுத் தொப்புள் கொடியை அறுங்கள், அடிமரத்தை அல்ல, ஆனிவேரை பிடிங்கிப் பொசுக்கு என்ற தத்துவார்த்திற்கு சான்றுதான் யாழ் நூலக எரிப்பு. பள்ளிகள் பதுங்குகுழிகள் ஆனதும் பறிக்கப்பட்டு இராணுவ முகாங்களானதும் அதன் பாற்பட்டவையே.
பள்ளிக்காக கட்டப்பட்டும் கட்டங்கள் செங்கல்லால், சுண்ணாம்பால் ஆனதல்ல. கூட்டுக் கருவறைகள். எதிர்காலத்திற்கான திண்மையான தண்மையான சிசுக்களை தாங்கி வளர்க்கும் ஞானக் கூடுகள்.
இப் புத்தகத்தின் ஒரு பகுதியில் அந்த ஞானக் கூட்டுக்குள் பாடி ஆடி, கற்பனை செய்து, கதைகள் புனைந்து, பாட்டெழுதி நாடகம் ஆடி, விளையாட்டும் கனவும் கற்றுலுமாய் கடக்க வேண்டிய வயதினை ஒரு சிறுமி பிறசர் கிளினிக் சென்று கழிக்க வேண்டிய அவலம் என்ன என்பதை காரணம் என்ன என்பதை பதிவு செய்துள்ளார் தீபச்செல்வன்.
அதுபோலவே, ஆதாரத்துடன் பல பக்கங்கள் பின்னிருக்கும் அரசியலை அதிகார வர்க்கத்தின் ஆட்டக்கலையை புரிய வைத்து எதிர்கால காலத்திற்கான தயாராகுதலுக்கான உந்தித் தள்ளுகிறது இப் புத்தகம். இந்தப் புத்தகத்தை சமூகத்திற்கு அர்ப்பணித்த தம்பி தீபச்செல்வனுக்கு நன்றியும் கைசேர்ப்பும் என நடிகர் நாசரின் அணிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.