பாரிஸில் இம்மாதம் 06 ஆம் திகதி கலை, இலக்கிய விருது விழா!
வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருது வழங்கும் விழா இம்மாதம் ( ஓகஸ்ட் ) 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் மாநகரில் நடைபெறும்.
தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணியாற்றிய ஆளுமைகளை இனம்கண்டு, மதிப்பளித்து, பாராட்டி கௌரவித்து விருது வழங்கப்படவிருக்கிறது.
இந்த அறக்கட்டளையின் முதலாவது விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு, யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இம்மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாரிஸில் Les salons du Grand Paris மண்டபத்தில் பிற்பகல் 2-00 மணிக்கு ஆரம்பமாகும்.
இம்முறை அறக்கட்டளையின் நிருவாகக் குழுவினரால் உலகின் சில நாடுகளைச்சேர்ந்த தமிழ் ஆளுமைகள் 21 பேர் பரிந்துரைக்கப்பட்டு விருது வழங்கப்படவிருக்கின்றனர்.
கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், நோர்வே, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து முதலான நாடுகளில் வதியும் கலை, இலக்கியம், நாடகம், விஞ்ஞானம், ஊடகம், நூலகம், இசை, நடனம் , ஆவணப்படுத்தல் முதலான துறைகளில் நீண்டகாலம் சேவையாற்றிய 21 பேருக்கு இம்முறை வென்மேரி அறக்கட்டளையின் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
அறக்கட்டளையின் தலைவர் திரு. வென்ஸிலாஸ் அநுரா மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
—0—