இலக்கியச்சோலை

‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு: தமிழர் போராட்டத்தை தெற்குக்கு புரிய வைத்தவர் சிவராம்!…. நவீனன்.

தமிழர்களின் போராட்டம் ஒரு நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார். சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது.
சிவராமின் ஆங்கிலப் புலமை :
பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது.
சிவராம் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது.
தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான போதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை.
அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார்.
மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல்:
ஈழத் தமிழ் ஊடக ஆளுமைகளின் முன்னோடியும்,தமிழர் போராட்டத்தை தெற்குக்கு புரிய முனைந்தவரே தராக்கி சிவராம். 2005இல் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கவிதைப் படைப்புகள் அடங்கிய நூல் வெளியீடு கடந்த ஜூலை 15 மாலை மட்டக்களப்பு YMCA நிலையத்தில் வெளியானது.
சிவராம் இலங்கையில் நன்கு அறியப்பட்ட, அரசியல் ஊடகவியலாளர் மற்றும் தமிழ்நெட் மூத்த ஆசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெள்ளை வேனில் வந்த நான்கு நபர்களால் அவர் கடத்தப்பட்டார். மறுநாள் அவரது உடல் ஹிம்புலாலாவில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணம் தாக்கப்பட்டு தலையில் சுடப்பட்டதன் விளைவாக ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமிழின உரிமைப் போராட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் பலி கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு முன்னோடியாக, கவர்ந்திழுக்கும் சக்தியாக அமைந்தவர் சிவராம். ஈழத் தமிழின உரிமைப் போராட்ட வரலாற்றில் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகின்ற ஒருவர் என்றால் ‘தராக்கி’ என்ற புனைபெயர் கொண்ட டி. சிவராம்.
அவரது இடைவெளி ஊடகப் பரப்பில் மாத்திரமன்றி, இன உரிமைப் போராட்டத் தளத்தில் கூட பாரியதொரு வெற்றிடத்தை விட்டு வைத்திருக்கின்றமையை மறுப்பதற்கில்லை. அவர் நினைவாக ‘தராக்கி : ஈழத்தமிழ் ஊடக முன்னோடி’ எனும் கட்டுரை தொகுப்பு நூலின் வெளியீட்டு நிகழ்வு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (மட்டக்களப்பு) ஏற்பாட்டில் அதன் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நூல் பிரதம அதிதியான தராக்கியின் மனைவி பவானி சிவராமிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், வெளியீட்டு விழாவை கிழக்கு மத்திய சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராமின் உருவப்படத்துக்கு அவரது மனைவி பவானி சிவராமினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீபச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நூலின் முதல் பிரதியை சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் மனைவி பவானி சிவராமுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பிரபல சிங்கள மொழி பாடகர் ஜெயதிலக பண்டாரவால் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம் பற்றி எழுப்பப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான பாடல்களை அவர் பாடினார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா. சிறிநேசன், துரைராஜசிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் குடும்ப உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.நகுலேஸ், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கத்தினர், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சிவராமின் ஊடகப் பணி:
இதன்போது மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் ஊடகப் பணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே, ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களுக்கு தர்க்க நியாயங்களுடன் புரிய வைத்ததில் ஊடக முன்னோடி தராக்கியின் பங்கு அளப்பரியது. அவர் நினைவாக வெளிவந்த ‘தராக்கி : ஈழத்தமிழ் ஊடக முன்னோடி’ கட்டுரை தொகுப்பு நூலில் சிவராம் – பன்முக ஆளுமை – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு,சிவராம்: நினைவெழுதல் – பேராசிரியர் உ.சேரன், ஆய்வறிவுப் புலமை மிகுந்த ஊடகவியலாளன் – பேராசிரியர் சி.மௌனகுரு, சிவராமும், மட்டக்களப்பு வாசகர் வட்டமும் – ப.மகாதேவா, பத்திரிகையாளர் டி.சிவராம் – ஒரு சிறு நினைவுக் குறிப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன், பூகோள அரசியலில் ஈழத் தமிழர் நலன்கள் : சிவராமின் புரிதலும் வெளிப்படுத்தலும் – பேராசிரியர் சி. ரகுராம், தராக்கியின் ஊடகவெளியும் தமிழர் சமூகவெளியும் – தெ.மதுசூதனன், ஊடகப் போராளியான உண்மைப் போராளி – வீ.தேவராஜ், எனது பார்வையில் சிவராம் – நிலாந்தன், இலங்கையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வு – இரவி அருணாசலம், இங்கே சாகாமல் நான் வேறு எங்கே சாவேன்? – வீரகத்தி தனபாலசிங்கம், சிவராம் – ஒரு நினைவுக் குறிப்பு – கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம், சிவராமின் படுகொலையும் தண்டனையிலிருந்து தப்பித்தலும் – பாரதி இராஜநாயகம் ‘துரோகம் – தியாகம்’ இருநிலை அடையாளத்தின் வரலாறு ‘தராக்கி சிவராம்’ – சிவராசா கருணாகரன் ஆகிய கட்டுரைகள் அடங்குகின்றன.
சிங்களத்தின் குகைக்குள் இருந்த வண்ணம் :
சிங்களத்தின் குகைக்குள் இருந்த வண்ணமே தன் ஊடகப் பணியைக் கொழும்பில் இருந்து கொண்டே சிங்களவர்களுக்கும் புரியும் மொழியிலேயே செய்ய முடிந்தமை சிவராமின் சாமர்த்தியம் எனலாம். சிவராம் நினைவாக வெளிவந்த
இந்நூலில் சிவராமின் குரல்… – சிறிதரன் சோமீதரன், மறுவாசிப்பில் சிவராம்: ஒரு பிராரம்ப வரைவு – ச.அமரதாஸ், சிவராமின் தீர்க்க திரிசனம் – செயற்படுத்தத் தவறிய தமிழ்த் தேசியக் கட்சிகள் – அ.நிக்ஸன், சமூகங்களைத் தட்டி எழுப்பிய ஊடக சிற்பி சிவராம் – க. குணராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்… – பூபாலரத்தினம் சீவகன், சிவராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பல உண்டு – இரா துரைரத்தினம், தராக்கி சிவராமின் இற்றைத் தேவை – உலகத் தமிழர் ஆவண மையம், மறக்க முடியாத மாமனிதன் – அ.சுகுமாரன், சிவராம் ஒரு நிதர்சனம் – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா, சிவராம்: மானுட விடுதலையின் மகத்துவம் மிக்க போர் வாள் – அகதித் தமிழன், சிவராம் – தமிழ் ஊடகத் துறையினதும் அரசியலினதும் வரலாற்று நாயகன் – பி.மாணிக்கவாசகம், மாமனிதர் சிவராம் பலமும், பலவீனமும்! – பா.அரியநேத்திரன், ஊடகத் துறையில் ஒரு ஜாம்பவான் சிவராம் – என்.கே.துரைசிங்கம், சிவராம் எனும் சிகரம் – கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், தென் தமிழீழம் தந்த தவப்புதல்வன்! – வி.ரி.சகாதேவராஜா, பேனாவை ஆயுதமாக்கிய ஊடகப் போராளி – எஸ்.கே.ராஜென், ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் சிவராம் – பரா பிரபா, சிவராம் ஓர் ஊடக ஆளுமை – ஞா.குகநாதன், அடிநுனியறியாப் பரம்பொருளாய் ஆனாய் நீயே! – இரா தயாபரன்,?தமிழ் ஊடகத் துறையின் தந்தை – வே.தவச்செல்வம் , சிவராமண்ணையும் நானும் – மகாமுனி சுப்பிரமணியம், இருமுனைப் போராளி – சி.பிரபாகரன் ,?என்னுடன் தராக்கி… – பிரசன்னா இந்திரகுமார், Whom did I actually know? Sivaram or Taraki? – Kusal Perera, Sivaram, impunity, memorialization and dissent in mainstream media – Ruki Fernando , ‘Siva’ reloads with words – Johan Mikaelsson, In memory of our loving appa – Vaishnavi, Vaitheki & Seralathan
ஆகியோரின் கட்டுரைகள் அடங்குகின்றன.
சிவராமின் ஆங்கிலப் புலமையும், தர்க்க நியாயங்களை அவர் முன்வைக்கும் விதமும் பேரினவாதிகளால் அவரது எழுத்துக்குப் பதிலளிக்க முடியாத நிலையைத் தோற்றுவித்ததும் உண்மையே. எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது. அவரின் இழப்பு தமிழ் ஊடகத்துறையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளமை உண்மையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.