தூரிகைகளின் வேந்தர் ஓவியர் மாருதி!…. கிறிஸ்டி நல்லரெத்தினம்.
“தூரிகைகளின் வேந்தர்” என அழைக்கப்படும் பிரபல தமிழக ஓவியர் மாருதி இன்று காலமானார்.
இவரின் ஓவியங்கள் வண்ணக்கலவைகளில் குளித்து பார்ப்பவர் கண்களை பரவசப்படுத்தும். இவரின் தூரிகைகள் படைக்கும் பெண் பாத்திரங்களின் சிரிக்கும் கண்கள் தனித்துவமானவை!
வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (28 August 1938 – 27 July 2023), ஓவியர் மட்டுமல்லாமல் ஆடை வடிவமைப்பாளரும் கூட. கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. ஓவியம் மட்டுமின்றி ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.
இவர் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள். வெங்கோப ராவ் ஆசிரியராக பணி செய்தார். அதனால் வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.
மகாராட்டிர மாநிலம் புனே நகரில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, தன் 85-ஆம் பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 27 சூலை 2023 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இருதய நோயால் காலமானார்.
இரங்கநாதன் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.ல்.சி முடித்த கையோடு.புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.
மாருதி கே. மாதவன் என்ற ஓவியரை மானசீக குருவாக எண்ணி கற்றார். திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் 1959 மார்ச் 11 இல் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணி செய்தார். சென்னையில் ஆர். நடராஜன் என்ற ஓவியரிடம் நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் ஓவியம் கற்றார்கள்.
மாருதி திரைப்படங்களுக்கு பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் உருவாகும் குழப்பத்தை தவிர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது ‘மாருதி’ என கையொப்பம் இட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டதென ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
முகபாவத்திற்கு முக்கியத்துவம் தந்தவர் ஓவியர் மாருதி. சீற்றம், நாணம், அமைதி, நளினம், என்று இப்படி எந்த ஒரு ஓவியத்தை எடுத்தாலும், முதலில் நம்மைக் கவர்வது அந்த முக பாவங்கள். இந்த மென் உணர்வுகளை தன் தூரிகையால் காகிதத்தில் தடவிச் சென்ற ஓவியர் மாருதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.
முற்றும்