இலக்கியச்சோலை

விமானங்கள் மீண்டும் வரும் படைத்த நெல்லை க. பேரன்! முழுக் குடும்பத்தோடு மீண்டு வராத துயரமிகு கோரம் !!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(ஈழத்து இலக்கிய படைப்புக்களில் முத்திரை பதித்த “விமானங்கள் மீண்டும் வரும்” நாவலை படைத்த நெல்லை பேரன்முழுக் குடும்பத்தோடு மீண்டு வராத துயரமிகு கோரம் ஜூலை 15, 1991இல் நிகழ்ந்ததுநெல்லை பேரன் நினைவாக இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது)
கற்பனை உலிகில் சஞ்சரித்துக் கொண்டு காதல் கதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காத விடயம். நான் அன்றாடம் காணும் பொது மக்களையும் அவர்களது சமகாலப் பிரச்சினைகளையும் வாழ்க்கை முறைகளையும் எனது சக்திக்கு உட்பட்டவரை எனது படைப்புக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என ‘விமானங்கள் மீண்டும் வரும்’ எனும் நாவலைப் படைத்த நெல்லை க. பேரன் தன் முன்னுரையில் எழுதியுள்ளார்.
ஒரு எழுத்தாளர் குடும்பமே ஒன்றாகப் படுகொலை:
ஈழத்தில் ஒரு எழுத்தாளர் குடும்பமே ஒன்றாகப் படுகொலை செய்யப்பட்டது என்ற அழியா வடு கொண்டது எழுத்தாளர் நெல்லை க.பேரனின் வாழ்க்கையில் தான். வடமராட்சில் ஜூலை 15, 1991இல் இக் கோரம் நிகழ்ந்தது. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான நெல்லை க.பேரன், அவரின் மனைவி உமாதேவி,  மகன் உமா சங்கர், மகள் சர்மிளா என்று அந்த ஒட்டுமொத்தக் குடும்பமே ஜூலை 15 இரவில் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
சுவையாகவும், இயல்பாகவும், அனாயாசமாகவும் கதை கூறும் நெல்லை க. பேரனது ஆற்றல் குறுநாவலெங்கும் இழையோடுகின்றது. இதற்கோர் எடுத்துக் காட்டு, விமானங்கள் மீண்டும் வரும் நாவலாகும் என அறிமுக விமர்சனத்தில் செ.யோகராசா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கு அனுபவங்கள் உண்மை அனுபவங்களாக, அதுவும் சொந்த அனுபவங்களாகவும் வெளிப்படும்
ஈழத்தின் முதற் குறுநாவலென்ற சிறப்பையும் இது பெற்றுவிடுன்றது எனலாம் என செ.யோகராசா குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் யாழ்ப்பாணம் நெல்லியடியில் கந்தசாமி, பறுபதம் ஆகியோருக்கு 18 திசம்பர் 1946இல் பிறந்தவர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்ப நிலையம், சட்டக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி கற்றவர்.
ஆரம்பத்தில் நெல்லை க.பேரன் 1960களின் தொடக்கத்தில் வீரகேசரியில் யாழ்ப்பாண செய்தியாளராகவும், பின்னர் 1966 இல் அஞ்சல் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். குவைத் நாட்டில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவல் இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1986 இல் நூலாக வெளிவந்தது.
விமானங்கள் மீண்டும் வரும்:
ஈழநாடு நிறுவனமும்,யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடாத்திய இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் விமானங்கள் மீண்டும் வரும் குறுநாவலுக்கு முதலாவது பரிசும் கிடைத்து. ஈழநாடு வார மலரிலும் இந் நாவல் தொடர்ந்து பிரசுரமானது.
ஈழநாடு பத்திரிகையில் இக்கதை தொடராக வந்து கொண்டிருந்த போது தன்னை நேரில் கண்டு பாராட்டி, கடிதங்களை எழுதி உற்சாகப்படுத்தியும், குவைத்தில் தன்னோடு வாழ்ந்த தனது எழுத்துக்களை அறிந்து கொண்ட பல நண்பர்கள் அனுபவங்களை வைத்து கதை எழுதுங்கள் என்று கேட்டதற்கு இணங்க விமானங்கள் மீண்டும் வரும் நாவல்களைப் போல வேறு படைப்புகளையும் தான் எழுத நினைப்பதாக நெல்லை க. பேரன் கூறியுள்ளார்.
தமிழ் இளைஞர்களின் மத்திய கிழக்கு வாழ்க்கையைப் படம் படித்துக் காட்டும் ரீதியில் தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது நாவல் இதுதான் என்று பலர் எனக்குச் சொல்லி இருக்கிறார்கள். இதுபோலவே வேறு நாடுகளில் வாழக்கூடிய தமிழ் எழுத்தாளர்களும் நிச்சயமாகத் தம் அனுபவங்களை எழுத வேண்டும் என்பது என் விருப்பமாகும் என விமானங்கள் மீண்டும் வரும் நூலின் முன்னுரையில் நெல்லை க. பேரன் எழுதியுள்ளார்.
குவைத்தில் தான் வாழ்ந்த காலத்தில் பல புதிய அனுபவங்கள் ஏற்பட்டன. தனது சொந்த அனுபவங்ளையும் தொகுத்து நாவல் வடிவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசையாகும் எனக்கூறும் அவர், விமானங்கள் மீண்டும் வரும் நாவல் எல்லாவற்றையும் விட இன்னொரு காரணத்திற்காக நெல்லை க.பேரன் பாராட்டுக்குரியவராகின்றார்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாடியவன் பாரதி. இன்று மத்திய கிழக்கு செல்பவர் பலராயிருந்தாலும் கலைச்செல்வம் – கதைச் செல்வம் அளிப்பவர் எத்தனை பேர்? அவ்விதத்தில் ஒரு குறுநாவல் செல்வத்தை இவர் தந்துள்ளார் என்பதற்காகவும் பாராட்டுக்குரியவரன்றோ  என விமர்சன உரையில் செ.யோகராசா குறிப்பிட்டுள்ளார்.
பெரிய மீன் சின்னமீனை விழுங்குகின்றது. மனிதன் மனிதனை விழுங்குகின்றான். நல்ல மனங்களை நோகச் செய்யும் பான்மையும் விட்டுக் கொடுப்புக்கள் இல்லாமல் சமூக அநீதிகளுக்கு உரமூட்டும் செய்கைகளும் மலிந்து சமுதாயம் நலிவடைந்து செல்கின்றது.
குவைத்தில் தான் வாழ்ந்த காலத்தில் பல புதிய அனுபவங்கள் ஏற்பட்டன. தனது சொந்த அனுபவங்ளையும் தொகுத்து நாவல் வடிவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை என தெரிவித்த நெல்லை க. பேரன், முழுக் குடும்பத்தோடு துயரமிகு கோரமாக, அந்த ஒட்டுமொத்தக் குடும்பமே 1991 ஜூலை 15 இரவில் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
நெல்லை பேரன் எழுதிய நூல்கள்:
நெல்லை க. பேரன் எழுதிய நூல்களாவன: ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் (சிறுகதைகள், 1975), விமானங்கள் மீண்டும் வரும் (புதினம்), வளைவுகளும் நேர்கோடுகளும் (புதினம், 1978), சத்தியங்கள் (சிறுகதைகள், 1987), பேரனின் கவிதைகள், சந்திப்பு (நேர்காணல்கள், 1986).
ஈழத்து இலக்கிய படைப்புக்களில் முத்திரை பதித்த விமானங்கள் மீண்டும் வரும் நாவலை படைத்த நெல்லை க. பேரன், முழுக் குடும்பத்தோடு மீண்டு வராத துயரமிகு கோரம் ஜூலை 15, 1991இல் நிகழ்ந்தது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.