இலக்கியச்சோலை

படைப்பாளி முருகபூபதி….. ஒரு இலக்கிய ஆளுமை!… கிறிஸ்டி நல்லரெத்தினம்.

1951 ஆம் ஆண்டு ஜுலை 13 ஆம் திகதி….. நிசப்தமான அந்த வெள்ளி இரவில் நுரை தள்ளி கரைநனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு வீட்டில் ‘வீல், வீல்’ என ஒரு குழந்தையின் அலறல் அந்த இரவின் அமைதியை கலைத்தது!

அதனை ஈன்ற தாய் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து குழந்தையின் தந்தை லெட்சுமணனின் கரங்களில் ஒப்படைத்தாள். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் ஒரு புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் “முருக….பூபதி ” என நீட்டி விளித்து அவனை மெதுவாய் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார்.

அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட ‘முதல்’ எனும் வார்த்தை அவன் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.

இலங்கையில் வடமேல் மகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக அதே ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து தன் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார் முருகபூபதி,

இவரின் மாணவ பதிவு இலக்கம் : 01.

இது முருகபூபதியின் முதலாம் ‘முதல்’!

வருடங்கள் உருண்டோடின …….

1972 ஆம் ஆண்டு இந்த இலக்கிய குழந்தையின் இருபத்தியொராவது பிறந்த நாள் பரிசாக இவர் எழுதிய ‘கனவுகள் ஆயிரம்’ எனும் முதல் சிறுகதை மல்லிகை இதழில் வெளிவந்தது. தான் பிறந்த நெய்தல் மண்ணின் வாழ்வை சித்திரிக்கும் கதை இது. தனது முதல் சிறுகதையே ஈழத்தின் முன்னணி இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்ததையிட்டு இந்த இளம் படைப்பாளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அக்கதையை ஆயிரம் தடவைக்கு மேல் படித்ததாய் பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இந்த முதல் சிறுகதையை உள்ளடக்கிய ‘ சுமையின் பங்காளிகள்’ எனும் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு 1976 இல் இலங்கை தேசிய சாகித்திய விருது கிடைக்கிறது.

ஆம், இது முருகபூபதியின் இரண்டாம் ‘முதல்’!

இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவா கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று முருகபூபதி என்றால் மிகையாகாது.. இவரது சிறுகதைகளைபுறக்கணித்த வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் 1976 ஆம் ஆண்டு, இவரது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய விருது கிடைத்ததும் முருகபூபதியின் படத்துடன் செய்திகளை வெளியிட்டு தமக்கு கெளரவம் தேடிக்கொண்டன.

தனது முதல் சிறுகதையை படைத்த கதையைப்பற்றி ஒரு பேட்டியில் இப்படி நனவிடை தோய்கிறார் :

” மல்லிகை ஆசிரியர் 1970-1971 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் கொழும்புக்கு வரும்பொழுது நீர்கொழும்பிலிருக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக வருவார். அச்சமயங்களில் ஏற்கனவே இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர், மற்றும் செல்வரத்தினம், தருமலிங்கம், சந்திரமோகன், பவாணிராஜா, நிலாம் உட்பட பலர் அவரைச்சந்தித்து கலந்துரையாடுவார்கள். இச்சந்திப்புகள் பெரும்பாலும் நீர்கொழும்பு கடற்கரையில் இடம்பெறும். நானும் ஆர்வமுடன் கலந்துகொண்டு உரையாடுவேன். மல்லிகை ஜீவாவுடன் விவாதிப்பேன். அச்சமயம் ஜெயகாந்தனைப்பற்றி அவர் காரசாரமான விமர்சனக்கட்டுரைத்தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அத்தொடர் எமது கலந்துரையாடலில் விவாதப்பொருளாகும். எனது கருத்துக்களை கூர்ந்து அவதானித்த ஜீவா ஒருநாள், “ நிறைய விவாதிக்கிறீர். நீரும் எழுதலாமே” என்றார். அவர் தந்த உற்சாகத்தில் கனவு என்ற சிறுகதையை எழுதினேன். அச்சிறுகதை நீர்கொழும்பு பிரதேசத்தில் கடற்தொழிலை நம்பி வாழும் மக்களைப் பற்றியது. அதனை, செல்வரத்தினம் ( இவர் தற்போது பிரான்ஸில் இணையத்தளம் நடத்துகிறார் ) நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரிடமும் காண்பித்தேன. அதற்கு முன்னர் எமது பிரதேச மக்களின் பேச்சு மொழி வழக்கில் எவரும் படைப்பிலக்கியம் படைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட கனவு கதை மீனவ மாந்தரின் கனவுகளின் சித்திரிப்பாக அமைந்திருந்தமையால் ‘அதனை எதற்கு அனுப்பவிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘மல்லிகைக்கு’ எனச்சொல்லிவிட்டு, தபாலில்

அனுப்பினேன். கனவுகள் ஆயிரம் எனத்தலைப்பிட்டு ஜீவா அதனை மல்லிகை ஜூலை இதழில் பிரசுரித்தார்.”

இவ்வெற்றிகள் தானாக அவர் மடியில் வந்து விழவில்லை…. உழைப்பு… உழைப்பு…. உழைப்பு!

வெற்றியின் இரகசியம் என்ன என்ற கேள்விக்கு அவர் சொல்லும் விடை : ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் என்றைக்குமே தற்காலிகமானதுதான். ஆன்ம பலம்தான் நிரந்தரமானது. அதுதான் உழைப்பின் அடிப்படை!

அந்த ‘முதல்’ புது நூற்றாண்டிலும் தொடர்ந்தது…..

2001 இல் முருகபூபதி எழுதிய ‘பறவைகள்’ எனும் முதல் நாவலுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது கிடைக்கிறது.

இந்நாவலைப்பற்றி ஒரு விமர்சகர் இப்படிச் சொல்கிறார் :

” உறவுகளிடையே உள்ள ஆத்மார்த்தமான பந்தத்தையும் உறவுகளின் சிக்கல்களையும் இந்த நாவல் அழகுற காட்சிப்படுத்தியுள்ளது. இனப்போராட்டம், யுத்தம், அதனால் இடப்பெயர்வு, வர்க்க அரசியல், ஜாதி மற்றும் தீண்டாமை போன்ற பிரச்சினைகளுக்கு இடையில் இலங்கை தமிழ் மக்களின் இரண்டு தசாப்தத்திற்கு முந்தைய வாழ்வை படம்பிடிக்கிறது நாவல். நீர்கொழும்பை மையமாக வைத்து இயங்கும் இந்த நாவல், நம்மை நீர்கொழும்பில் ஒவ்வொரு வீதியிலும், கடற்கரையிலும், அங்குள்ள கோவில்களிலும் ஒரு மெய்யான தரிசனத்தைத் தருகிறது.”

இது இவரின் மூன்றாம் ‘முதல்’!

முருகபூபதியின் ‘முதல்’ தரிசனத்தை பீடத்தில் வைத்துவிட்டு இந்த இலக்திய ஆளுமை நடந்து வந்த பாதையை சிறிது பார்ப்போமா?

வாயில் வெள்ளிக்கரண்டியுடனும் கையில் தங்கத் தட்டுடனும் பிறந்தவரல்ல இவர். தான் கடந்து வந்த முட் பாதையை இப்படி ஒரு பேட்டியில் நனவிடை தோய்கிறார் முருகபூபதி :

” எனது அப்பா நான் பிறந்து சில வருடங்களில் எனது பெயரில் முருகன் லொட்ஜ் என்ற சைவஹோட்டலை நீர்கொழும்பு பிரதான வீதி பஸாரில் தொடங்கினார். அப்பா ஒரு பரோபகாரி. இரக்கசிந்தனையுள்ளவர். பசி என்று வந்தவர்களுக்கெல்லாம் பசிபோக்கியவர். அதனால் சற்று பொறுப்பில்லாமலும் நடந்துகொண்டவர். கடன் தொல்லைக்கும் ஆளானவர். சிறிது காலத்தில் அந்த சைவஹோட்டல் நட்டத்தினால்

மூடப்பட்டது. வீடு வறுமையில் வாடியது. அப்பா வேலை தேடி அலைந்தார்.

எங்கள் வீடும் வறுமைக்கோட்டில் இருந்தமையால், அதிகாலையே எனது அம்மா எழுந்து தோசை, இடியப்பம் தயாரித்து சட்ணி – சம்பலும் வைத்த கடகங்களுடன் பாட்டியையும் அக்காவையும் என்னையும் அனுப்பிவைப்பார். அந்த நெடிய கடற்கரையில் வந்து குவியும் கடற்றொழிலாளர்களின் காலைப்பசி போக்குவதற்காக ஏழு – எட்டு வயதில் அந்தத்தொழில் செய்துவிட்டு வந்துதான் பாடசாலைக்குச்சென்று வந்தேன்.

ஒரு தடவை கொப்பி புத்தகங்கள் வாங்குவதற்கு தவித்தபொழுது, அருகிலிருந்த செபஸ்தியார் தேவாலயத்தின் முன்றலில் எனது பாட்டி எனக்காக கடலை விற்றார்கள்.

நானும் அவர்களுடன் சென்று அதிகாலை ஒருமணிவரையில் அந்த தேவாலய முன்றலில் அமர்ந்தேன். எனக்கு பாடப்புத்தகம் வாங்குவதற்காகத்தான் பாட்டி கடலை அவித்தார்கள், விற்க வந்தார்கள் என்பது அப்போது எனக்கு தெரியாது. அவர்களது மடியில் நான் உறங்கிவிட்டேன். கடலை வியாபாரம் முடிந்து பாட்டி என்னை தட்டி எழுப்பி சொன்னார்கள், ‘’தம்பி உனக்கு புத்தகம் வாங்க காசு கிடைத்துவிட்டது”

“எப்படி?” என்று கேட்டேன். “கடலை வித்தோமில்லையா” என்றார்கள் புன்முறுவலுடன். நான் பாட்டியை கட்டி அணைத்துக்கொண்டேன்!

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுள்ளது. அதாவது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. எனக்கு பாடப்புத்தகம் வாங்க கையில் பணமில்லாதிருந்தது ஒரு பிரச்சினைதான். அதற்கான எளிமையான தீர்வு எனது அருமைப்பாட்டியிடமிருந்திருக்கிறது. அவர்கள் பாடசாலை சென்று படித்தவர்கள் இல்லை. வெறும் கைநாட்டுத்தான். ஆனால், தனது பேரன் படிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். தீர்வுக்காக அழுது புலம்பிக்கொண்டிருக்கவில்லை. இயங்கினார்கள்!

இந்த எளிய உண்மையை நான் காலம்கடந்து புரிந்துகொள்கின்றேன். இதுவே நான் ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்ததும் நம் தாய் நாட்டில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி செய்யும் வேட்கையுடன் நண்பர்களுடன் இணைந்து ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’ எனும் அமைப்பை 2009 இல் நிறுவ வித்திட்டது.

இத்தனை அல்லல்களுக்கிடையிலும் படித்து புலமைப்பரிசில் பெற்று, யாழ் மண்ணுக்கு சென்றாலும் வீட்டின் மீதான நேசத்தால் — எங்கள் ஊரின் பாசத்தால் ஓடிவந்துவிட்டேன்.”

இவருக்கு இலங்கை தமிழ் சமூகம், என்றும் போலவே, ஒரு முகவரி எழுதி முத்திரை குத்தி ஒரு சமூகப் பெட்டகத்தினுள் அடைக்க முயன்றது. சமூகம் போட்ட போர்வைகளை லாவகமாய் அகற்றி அவர் சொன்னது இது:

“அப்பாவின் பூர்வீகம் இந்தியா என்பதால் நான் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானதன் பின்னர், ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஒரு அன்பர், என்னை “இந்தியாக்காரன்”, ”வடக்கத்தியான்” என்று முகவரி தந்தார். நீர்கொழும்பிலிருந்தவன் என்ற காரணத்தினாலும் ”நீர்கொழும்பான்” என்றும் மற்றும் ஒரு முகவரி தந்தார்கள். ஆயினும், நான் நேசிக்கின்ற – என்னை நேசிக்கின்ற இலக்கியவாதிகள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழ்ந்து, ”மனிதன்” என்ற முகவரியைத் தந்திருக்கிறார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதுதான் எனது வாழ்வும் பணிகளும்! ”

விவேகானந்தா வித்தியாலயம் அரசுடைமையான பின்னர் ஆறாம் தர புலமைப் பரிசுக்கான பரீட்சையில் சித்தியடைந்து நீர்கொழும்பில் தமிழ் மகா வித்தியாலயங்களோ மத்திய மகா வித்தியாலயங்களோ இல்லாத காரணத்தால் யாழ் நகர் ஸ்ரான்லி கல்லூரியில் சேர அனுமதி பெற்றார்.

தன் முதல் யாழ் விஜய நினைவுகளை இப்படி நினைவு கூருகிறார்…….

“அப்பா என்னையும் என்னுடன் குறிப்பிட்ட பரீட்சையில் சித்தியடைந்த எனது தாய் மாமா மகன் முருகானந்தனையும் யாழ்ப்பாணம் அழைத்துச்சென்றார். அதுவரையில் நான் பனைமரத்தை படங்களில்தான் பார்த்திருந்தேன். சொந்த பந்தங்கள் இல்லாத அந்த ஊரில் கல்லூரி விடுதி வாழ்க்கை எனக்கு சிறையாகத்தான் இருந்தது. வீட்டுக்கவலையில் ( Home sick) நாட்கள் மெதுவாக நகர்வதாகத் தெரிந்தது. நீர்கொழும்பில் உயர்தரப்பாடசாலையாக அல். ஹிலால் மகாவித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டதும் பெற்றவர்களிடம் கண்ணீருடன் மன்றாடி நீர்கொழும்புக்கு மாற்றம் பெற்று வந்துவிட்டோம். யாழ்ப்பாணத்திலிருந்த அந்த பால்யகாலத்தில்தான் எனக்கு சாதி அமைப்பு பற்றி தெரியவந்தது. ஆனால், பின்னாளில் 1970 இற்குப்பிறகு டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன் ஆகியோரின் படைப்புகளைப்படித்த பின்னர், சாதி அமைப்பு பற்றிய தெளிவு எனக்குள் பிறந்தது. அக்காலப்பகுதியில் நானும் சிறுகதைகள்

எழுதத் தொடங்கினேன். அப்பொழுது எழுத்தாளன் என்ற முகவரி கிடைத்தது.”

1977 இல் வீரகேசரி நாளிதழில் தன்னை இணைத்துக் கொண்டார் முருகபூபதி. முதலில் வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராக செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தவர், எப்படி இலக்கிய உலகுடன் சங்கமித்தார் என்பதை இப்படி விளக்குகிறார:

” சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள், இலக்கியக்கூட்டங்கள் தொடர்பாக செய்திகள் எழுதியிருந்தேன். இந்நாட்களில் மல்லிகை, பூரணி, புதுயுகம் சஞ்சிகைகளில் சில சிறுகதைகளையும் எழுதினேன்.

இது எனக்கு எழுத்துலகத்தில் காலூன்றி நிலைக்கலாம் எனும் தன்னம்பிக்கையை வளர்த்தது. வீரகேசரியில் முதலில் ஒப்புநோக்காளன் (Proof Reader) பதவியும் அடுத்து எனது உழைப்பின் ஊதியமாய் துணை ஆசிரியர் பதவியும் என்னை வந்தடைந்தன.

இக்காலங்களில் பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் சமகாலத்தில் இயங்கிவந்தேன். நிருபராக பத்திரிகையில் செய்தி மற்றும் செய்தி அறிக்கை எழுதுவது, நேர்காணல்களை பதிவுசெய்வது முதலான பணிகள் இருந்தன. துணை ஆசிரியராகியதும் ஏனைய நிருபர்கள் எழுதியவற்றை செம்மைப்படுத்துவது (Editing), தலைப்பிடுவது முதலான பணிகளில் ஈடுபட்டேன். வாசகருக்கும் சமுதாயத்திற்கும் எது முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செய்திகளை செம்மைப்படுத்துவது முதலான பணிகள். அதனால் பத்திரிகையாளன் பணி ஒருவகையில் Team work. படைப்பாளியின் நிலை அப்படியல்ல. அது ஆக்க இலக்கியம் சார்ந்தது. (Creative writing) அது ஒருவகையில் தவம். பாத்திரங்களை சிருஷ்டிப்பது. கதை சொல்லியாக படைப்பு மொழியை உருவாக்குவது. முழுமையாக தன்னிலை சார்ந்து இயங்குவது. படைப்பாளி சிறுகதையிலும் நாவலிலும் சிருஷ்டிக்கும் பாத்திரங்களிலெல்லாம் அவனே இருப்பான். பல்வேறு குணாதிசயங்களை இயல்புகளை வெளிப்படுத்துவான்.

அதேசமயம் ஒரு ஆபத்தும் இருக்கிறது. அதனை நான் உணர்ந்தேன். தொடர்ச்சியாக செய்திகளையே எழுதி செய்திகளை செம்மைப்படுத்திய காலப்பகுதியில், சிறுகதை எழுதியபொழுது, சில சந்தர்ப்பங்களில் நடைச்சித்திரமாகிவிட்டதையும் அவதானிக்க முடிந்தது. அதனால் மீண்டும் மீண்டும் படித்து திருத்தி எழுத நேர்ந்தது.”

இது போல் எத்தனையோ நினைவுகள்.

தன் பத்திரிகை அனுபவங்களை சுவைபட ‘சொல்ல மறந்த கதைகள்’ எனும் நூலில் எழுதியுள்ளார் முருகபூபதி..

தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கியிருக்காமல் பல இலக்கிய ஆளுமைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு வேட்கையுடன் எமுதிக் கொண்டே இருந்தார். இவரின் வேட்கைக்கு களம் அமைத்துக் கொடுத்தது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இதுவே முருகபூபதியின் மறு தாய் வீடு.

இதையும் அவர் சொல்லக் கேட்போமே :

” இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கென நீண்ட வரலாறு இருக்கிறது. மூத்த படைப்பாளி, எனது இனிய நண்பர் இளங்கீரன் சங்கத்தின் வரலாறையே எழுதியவர்.

அதன் ஸ்தாபகர் தலாத்துஓயா கணேஷ் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சோமகாந்தன், சமீம், இளங்கீரன், நீர்வை பொன்னையன், டொமினிக்ஜீவா கவிஞர் முருகையன், காவலூர் ராஜதுரை மற்றும் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன். சர்வதேச செயலாளர் ராஜஸ்ரீகாந்தன் உட்பட சங்கத்தில் இணைந்திருந்த தெணியான், திக்குவல்லை கமால், சாந்தன், நுஃமான், மௌனகுரு, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மேமன் கவி உட்பட பலரும் எனது இனிய நண்பர்கள். அதிலிருந்து முன்னரே வெளியேறிய டானியல், ரகுநாதன், சில்லையூர் செல்வராசன் — நற்போக்கு இலக்கிய முகாம் என்று வீம்புக்கு ஏதோ அமைத்த எஸ்.பொ. அனைவரும் எனது நண்பர்கள்தான். இவர்களில் சிலர் இன்றில்லை. இவர்கள் பற்றியெல்லாம் தனித்தனிக்கட்டுரைகளும் ஏற்கனவே எழுதிவிட்டேன். அவர்களின் பணிகள் போற்றுதலுக்குரியவை.

ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரமாகத் திகழ்ந்தவர்கள். சித்தாந்த முரண்பாடுகளும் — வழக்கமாக எமது எழுத்தாளர்களுக்குள்ள தன்முனைப்பு ஆணவமும் இருந்தபோதிலும் பொதுவாகவே அவர்கள் அனைவரும் பெறுமதியானவர்கள்.தேசிய ஒருமைப்பாடு மாநாடு , வெள்ளிவிழா கருத்தரங்கு, பாரதி நூற்றாண்டுவிழா, எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், சிங்களப்பிரதேசங்களில் தமிழ் – முஸ்லிம் சிறுபான்மை மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகள் – கூட்டங்கள், மொழிபெயர்ப்பு பணிகள் கொழும்பில் மாதாந்தக் கருத்தரங்கு, யாழ்ப்பாணத்தில் 1986 ஆம் ஆண்டில், நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய மாநாடு உட்பட யாவற்றிலும் சங்கத்துடன் இணைந்தே பயணித்தேன். வேலை தேடும் படலத்திலிருந்த 1975 – 1977 காலகட்டத்தில் சங்கத்தின் முழுநேர ஊழியராகவும் இருந்தேன். எனது

பஸ் போக்குவரத்து செலவுக்கு சங்கம் மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தது.

எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் மூன்று நூல்களும் வெளியிட்டோம். பாரதி நூற்றாண்டு (1982-1983) காலத்தில் பாரதியின் சில கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்க்கச்செய்து வெளியிட்டோம். அவ்வேளையில் கொழும்பில் இலங்கை எழுத்தாளர்களின் ஒளிப்படக் கண்காட்சியும் பாரதி நூல்களின் கண்காட்சியும் , நாடு தழுவிய ரீதியில் பாரதி விழாக்களையும் நடத்தி, தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், சிதம்பர ரகுநாதன், ராஜம்கிருஷ்ணன் ஆகியோரையும் அழைத்தோம். யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலும் நூல் நிலைய மண்டபத்திலும் ஆசிரியப் பயிற்சிக்கலாசாலையிலும் கல்முனையிலும் அட்டாளைச்சேனையிலும் கண்டியிலும் நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்தப்பயணங்களில் தமிழக எழுத்தாளர்களுடன் இணைந்திருந்து வழிகாட்டியாகவும் இயங்கினேன். அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் வரும்வரையில் சங்கத்தின் கொழும்புக்கிளையின் செயலாளராகவும் இருந்தேன்.

ஆம், சுருக்கமாகச்சொன்னால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனது மற்றும் ஒரு தாய்வீடு.”

1987 இல் ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த பின்னர், தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எனும் கலைஞர்கள் படைப்பாளிகளுக்கான அமைப்பை உருவாக்கி அவர்களையும் ஊக்குவிக்கிறார் முருகபூபதி.

அத்துடன் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தையும் 1988 ஆம் ஆண்டில் ஆரம்பித்து தங்கு தடையின்றி இயக்கிவருகிறார்.

2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராகவும் செயல்பட்டார்.

சிறுகதைத் தொகுதி, புதினம், கட்டுரை , சிறுவர் இலக்கியம் , பயண இலக்கியம் , கடித இலக்கியம் , நேர்காணல் தொகுப்பு, புனைவு சாரா பத்தி எழுத்து , ஆய்வு என பன்முக தலைப்புகளில் 28 நூல்களை வெளியிட்டுள்ள முருகபூபதி பல இலக்கிய பேட்டிகளையும் உரைகளையும் காணொளியில் பதிவிட்டுள்ளார். இவரது கதைகள், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு இவர் எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, (The Mystique of Kelani River) பாரதி

தரிசனம் , வாழும் வரலாறு மல்லிகை ஜீவா, யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) ஆகிய நூல்கள் அமேசன் கிண்டிலில் வெளியாகியுள்ளன. உலகின் எந்தப்பாகத்திலிருக்கும் வாசகர்களும் இவற்றை தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

பல தசாப்தங்களாய் இலக்கியம் படைக்கும் திரு. முருகபூபதி அவர்களை இந்த ஆண்டு ஜூன் மாதம் 04ம் திகதி கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருது வழங்கி கௌரவித்தது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும். கனடா, ரொறொன்ரோவில் நடைபெற்ற விழாவில் முருகபூபதி கலந்துகொண்டு பல படைப்பாளிகளை சந்தித்து மட்டுமல்லாமல் அந்த சந்திப்புகள் பற்றி விபரமாய் தனது “எழுத்தும் வாழ்க்கையும்” தொடரில் தற்போது எழுதிவருகிறார்.

இலங்கையில் மல்லிகை, ஞானம் , ஜெர்மனியில் மண் முதலான இலக்கிய இதழ்களில் முருகபூபதி அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

” என் உழைப்பைக் கண்டு வியக்காதீர்கள். ஏனென்றால் எழுதுவதே எனது தொழில். அதுவே எனக்குத் தெரிந்த தொழில்” என்கிறார் இந்த தன்னடக்கச் சிற்பி!

விலகி நிற்போம் !

அவர் எழுதட்டும்!

ஓயும் வரை எழுதட்டும்!

 

கிறிஸ்டி நல்லரெத்தினம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.