இலக்கியச்சோலை
புலம்பெயர் மண்ணின் புலமை தேர்ந்த ஆங்கில ஊடகவியலாளர்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(ஈழத்தமிழர் வரலாற்றில் மிகமூத்த தமிழ் ஊடகவியலாளராக, லண்டன் TAMIL TIMES ஆசிரியராக திகழ்ந்த திரு.பி.இராசநாயகம் அவர்களின் முதலாவதுஆண்டு நினைவு தினம் ஜூன் 18)
இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வரலாற்றில் மிகமூத்த தமிழ் ஊடகவியலாளராக திகழ்ந்த திரு.பி. இராசநாயகம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் ஜூன் 18. கடந்த வருடம் நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தமிழர் விவகாரங்களில் சர்வதேச ரீதியாக பணியாற்றிய ஒரு சிறந்த சேவையாளரான லண்டன் TAMIL TIMES இராசநாயகம் மறைவு
பாரிய இழப்பாகும்.
இலண்டனில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்த ‘TAMIL TIMES’ என்ற ஆங்கில மாத சஞ்சிகையின் ஆசிரியராக திகழ்ந்த திரு.பி. இராசநாயகம் அவர்கள் ஆற்றிய பெரும் பணி, தமிழர்களின் ஊடக வரலாற்றில் தனி அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது.
தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் உச்சம் அடைந்த காலத்தில் சர்வதேச அளவில் ‘தமிழ் ரைம்ஸ்’ ஆற்றிய பணி அக்காலத்தின் உண்மையான சாட்சியமாகி விளங்கியது.
இங்கிலாந்தில் வெளியாகினும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் இல்லங்களிலெல்லாம் ‘TAMIL TIMES’ மாத இதழ் அவசிய வாசிப்புக்குரிய தொன்றாகவே இருந்தது. இந்த ஆங்கில சஞ்சிகை
பல்வேறு நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.
இப்பத்திரிகைக்கான வெளியீட்டில் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து திரு.பி. இராசநாயகம் அவர்கள் செயற்பட்ட விதம் ஆசிரியரின் ஆளுமையின் சிறப்பைக் காட்டிக் கொண்டதாகும்.
தமிழ் மக்களுக்காக ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பிலும் இராசநாயகம் நீண்ட காலம் அயராத பணியாற்றினார். தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த ராஜநாயகம் அவர்கள் ஒரு சமசமாஜிஸ்டாக ஆரம்பத்தில் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தவர். பின்னர் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் செயற்பட்டார்.
புலம்பெயர் மண்ணில் ஆங்கிலத்தில் இயங்கக் கூடிய புலமை தேர்ந்த பத்திரிகையாளராகவும் ஆகி லண்டனில் Tamil Times பத்திரிகையை நீண்ட காலமாப நடத்தி வந்தவர். புலம்பெயர் நாட்டு தமிழ்ச் சூழலில் குறிப்பாக புகலிட தமிழ்ச் சூழலில் Tamil Times பத்திரிகையின் பங்களிப்பை மிக்க அளப்பெரியது.
ஆசிரியர் ராஜநாயகம் தொகுத்த “Sri Lanka : Through Troubled times” என்கிற நூலின் இரண்டு தொகுப்புகள் வெளியாகி உள்ளன. இந்நூல்கள் ஈழப் போராட்டத்தின் சிறந்த வரலாற்றுத் தொடர் பதிவுகளின் தொகுப்பாக அமைகிறது.
திரு. P. ராஜநாயகம் அவர்களின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் பத்திரிகை தொகுப்பு பணிகளோடு ‘TAMIL TIMES’ சஞ்சிகையை மாதாமாதம் உரிய காலத்தில் வெளிக்கொணர்ந்ததில் அவருடய
நிர்வாகத் திறன் பளிச்சிடுகின்றது. அத்துடன் மிகப்பெரிய பணபலமோ, ஆளணியோ இல்லாத நிலையிலும், ஒரு தனிமனிதனாக நின்று அசாத்தியமான உழைப்போடு அப்த்திரிகையை தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்ததில் அவர் ஒரு சாத னையை நிலைநாட்டியிருக்கிறார்.
ஈழத் தமிழர்களின் எதிர்காலம் அறிவுத்தளத்தில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று அக்கறையுடன் செயற்பட்ட இந்த கல்விமானின் வரலாறு தமிழ் மக்களின் நினைவில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரம் ஆகும். அத்துடன் அவர் தான் சார்ந்து செயற்பட்ட அனைத்து விடயங்களிலும் ஒழுங்கு. நேர்மை, கண்ணியம், நேரந்தவறாமை, பிறரை மதிக்கும் உயர்பண்பு, மற்றவர்களுக்கு உதவும் பரோபகாரம் ஆகிய உயர்ந்த நற்பண்புகளை கொண்டவராகத் திகழ்ந்தார்.
இலண்டனில் நீண்ட காலமாக வெளிவந்த ஆங்கில பத்திரிகையின் வெற்றியானது அவரின், தாயக விடுதலை என்ற ஒருமித்த குறிக்கோளுடன் செயற்பட்டமைக்கு
தனித்துவ ஆளுமையே காரணமாகும்.தமிழர்களின் உரிமைக்காக தலையாய பங்கினை ஆற்றிய இராஜநாயகம் அவர்களுக்கு அஞ்சலியும் புகழ் வணக்கமும் உரித்தாக.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.