இலக்கியச்சோலை

நடிகராக அறிமுகமாகி, இயக்குநராக மாறிய கலைவாணன் கண்ணதாசன்!… முதல் சந்திப்பு…. முருகபூபதி.

கவியரசு கண்ணதாசனுக்கு பதினான்கு பிள்ளைகள். அவருக்கு மூன்று மனைவிகள் என்பது உலகறிந்த செய்தி.

தனது ஆண் பிள்ளைகளுக்கு தான் நேசித்த ஆளுமைகளின் பெயர்களையே சூட்டினார். கண்மணி சுப்பு ( பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம் ) காந்தி, கலைவாணன், அண்ணாதுரை.

இவர்கள் மூவரையும் சந்தித்திருக்கின்றேன். கண்மணி சுப்புவும், கலைவாணனும், அண்ணாதுரையும் , விசாலினியும் சினிமாவுக்குள் பிரவேசித்தனர். காந்தி, சட்டம் பயின்றுவிட்டு, கண்ணதாசன் பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்திலும் தலைவராக இருந்தார்.

1990 ஆம் ஆண்டு சென்னைக்குச்சென்றிருந்தபோது, பச்சையப்பன் கல்லூரியில் எங்கள் ஊர் நண்பர் விக்னேஸ்வரன் உயர் வகுப்பில் படித்துக்கொண்டே கண்ணதாசன் பதிப்பகத்திலும் பகுதி நேரமாக பணியாற்றினார். அத்துடன் கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு உதவி இயக்குநராகவும் இருந்தார்.

கலைவாணனை அவர் எனக்கு தனது பிறந்த தினத்தன்றுதான் அறிமுகப்படுத்தினார். மார்ச் மாதம் 24 ஆம் திகதி விக்னேஸ்வரனின் பிறந்த தினம். அவ்வேளையில் கலைவாணன் கண்ணதாசன், வா அருகில் வா என்ற திகில் – மர்மங்கள் நிறைந்த திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.

அந்தத் திரைப்படத்திற்காக கோடம்பாக்கத்தில் ஒரு அலுவலகம் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தில்தான் விக்னேஸ்வரன், கலைவாணனுக்கும் அந்த திரைப்படத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஏனையோருக்கும் மதியபோசன விருந்து வழங்கினார்.

அச்சமயம்தான் கலைவாணன் எனக்கு முதல் முதலில் அறிமுகமானார். அவர் நடிகராகவிருந்து இயக்குநரானவர். அவர்

முதலில் நடிகை ஷோபாவுடன் அன்புள்ள அத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

“ அந்தப்படத்தை நான் பார்த்திருக்கவில்லை “ என்றேன்.

“ நல்லது . மிகவும் நல்லது “ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

காரணம் கேட்டேன். “

“நடிப்பதில் ஆர்வம் இல்லை. இயக்குநராகிவிட்டேன். ” என்றார்.

கலைவாணனிடம் ஷோபாவின் தற்கொலை மரணம் பற்றிக்கேட்டேன்.

“ என்ன சொல்வது..? பாவம். அற்பாயுளில் அப்படி ஒரு முடிவை எடுத்துக்கொண்டார். இனி அதைப்பற்றி என்ன பேச இருக்கிறது . “ என்று சோகம் கப்பிய முகத்துடன் சொன்னார்.

அதற்கு மேல் நான் அவருடன் ஷோபா பற்றி மேலும் பேசவில்லை. எனக்கு மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அக்காலப்பகுதியில் ஷோபாவின் மரணம் பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

எழுத்தாளர் பாலகுமாரன் சாவி இதழில் நிருபராக பணியாற்றியபோது, ஷோபாவின் மரணம் அறிந்து அந்த வீட்டுக்குச் சென்றதையும், ஷோபா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த காட்சி பற்றியும், அந்த 1990 ஆண்டு அவருடனான சந்திப்பின்போது சொன்னார். பாலகுமாரன் பின்னாளில் எழுதியிருக்கும் முன்கதைச்சுருக்கம் என்ற தன்வரலாற்று நூலிலும் அச்சம்பவம் பற்றி எழுதியிருக்கிறார்.

அந்தனிதாசன் என்ற இயற்பெயரைக்கொண்ட எங்கள் எழுத்தாளர் ஒருவரும் ஷோபா மீதிருந்த அபிமானத்தினால், இலக்கிய உலகில் தனது பெயரை ஷோபா சக்தி என மாற்றிக்கொண்டார் என்பது மேலதிக தகவல்.

கலைவாணன் கண்ணதாசன், கண்சிமிட்டும் நேரம், மிஸ்டர் கார்த்திக் முதலான திரைப்படங்களையும் இயக்கியவர். வா அருகில் வா திரைப்படத்தில் ஒரு பொம்மைதான் கதையை நகர்த்திச் செல்கிறது. அதனை சிங்கப்பூரிலிருந்து பெறவேண்டியிருந்தது.

செளகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி, ராதா ரவி, விஜயசந்திரிக்கா, எஸ். எஸ். சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ராஜா ஆகியோர் நடித்த திரைப்படம்தான் வா அருகில் வா. கலைவாணனின் மூத்த சகோதரன் கண்மணி சுப்பு இத்திரைப்படத்திற்கான வசனங்களை எழுதியிருந்தார்.

நண்பர் விக்னேஸ்வரனின் பிறந்த தின விருந்தின்போது கவியரசரின் துணைவியார் பார்வதி அம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தி எமக்கு வந்தது. அவரை முதல்நாள்தான் சென்னை விஜயா மருத்துவமனையிலும் பார்த்துவிட்டு வந்திருந்தேன்.

செய்தி அறிந்ததும் கலைவாணனின் மாருதி காரில் விரைந்தோம். கண்ணதாசன் சாலையில் அமைந்திருந்த அந்த இல்லத்திற்கு அரசியல், சினிமா உலக பிரபலங்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

அந்த மாலைநேரம் இலங்கையிலிருந்து எனது குடும்பத்தினருடன் மல்லிகை ஜீவாவும் என்னைப்பார்க்க விமானம் ஏறியிருந்தார். பதட்டத்திலிருந்த என்னைத்தேற்றி விமான நிலையம் அனுப்பிவைத்தார் கலைவாணன்.

பழகுவதற்கு எளிமையானவர். கண்ணதாசனைப்போன்று சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவரது அறையில் தனிமையில் அமர்ந்து சிகரட் புகைத்துக்கொண்டே திரைப்படத்தில் வரவேண்டிய காட்சிகளை கற்பனையில் மனத்திரையில் பதிவுசெய்பவர்.

இவர் குறித்து சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. இவரை வண்டலூரில் இருந்த ஒரு கல்லூரியில் படிப்பதற்காக தந்தை கண்ணதாசன், அங்கிருந்த ஆண்கள் விடுதியில் அனுமதித்திருந்தார்.

சில நாட்களில் அங்கிருக்கப் பிடிக்காமல், ஒருநாள் இரவு மதிலேறிக்குதித்து வீட்டுக்கு ஓடிவந்துள்ளார். மீண்டும் இவரை அழைத்துச்சென்று கல்லூரியில் விட்டபோது, ஒரு கற்பனைக்கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

“ அருகிலிருந்த மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதற்காக சுற்றி வந்தேன். ஒரு மாங்காயைப் பறித்து உண்டேன், அது மிகவும் சுவையாக இருந்தது. சாப்பிட்டபின் அப்படியே தூங்கி விட்டேன். கண்விழித்து பாத்தபோது நான் மவுண்ட் ரோட்டிலே நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு எப்படி ஸ்கூலுக்கு திரும்பி வருவது என்பது தெரியவில்லை. அதனாலே அப்படியே நான் வீட்டுக்குப் போயிட்டேன்”

அண்மையில் வெளியாகியிருக்கும் மம்முட்டி நடித்துள்ள வித்தியாசமான திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம் கதையைப் போலிருக்கிறது அல்லவா..?

“ உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. “ என்ற திருக்குறள் வரியின் அடியொற்றி எழுதப்பட்ட திரைக்கதைதான் நண்பகல் நேரத்து மயக்கம்.

பள்ளிப்பருவத்திலேயே கற்பனைக் கதைகளை மனதில் உருவாக்கும் திறன்பெற்றிருந்த கலைவாணன், பின்னாளில் தனது

திரைப்படங்களுக்கான கதையையும் திரைக்கதையையும் எழுதினார்.

வா அருகில் வா திரைப்படத்திற்கு தேவைப்பட்ட பொம்மையின் வடிவமைப்பினை வரைந்து படத்தின் தயாரிப்பாளர் மணவழகன், எனக்கு முன்பே சிங்கப்பூருக்கு புறப்பட்டு வந்துவிட்ட கலைவாணனிடம் சேர்பிக்குமாறு தந்துவிட்டார்.

நண்பர் விக்னேஸ்வரனின் அக்கா திருமதி பத்மினி சற்குணராஜா வீட்டில் நான் தங்கியிருந்தபோது, கலைவாணன் வந்து பெற்றுக்கொண்டார். அதுவே அவருடனான இறுதிச்சந்திப்பு.

வா அருகில் வா 1991 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

தந்தையார் கண்ணதாசன் அமெரிக்காவில் சிக்காக்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உடனிருந்தவர்களில் கலைவாணனும் ஒருவர்.

கலைவாணன் கண்ணதாசனும் மிகக்குறைந்த வயதில் விடைபெற்றார்.

தற்போது அவரது மகன் ஆதவ் கலைவாணன் கண்ணதாசன் சினிமாவில் நடிக்கிறார்.

—000—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.