என் புனைவு எழுத்துப் பயணம்!… நடேசன்.
தமிழ்மொழிச் செயல்பாட்டகம்- இலண்டன்( 5-29-2023) பேசிய சாரம்)
எழுதுவது என்பது எனக்குத் திட்டமிட்டோ அல்லது எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடனோ உருவாகிய ஒன்றல்ல. என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலை என்னை எழுத்தாளனாக்கியது . இப்படியாகச் சொல்லும் எழுத்தாளர்கள் அரிது என நினைப்பீர்கள்.
உண்மையை மறைக்கமுடியுமா?
அவுஸ்திரேலியாவில் மெல்பேனில் விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் சகல வானொலிகளையும் கைப்பற்றி அரசியல் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், அரசியலில் மாற்றுச் சிந்தனை கொண்ட நண்பர்கள் தங்களுக்கு ஒரு ஊடகம் வேண்டும் என நினைத்தார்கள் அவர்கள் எல்லோருமாக உதயம் என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்த முடிவு எடுத்து, அதனது நிருவாக பொறுப்பை என்னிடம் அளித்தனர். நான் மிருக வைத்தியசாலையை ஆரம்பிக்கும் நிலையில் இருந்ததே அதற்கு காரணமாக இருந்தது. உதயம் பத்திரிகை 1997 ஏப்ரலிலும் எனது மிருக வைத்தியசாலை 1997மே மாதத்திலும் ஆரம்பமானது.
பத்திரிகைக்குக் கட்டுரைகள் சேர்த்து, பதிப்பித்து விநியோகிப்பது எனது வேலையாக இருந்தபோது, இலங்கையில் மதவாச்சியில் எனது மிருக வைத்திய அனுபவத்தை வைத்து நடுக்காட்டில் பிரேத பரிசோதனை என்ற கட்டுரையை 1997 மே மாதத்தில் எழுதினேன். அது எழுத்தாளர் முருகபூபதியால் சீராக்கி எழுதப்பட்டு உதயத்தில் வெளியாகியது. அந்த கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எனது வைத்திய அனுபவங்களைக் கட்டுரையாக்கி உதயத்தில் வெளியிட்டேன்.
கட்டுரைகளைப் பார்த்துவிட்டு மறைந்த எழுத்தாளர் எஸ் பொன்னுத்துரை அவற்றைப் புத்தமாக்குவோம் என்று தனது மித்ரா பதிப்பகத்தால் வாழும் சுவடுகள் என்ற பெயரில் அதைச் சென்னையில் பதிப்பித்தார். அந்த புத்தகம் மெல்பேனிலும் வெளியிடப்பட்டது . ஏற்கனவே மதவாச்சியில் வேலை செய்த காலத்துக் குறிப்புகள் என்னிடமிருந்து. அதை எஸ். பொ விடம் தெரிவித்தபோது அதை எழுதித் தரும்படி வலியுறுத்த அதை ‘வண்ணாத்திக்குளம் ‘ என்ற பெயரில் குறுநாவலாக்கினேன் . இரண்டு புத்தகங்களையும் திருத்தியது நண்பர் முருகபூபதி. அவற்றை எடிட் செய்து புத்தகமாக்கியது எஸ் பொ என்பதால் இருவருமே மிருக
வைத்தியனாகவும், சமூக செயல்பாட்டாளராகவும் இருந்த என்னை தமிழ் இலக்கியத்திற்கு என்னை அழைத்து வந்தனர்.
வண்ணத்துக்குளம் ‘ நான் நினைத்ததை விட முக்கியமாகியது. அதைத் திரைப்படமாக்க திரைப்பட டைரக்ரர் மகேந்திரன் அனுமதி கேட்டுத் திரைக் கதையாக்கினார். அதன் பின் பல காரணங்களால் திரைப்படமாகவில்லை. இன்னமும் அவரது திரைக்கதை புத்தகமாக என்னிடம் உள்ளது. நண்பர் நல்லைக்குமரன் தானாக ‘வண்ணாத்திக்குளம் ‘ நாவலை ஆங்கில மயப்படுத்தி பின்பு நண்பர் எச் எல் டி மகிந்தபாலாவால் அது சீராக்கப்பட்டு இலங்கையில் அது விஜித யாப்பா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை படித்துவிட்டு, பேராசிரியர் எலியேசரின் மனைவி ராணி எலியேசர் என்னிடம் 100 புத்தங்களை ஆயிரம் அவுஸ்திரிலிய டாலர்கள் தந்து வாங்கியது மட்டுமல்ல தனக்குத் தெரிந்தவர்கள், அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இலங்கை அரசியலை புரிந்து கொள்வதற்காக அனுப்பினார் . அதைவிடப் பதிப்பாசிரியர் விஜித யாப்பா தேடிவந்து ஒரு தொகையைத் தந்தார். முதல் புத்தகம் எனக்கு பணவருவாயைத் தந்தது எனலாம். வண்ணாத்திக்குளம் இலங்கையில் மடுல்கிரிய விஜவர்த்தனவால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டது
இவைகள் எனது முதல் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு என்பதால் என்னால் எழுதமுடியும் என்று நினைக்க வைத்தது.
இலங்கையில் எண்பதுகளில் நடந்த வெளியேற்றம் அல்லது அந்நியப்படுதல் என்ற கருத்தை வைத்து ‘வண்ணாத்திக் குளம் நாவலை எழுதிய நான், மீண்டும் ஏதாவது முக்கிய பொருளைக் கருவாக வைத்தே எழுதவேண்டும் எனச் சிந்தித்தேன்
அதன் பயனாக, இலங்கையில் நடந்த வன்முறையில் இறப்புகள், உடல் ஊனம், வெளியேற்றம் என்பவை ஏதோ ஒரு விதத்தில் பதிவு செய்யப்படுகிறது ஆனால் மனத்தில் ஏற்பட்ட காயங்களைப் பலர் வாழ்வு முழுவதும் சுமக்கிறார்கள் அவர்களைப் பற்றி எந்த பதிவோ, அவர்களுக்கு எந்த மன ரீதியான ஆற்றுப்படுத்தலோ நமது சமுகத்தில் இன்றுமில்லை இதை வைத்து 1983ம் ஆண்டு கலவரத்தில் மனரீதியாகக் காயமடைந்த சிறுமி பிற்காலத்தில் அந்த காயம் அவளது இல்லற வாழ்வில் எப்படித் தொடருகிறது என்பதை வைத்து ‘உனையே மையல் கொண்டு’ என்ற நாவலை எழுதினேன் அந்த நாவலுடன் , ‘வாழும் சுவடுகள்’ இரண்டாம் பாகத்தையும் எஸ் பொவே பதிப்பித்தார்
‘உன்னையே மையல் கொண்டு’ தமிழில் அதிகமாக வாசிக்கப்படாத நாவலான போதிலும் தமிழ்நெட், 1983 இனக்கலவரம் பற்றி வந்த முக்கிய நாவலாகத் தனது இணையத்தில் பதிந்திருந்தது ஆங்கிலத்தில்
பார்வதிவாசுதேவாவின் மொழிபெயர்ப்பில் விஜித யாப்பா அதை இலங்கையில் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள் .
இக்காலத்தில் உதயத்தில் பல அரசியல் கட்டுரைகளும் எழுதினேன் அவை பல சர்ச்சைகளை உருவாக்கியது. இதை விட உதயம் பத்திரிகை தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பத்திரிகை என முத்திரை குத்தப்பட்டு கடைகளிலிருந்து அகற்றப்பட்டது: எரிக்கப்பட்டது: அதன் நிர்வாக பொறுப்பாளராகிய நான் தமிழ்த் தேசியத்தின் எதிரியாக பார்க்கப்பட்டு என் மீது பல அவதூறுகள் எறியப்பட்டது அவற்றிற்குச் சிகரம் வைத்ததுபோல் எனது உருவப்படம் விடுதலைப்புலிகளது ஓமந்தை கண்காணிப்பு முகாமில் உள்ள புகைப்பட அல்பத்தில் கௌரவ இடம் பெற்றது.
இவைகளெல்லாம் எதிர்ப்புகளாக இருந்தாலும் ஊக்க மருந்தாக என்னை உற்சாகப்படுத்தியதுடன் என்னை ‘ அசோகனின் வைத்தியசாலை என்ற அரசியலற்ற 400 பக்க நாவலை எழுத வைத்தது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளைப் பாத்திரமாக வைத்து மனசாட்சி என்ற தத்துவத்தை( The Magic of Consciousness – Nicholas Humphrey ) அடிப்படையாக வைத்து எழுதினேன் . இந்த நாவலில் கொலிங்வூட் என்ற பூனை, அந்த மிருக வைத்தியசாலையில் நிலவும் மனசாட்சியின் பிரதிநிதியாக வருகிறது . இதன் மூலம் மனசாட்சி, இடம்- காலம் – இனம் -மதம்- அரசியல் என மாறுபடுகிறது எனக்காட்ட விரும்பினேன்
‘அசோகனின் வைத்தியசாலை ‘யில் கதைசொல்லியைத் தவிர சகலரும் வெளிநாட்டவர்கள் என்பதால் அதை முக்கியமான புலம்பெயர் நாவலாகப் தமிழகத்தில், எழுத்தாளர்கள் ஜெயமோகன் கவிஞர் இந்திரன் போன்றவர்கள் சிலாகித்தார்கள்.
எனது நான்காவது நாவல் ‘கானல் தேசம்’: அதனது முன்னுரையை வாசித்துவிட்டு பலர் புலிகளை விமர்சிக்கும் நாவல் எனத் திட்டினார்கள் ஆனால் ஆயுதப் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள்; முஸ்லீம்கள் என முத்தரப்பும் துன்பம் அனுபவித்தார்கள். அதை நிறுவச் சிங்கள மற்றும் முஸ்லீம் பாத்திரங்களுமாக கதை சொல்லப்பட்டது இலங்கை அரசியலில் 58 வன்செயல் நயினாதீவிலும் 77 தமிழர்களுக்கு எதிரான வன்செயல் நுவரெலியாவிலும் இடதுசாரித் தமிழர் ஒருவரது பார்வையில் சொல்லப்படுகிறது. விடுதலைப்புலிகளால் துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் பாத்திரமும் , சிங்கள இராணுவத்தினர் என இங்கு பாத்திரமாகிறார்கள். இப்படியான அரசியலுக்கப்பால் இது ஒரு காதல் கதை. ஒரு நாள் உடலுறவில் ஈடுபட்டதற்கான ஒரு பெண் ஆணை அடைய செய்யும் முயற்சிகள் இதிலுள்ளன. அவள் அவுஸ்திரேலிய உளவுப்பிரிவில் வேலை செய்தபோதிலும், காதலுக்கும் தொழிலுக்குக்கும் இடையிலுள்ள மனக் கொந்தளிப்பு இந்த நாவலில் உள்ளது. இதற்கான
ஒரு முன்னுதாரணத்தை ரோமானிய கவிஞர் வேஜலின்( Virgil) அனியட்( Aeneid) என் இதிகாசத்தில் வரும் டைடோ(Dido) என்ற கார்திரேஜ்(Carthage) இளவரசியின் கதையிலிருந்து அதைப் பெற்றேன். அவள் கிரேக்க இளவரசன் அனியசுடன்(Aeneas) ஒரு நாள் உறவு கொண்ட பின்பு அவனை அடைய முடியாது தன்னை தீ மூட்டி தற்கொலை செய்கிறாள்.
கானல் தேசம் முற்றாகப் படித்தவர்களுக்கு கரும்புலியான பெண் எதற்காக மரணிக்கிறாள் என்பது புரியும். ஆழமாகப் படித்தால் அதில் புலிகளுக்கெதிராக எந்த கண்ணிக் குறைவும் இல்லை என்பதும் புரியும்.
எனது ஐந்தாவது நாவல் பண்ணையில் ஒரு மிருகம் தமிழ் நாட்டுப் பண்ணையொன்றில் நான் வேலை செய்தபோது நடந்த சம்பவங்களைக் கொண்டு பின்னியது ஆணவக் கொலைக்குப் பழிவாங்க ஆவியாக வரும் இளம் பெண் பாத்திரத்துடன் மிருகங்களாகிய வேலன் என்ற கிடாய், சிவப்பி என்ற பசு, நீலன் என்ற காளைக் கன்றையும் எப்படி பாத்திரமாகின்றன எனப் புரிந்து கொள்ளலாம்.
எனது ஆறாவது நாவல் தாத்தாவின் வீடு, குடும்ப வன்முறையைக் கருவாக கொண்டது. ஆணின் வன்முறை,எப்படி தாய் குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஒரு கூட்டுக் குடும்பத்தை உடைக்கிறது என்பதை விளக்குகிறது .மேலும் மூளை விலகலுள்ளவனது எதிர்வு கூறல் இந்த நாவலை நகர்த்துகிறது. இந்த நாவல் ஒரு விதத்தில் நமது சமூகத்தின் படிமமான நாவலாகும். புதிய நாவலானதால் நான் அதிகம் பேசாது நீங்கள் பேசவேண்டும் என்பதால் எனது நாவல் புனைவு பற்றி இத்துடன் முடிக்கிறேன்.
அடுத்ததாக எனது சிறுகதைகளில் முக்கியமானதாக இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.
1)மெல்லுணர்வு
பெண்கள் பல விடயங்களை ஆண்கள்போல் நேரடியாகப் பேசுவதில்லை ஆனால் அதை மற்றவர்கள் முக்கியமாக தங்களது கணவரோ இணையோ புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பார்கள்.
எனது கதை யாழ்ப்பாணத்தில் கொளுத்த சீதனம் வாங்கி ஒரு முதலாளியின் மகளை திருமணம் செய்து, அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பொறியிலாளரின் கதை. அவரது திருமணத்தில் பிள்ளைகள் பிறந்தபோதிலும் உறவில் ஈரமில்லை, பிரிந்து தீவுகளாக கணவன் மனைவி வாழ்ந்தபோது , கணவன் தனது துணையாக அவுஸ்திரேலிய பெண்ணுடன் உறவாகிறார் . இருவரும் கடையொன்றிற்கு உணவருந்தப் போகும்போது அந்தப் பெண்ணின் நெற்றியில் அடிபடுகிறது . அது சாதாரணமாக அந்த பொறியியலாளருக்குத் தெரிகிறது அவர்கள் உணவுண்டபின் இரவில் படுக்கை அறை செல்லும்போது அந்த பெண் ‘உமக்கு மெல்லுணர்வு
கிடையாது. இன்று நான் தனியாகப் படுக்க விரும்புகிறேன்’ ‘ என மறுத்து பொறியியலாளரை அறையின் வெளியே அனுப்புகிறாள் எனக் கதை முடிகிறது
2)உருத்திரகுமாரன்: என் அரசியல் கதை. இலங்கை அரசியல் படிமமானது. இங்கு மலைநாட்டு இளைஞன் விடுதலைப்புலிகளில் சேர்ந்து அரசுக்கெதிராக போராடுகிறான். பின்பு காயத்தினால் விலகியதுடன் போர் நிறுத்த காலத்தில் மரக்கறிக் கடை வைக்கும்போது அவனிடம் இராணுவத்தினர் மரக்கறி வாங்குவதுடன் சிங்களம் தெரிந்ததால் நின்று பேசிப்போவார்கள் . இதை அவதானித்த விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு, அவனை ராணுவ உளவாளி எனக்கருதி அவனைப் பிடித்து ஒரு கூண்டில் அடைத்து சித்திரவதை செய்து விசாரிக்கிறார்கள். அவனுக்கு மூளை பேதலிக்கிறது . இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளது இடத்தை நெருங்கும்போது சித்திரவதைக்குப் பொறுப்பானவர் அவனது பொக்கட்டில் சிறிது பணத்தை வைத்துவிட்டுத் தப்பி செல்லெனச் சொல்லி விட்டு விலகுகிறார் . இராணுவம் மயக்கமாக இருந்தவனை வைத்தியசாலையில் வைத்து பராமரிப்பதுடன் அவனுக்குக் காவலாக ஒரு சிங்கள போர்வீரனை நியமிக்கிறார்கள் . பல காலம் சென்று மயக்கம் தெளிந்தவன் போர் முடிந்ததையும் விடுதலைப் புலிகளது தலைவர் இறந்ததையும் நம்ப மறுக்கிறான். இராணுவத்தின் மேலதிகாரிகள் மற்றும் செய்திகள், புகைப்படத்துக்களை நம்ப மறுக்கிறான் .
இறுதியில் அவனை மூளைப் பிசகானவன் என வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது அவனுக்குக் காவலாக இருந்த சிங்கள போர் வீரனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகக் கதை முடிகிறது.
எனக்கு இந்த சந்தர்ப்பத்தை அளித்த தமிழ்மொழிச் செயல்பாட்டகம் நண்பர் பௌசர் மற்றும் இங்கு வந்திருக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்.