இலக்கியச்சோலை
1981 ஜீன் 1: கலாசார படுகொலையின் உச்சம் ! எரிந்து சாம்பலான யாழ் நூலகம் !!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
தமிழர்மேல் எழுந்த ஆத்திரம், பகைமை, எரிச்சல் அவர்களுடைய சொந்த மண்ணிலே அரச பயங்கர வாதத்தால் யாழ் நூலகம் 1981 ஜீன் 1 இல் தீக்கிரையானது. இவ்வாறான பண்பாட்டு மையங்களை அழித்து இன்னோர் இனத்தின் எரிச்சலுக்கும் பகைமைக்கும் கொடுமைக்கும் காலாயுள்ள கருத்தோட்டங்களைப் ‘பேரினவாதத்தின் உச்சக்கட்டம் என்றே குறிப்பிடுவர். பெரும்பான்மையான ஓர்இனம் சிறுபான்மையினரை ஒடுக்கும் சிறுமையை நோக்கிய அவமானச் செயலாக இந்நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
இனமேன்மை வாதத்தின் ஒரு அதீத வெளிப்பாடு தான் யாழ் நூலக எரிப்பு. அந்த வெளிப்பாட்டின் தீங்கையும் கொடுமையையும் வெளிப்படுத்தும் ஆவணமாக வெளிவந்த “அணையாத அறிவாலயம்” கவிதை தொகுப்பில் இன்னும் இவர்கள் போதி மரத்தினில் ‘பிரித்’ ஓதல் வேண்டுமா? நல்ல நூல்களை எரித்து குளிர் காயலாமே! என்று ஆத்திரம் கலந்த எதிர்க்குறிப்போடு கவிதைகள் அனலாய் பாய்கின்றன. வாளேந்திய சிங்கக் கொடியாளர்கள் சிம்மாசனத்தில் ஏறிய பின் மக்கட் சிரங்களையே அறுத்தனரே அரசாள்வோர் ஹிட்லரின் அடிச்சுவட்டில் தொடரும் இனவாதம் ஹிட்லரை மீறுகின்றதோ! என வினா எழுப்பப்படுகிறது. யாழ்ப்பாண நூல் நிலையம் அழிக்கப்பட்ட கொடிய செயல் உணர்வுக் கூர்மையுள்ள தமிழ் உள்ளங்களை எவ்வளவு கடுமையாகத் தாக்கியுள்ளது என்பதை இக்கவிதைகள் மூலம் புலப்படுத்துகின்றன. தென்னாசியாவிலேயே அதிக நூல்களைக் கொண்ட சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள், சுவடிகளைக் கொண்ட அழகிய நூல்நிலையம் சிங்களப் பேரினவாதிகளால் எரிக்கப்பட்ட இச்சம்பவம் தமிழ்இன அழிப்பு என்ற சிங்கள இனவாதிகளின் மன எண்ணத்தை உலகிற்கே வெளிப்படுத்தியது எனலாம். தமிழ்மக்களின் பண்பாட்டு அறிவுப்பெட்டகமாகவும், அணையாத அறிவாலயமாக மிளிர்ந்த யாழ் நூலகம் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இளம் சீடர் காமினி திசாநாயக்கவின் மேற்பார்வையில் அரச பயங்கரவாத உச்சத்தில் 1981 ஜீன் 1 ஆம் திகதி தீ மூட்டி எரிக்கப்பட்ட கொடூர நாளாகும். அடக்குமுறை அரசுகளின் தொடர்ச்சியான 1958 ,1977 , 1983இல் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட இனக்கலவரங்களால் தமிழர்களின் பொருளாதார வளங்களும், அறிவியல், பண்பாட்டு நிலையங்களும் அழித்து நாசமாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே யாழ். நூலகமும் தீக்கிரையானது. இச்செயல்கள் அனைத்தும் அரசின் திட்டமிடப்பட்ட செயலாகவே அமைந்தன. யாழ். எம்.பி.யின் வீடு, ஈழநாடு பத்திரிகை அலுவலகம், நகர வர்த்தக நிலையங்கள், ஆகியனவும் நாச்சிமார் கோவிலும் இக்கால வேளையிலேயே எரித்து நிர்மூலமாக்கப்பட்டன. இவ் எரிப்புகள் எல்லாவற்றிலும் மேலாக யாழ். நூலகம் எரிக்கப்பட்டதே தமிழ் பேசும் மக்களின் பாரிய இழப்பாகும். தென்கிழக்காசியாவில் முதன்மையாக விளங்கியது இப்பொதுசன நூலகம். மேலும் சர்வதேச நூலக மட்டங்களுடனும் யாழ் நூலகம் சிறப்பான நிலையிலிருந்தது. அச்சியந்திர சாதனங்கள் எழுமுன்பாக கையால் எழுதப்பட்ட சுவடிகள், பனையோலை வாசகங்கள் இப்படியாக தொல்பொருள் நிலையம் போன்ற யாழ் நூலகம் செயற்பட்டு வந்தது. நூலக காங்கிரஸில் யாழ் நூலகம் அங்கத்துவம் வகித்தது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ் நூலகத்தின் மற்றோர் சிறப்பு அக்கட்டிடத்தின் சிற்ப அமைப்பே எனலாம். யாழ் நூலக கட்டிடம் தமிழரின் வரலாற்றுப் பொக்கிசமாகவே அனைவரையும் கவர்ந்தது. அக்காலத்தில் இந்த நூல்நிலையம் எரிக்கப்பட்ட செய்தியை முற்றாக இருட்டடிப்புச்செய்ய ஜெ.ஆர். அரசாங்கம் முயற்சித்தது. இச் சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட லயனல் பெர்னாண்டோ விசாரணைக்குழு ஒரு கோடி ரூபா நட்டஈடுவழங்குமாறு அரசாங்கத்தைப் பணித்தபோதும் நட்ட ஈட்டுத் தொகையாக ஒரு ரூபாவைக்கூட வழங்க ஜே.ஆர். அரசாங்கம் முன்வரவில்லை. இதற்காக மன்னிப்புக் கோரவோ நட்டஈடு வழங்கவோகூட முன்வராத ஜெ.ஆர் ஜெயவர்த்தனவும் அவரது படைகளும் பின்னரும் பல சிறிய நூலகங்களைச் சிதைத்தது கசப்பான வரலாறு தான். தமிழ் மக்களின் அரிய சொத்தாக யாழ் நூலகம் விளங்கியது. தமிழ் வாசகர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் நாடிச் செல்லும் ஒரு கேந்திர நிலையமாக அது அமைந்தது. தமிழ் மக்களின் தேசிய மேம்பாட்டின் அடையாளமாகவே யாழ் நூலகம் விளங்கியது. பண்பாட்டுப் படுகொலையின் அதி உச்சமான இக்கொடூர நிகழ்வை அகிலம் பூராக வெளிப் படுத்தப்படல் வேண்டும். மனித வாழ்வியத்தின் இழுக்கேடாக நிகழ்ந்த கலாச்சாரப் படுகொலையான யாழ் நூலகத்தின் எரிப்பினை தமிழ் மக்கள் என்றும் நினைவு கூர்ந்து கொள்வர். யாழ்நூலகம் எரிந்ததனை சந்ததி மறவாச் சரித்திரமாக வரலாற்றில் நிலைத்து நிற்கும். இந்நூல் நிலைய எரிப்பு மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மூட்டிய தீயின் வெம்மை இனவிடுதலைப் போராட்டத்திற்கு மேலும் உரமூட்டியது என்பதே உண்மை. சர்வாதிகாரி, கொடூர ஹிட்லர் கூட தன் படைகளுக்கு இட்ட கட்டளைகளில் ஒன்று நூல் நிலையங்களை அழிக்கக்கூடாது என்பதாகும். ஆனால் ஜெ.ஆரின் படைகள் அதனையும் விட்டு வைக்காமல் எங்கள் அணையாத அறிவாலயத்தை எரித்து, மாறாத வரலாற்று வடுவை தமிழ்மக்கள் மனதில் ஏற்படுத்தினர்.– ஐங்கரன் விக்கினேஸ்வரா