கவிதைகள்
ஆனந்தமோ ஆனந்தம்!…. ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
அம்மாவின் கையணைப்பில்
உறங்குவது ஆனந்தம்
அப்பாவின் தோள்மீது
ஏறுவது ஆனந்தம்
தாத்தாவின் கைத்தடியை
சுழற்றுவது ஆனந்தம்
பாட்டியது வெற்றிலையை
தின்னுவதும் ஆனந்தம் !
அக்காவின் பின்னலினை
பிடித்திழுப்ப தானந்தம்
அண்ணாவின் உடுப்புகளை
அணிவது ஆனந்தம்
தம்பியின் கைபிடுத்து
ஓடுவது ஆனந்தம்
தங்கையைத் தாலாட்டி
விடுவதுவும் ஆனந்தம் !
மழைபெய்யும் வேளையிலே
நனைவது ஆனந்தம்
மாமரத்தில் கல்லெறிந்து
காய்தின்னல் ஆனந்தம்
தினமுமே சர்க்கரைப்
பொங்கலுண்ணல் ஆனந்தம்
தீந்தமிழில் பண்ணிசைத்து
பாடிவிடல் ஆனந்தம் !
அமுதான தமிழ்ப்பாடல்
கேட்டுவிடல் ஆனந்தம்
ஆலமர விழுதினிலே
ஆடிநிற்றல் ஆனந்தம்
நிலவெறிக்கும் வேளையிலே
வெளிநிற்றல் ஆனந்தம்
உளமகிழ நண்பருடன்
உலவுவது ஆனந்தம் !
குடும்பமாய் கோயிலுக்குச்
செல்லுவது ஆனந்தம்
குமரனது தேர்வடத்தை
பிடித்திழுத்தல் ஆனந்தம்
அரோகரா நாமமதை
உரத்துரைத்த லானந்தம்
அடியார்கள் கூட்டமதில்
நிற்பதுவும் ஆனந்தம் !
பச்சையிலே மால்மருகன்
பார்த்துவிடல் ஆமந்தம்
பஞ்சாராத்தி பார்த்துவிடில்
ஆனந்தமோ ஆனந்தம்
விபூதிப் பிரசாதம்
கைவந்தால் ஆனந்தம்
வீதியிலே கால்படுதல்
ஆனந்தமோ ஆனந்தம் !
-
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்மெல்பேண் … அவுஸ்திரேலியா