சினிமா: பார்த்ததும் கேட்டதும் முருகபூபதியின் முப்பதாவது நூல்!…. ( நூல் அறிமுகம் )
படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி, இதுவரையில் சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், ஆய்வு, புனைவு சாராத இலக்கியம் முதலான துறைகளில் எழுதி வந்திருப்பவர்.
தற்போது சினிமா தொடர்பான புதிய நூலொன்றையும் வரவாக்கியிருக்கிறார்.
யாழ். ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல் அவருடைய முப்பதாவது வெளியீடாகும்.
இந்நூலுக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் முகப்போவியம் வரைந்துள்ளார்.
வீரகேசரி, தினக்குரல், தீம்புனல், காட்சிமொழி முதலான இதழ்களிலும் தமிழ்நாடு திண்ணை, கனடா பதிவுகள், அவுஸ்திரேலியா தமிழ் முரசு – அக்கினிக்குஞ்சு, ஜெர்மனி தேனீ ஆகிய இணைய இதழ்கள், நடேசனின் வலைப்பூ ஆகியவற்றிலும் வெளியான கட்டுரைகள் மற்றும் மெல்பன் வானமுதம் வானொலியில் ஒலிபரப்பான கட்டுரையும் இடம்பெற்றுள்ள தொகுப்பு: சினிமா: பார்த்ததும் கேட்டதும்.
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும், பாதி உண்மையாகிப்போன ஓம்புரி, தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும், கவிதையும் திரைப்படப் பாடல்களும், முள்ளும் மலரும் மகேந்திரன் ( 1939 – 2019 ) , மனோரமா ஆச்சி ( 1937 – 2015 ) , இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ், இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா , சிலையாகும் சரித்திரங்கள், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் (1919 -2018 ), தர்மசேன பத்திராஜ ( 1943 – 2018 ), பௌர்ணமியில் ஒரு மரணம் Death on a Full moon day, ஈழத்து கலைஞர்களின் பொன்மணி, சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும்- மற்றும் எதிர்வினைகளும், பேசாப்பொருளை பேசத்துணிந்த President Supper Star திரைப்படம் முதலான தலைப்புகளில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரைகளில் இந்திய தமிழ், ஹிந்தி, மற்றும் இலங்கை தமிழ் –
சிங்கள சினிமா குறித்தும் பேசப்படுகிறது. இந்நூலில் பதினாறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
“ இனம், மதம், மொழி கடந்து அனைத்து கலைஞர்கள், எழுத்தாளர்களுடனும் முருகபூபதி நல்லுறவைப் பேணி வருபவர் என்பதற்கும் இந்நூல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது “ என்று இந்த நூலை வெளியிட்டுள்ள யாழ். ஜீவநதி இலக்கிய இதழின் ஆசிரியரும் ஜீவநதியின் பதிப்பாளருமான கலாமணி பரணீதரன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிகளுக்கு:
ஜீவநதி: கலை அகம்,
சாமணந்தறை ஆலடி பிள்ளையார் வீதி
அல்வாய் வடமேற்கு.
அல்வாய்.
இலங்கை jeevanathy@yahoo.com