இலக்கியத்திலிருந்து நிருவாக சேவைக்கு பிரவேசித்த உடுவை தில்லை நடராசா!…. முருகபூபதி.
முதல் சந்திப்பு!….
இலங்கையில் அரசுக்கும் மக்களுக்கும் நடுவிலிருந்து நிருவாக சேவையாற்றுவதற்கு தனித்திறமை வேண்டும். பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு, முன்யோசனை, தீர்க்கதரிசனம், செயலூக்கம், மக்கள் நலன் சார்ந்த இராஜதந்திரம்.
இவையனைத்தும் மாத்திரமல்ல, உள்ளார்ந்த விழிப்புணர்வும் வேண்டும். ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, வறுமையின் இலட்சணம் எவ்வாறிருக்கும் என்பதையும் அனுபவித்து, அதனையும் கடந்து வந்து, பட்டதாரியாகி நிருவாக சேவைப் பரீட்சையிலும் சித்தியடைந்து அரச உயர்பதவியை அலங்கரித்து மக்களுக்கு சேவையாற்றிய ஒருவர் பற்றித்தான் இந்த அங்கத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
வட இலங்கையில் உடுப்பிட்டி கிராமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியின் புதல்வனாகப் பிறந்து நாட்டின் சில பாகங்களில் நிருவாக சேவையாளராகவும் வவுனியா மாவட்டத்தின் அரச அதிபராகவும், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்து ஓய்வுபெற்றிருக்கும் எழுத்தாளர், கலை, இலக்கிய ஆர்வலர், நாடக நடிகர் உடுவை தில்லை நடராசாவை நான் இலங்கையில் முதலில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.
எம்மிருவரையும் இணைத்தது இலக்கியம்தான்.
இலங்கையில் நீடித்துக்கொண்டிருந்த போரினால் தந்தைமாரை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன் 1988 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நாம் ஆரம்பித்திருந்த, தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு வவுனியா மாவட்டத்தில் எமக்கு ஒரு மாணவர் கண்காணிப்பு தொடர்பாளர் தேவைப்பட்டிருந்தார்.
வடமராட்சியில் எழுத்தாளர் தெணியானும் வலிகாமத்தில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரனும் கிடைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஆசிரியர்கள். அத்துடன் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தவர்கள்.
வவுனியாவிலும் ஒருவர் தேவைப்பட்டபோது எனது மனக்கண்ணில் தோன்றியவர்தான் இந்த இலக்கியவாதி உடுவை தில்லை நடராசா. 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர் வெளியிட்ட நிர்வாணம் என்ற கதைத் தொகுதி எனது பார்வைக்கு கிடைத்தது. இதனை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டிருந்தது. இந்த நூலை அக்காலப்பகுதியில் நெல்லியடியில் நடந்த விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலில் தனது முழுக்குடும்பத்துடனே பலியாகிப்போயிருந்த எமது இனிய நண்பர் நெல்லை. க. பேரனுக்கே சமர்ப்பணம் செய்திருந்தார் உடுவை தில்லை நடராசா.
இந்த நூலுக்கு அட்டைப்படம் வரைந்திருந்தவரும் எனது இனிய நண்பர், பாடகர், கலைஞர் ஶ்ரீதர் பிச்சையப்பாதான். பின்னாளில் இவரும் அற்பாயுளில் மறைந்தார். இந்நூலின் பின்புற அட்டையில் உடுவை தில்லை நடராசா பற்றி கவித்துவமான ஒரு குறிப்பினை எழுதியிருந்தவர் மற்றும் ஒரு இலக்கிய நண்பர் வி. மைக்கல் கொலின்.
குறிப்பிட்ட நூலே என்னை எழுத்தாளர் உடுவை தில்லை நடராசாவை நெருங்கச்செய்தது.
வவுனியா மாவட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு நாம் அனுப்பிய நிதிக்கொடுப்பனவுகளை நேரில் சென்று வழங்குவதற்கு முன்வந்தவர்தான் உடுவை தில்லை நடராசா.
தனது ஊரின் பெயரை முன்னிருத்தி எழுதிய பல எழுத்தாளர்களை நாம் பின்னர் அந்த ஊரின் பெயரைச்சொல்லியே விளிப்பதும் வழக்கமாகியது. அவ்வாறு எமது ஈழத்து கலை, இலக்கியப்பரப்பில் புகழ்பெற்ற ஊர்களின் பட்டியலையும் இந்தப்பதிவில் தருகின்றேன்.
திக்குவல்லை, மாவை, வதிரி, வரணி, மருதூர், சில்லையூர், காவலூர், திக்கவயல், நீர்கொழும்பூர், உடப்பூர், வாகரை, தில்லையடி, யாழுர், நீர்வை, நெல்லை, வடகோவை, குப்பிழான், கிண்ணையடி, கல்வயல்….
தில்லை நடராசா தமது பூர்வீக ஊரான உடுவிலை தமது பெயரின் முன்பாக இணைத்துக்கொண்டமையால் உடுவை என்றே இவரை அழைக்கத்தொடங்கிவிட்டோம்.
அவுஸ்திரேலியாவில் நாம் கன்பரா மாநிலத்தில் நடத்திய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்கு இவர் வருகை தந்தவேளையில்தான் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
குறிப்பிட்ட 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மெல்பனில் விக்ரோரியா கலாசார கழகம் நடத்திய தமிழர் திருநாளிலும் கலந்துகொண்டார். அன்றைய தினம் அவ்விழாவுக்கு வருகை தந்திருந்த விக்ரோரியா மாநில அரசியல் பிரமுகர்களுக்கும்
பல்தேசிய கலாசார ஆணையாளருக்கும் தைத்திருநாளின் மகத்துவம் பற்றியும், தைப்பொங்கலை தமிழர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது பற்றியும் ஆங்கிலத்தில் எடுத்துரைத்து விளக்கினார்.
வவுனியா அரசாங்க அதிபர் செயலகத்திற்குச்சென்றால், இவரது உருவப்படமும் அங்கு சுவரில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம்.
ஒரு தடவை அங்கு நான் சென்றபோது திருமதி சார்ள்ஸ் அரச அதிபராகவிருந்தார். உடுவையின் படத்தை காண்பித்து இவர் எமது இலக்கிய நண்பர் என்று அவரிடம் பெருமையுடன் சொன்னேன்.
அறிமுகமான காலம் முதல் இலக்கிய உலகில் சகபயணியாக தொடர்ந்து வரும் நண்பர் தில்லை நடராசா, பொலிஸ் திணைக்களத்திலும் சந்திரிக்கா விஜயகுமராணதுங்கவின் பதவிக்காலத்தில் அந்த அரசின் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராகவும், பின்னாளில் மகிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் அரச பொதுச்சேவை ஆணைக்குழுவிலும் பதவிகளை வகித்தவர்.
தான் கடந்து வந்திருக்கும் பாதையை மறக்காமல், தினமும் காலையில் துயில் எழும்போதும், இரவில் உறங்கச்செல்லும்போதும் தனது பெற்றோர்களின் உருவப்படங்களை வணங்கி வரும் பழக்கத்தையே வழக்கமாக்கிக்கொண்டிருப்பவர்.
யாழ்ப்பாணத்தில் ஒருகாலத்தில் தமது தந்தையார் பணியாற்றிய பிரசித்திபெற்று விளங்கிய உணவு விடுதியான தில்லை கிளப்பின் இன்றைய சிதைந்துபோன காட்சியை தரிசித்து நனவிடை தோய்ந்திருக்கும் உடுவை தில்லை நடராசா, பெற்றவர் பற்றி எழுதிய அப்பா என்ற நூலை மல்லிகை பந்தல் வெளியிட்டது. இந்த நூல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
தமது மாணவப் பருவத்திலேயே மாணவன் என்ற இதழை வெளியிட்டிருக்கும் இவர், எத்தனையோ அரச உயர் பதவிகளுக்கு வந்திருந்தபோதிலும் கலை, இலக்கியத் தாகத்துடன் தொடர்ந்தும் இயங்கிவருகிறார்.
தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றுக்கும் சென்று அங்கு நடந்திருக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றிருப்பவர்.
ஒரு தடவை இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இவருக்கு வாழ்த்துக்கடிதமும் அனுப்பியிருக்கிறார். தனது
மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை அரசியல் தலைவர்களிடம் சேர்ப்பித்து வந்திருப்பவர்.
எம்மில் எத்தனைபேர், எமது பெற்றவர்கள் பற்றிய பதிவுகளை எழுதியிருக்கின்றோம்..? என்ற கேள்வியுடன் இலக்கிய நண்பர் உடுவை தில்லை நடராசா பற்றிய இந்த முதல் சந்திப்பு பத்தியை நிறைவு செய்கின்றேன்.
—0—