உழைக்கும் மக்களின் சமூக விடுதலை போராளி ! மக்கள் இலக்கிய சிருஷ்டி -தெணியான் ! —- – ஐங்கரன் விக்கினேஸ்வரா
மே 22 மக்கள் இலக்கிய சிருஷ்டியான தெணியானின் முதலாவது நினைவு தினம்.உழைக்கும் மக்களின் சமூக விடுதலை போராளியாக மக்கள் இலக்கியம் படைத்தவர்)
தமிழ் எழுத்துத் துறையில் கால் பதித்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் போராளியாக விளங்கியவர். தெணியானின் எழுத்துக்களை மிகநீண்ட காலமாக உன்னிப்பாக அவதானித்தால் ஈழத்தின் தலைசிறந்த இலக்கிய சிருஷ்டியாகவே அவர் வரலாற்றில் தடம்பதித்துள்ளார்.
ஈழத்துப் படைப்பிலக்கிய வரலாற்றில் “தெணியான்” என்ற பெயர் ஆழப்பதிந்துள்ளமை என்பது இன்றுவரலாற்றுச் சான்றாகுயுள்ளது.
சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்து, அவற்றைத் தமது படைப்புகளாகத் தந்த எழுத்தாளர் தெணியான், குறிப்பாக சாதி அமைப்பின் அவலங்கள் குறித்து மிக அதிகமான எண்ணிக்கையிலான சிறுகதைகளைப் படைத்த எழுத்தாளர் என்ற சிறப்பையும் பெறுபவர். 1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும் சிறுகதையுடன் இவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது. பொலிகண்டி கிராமத்தின் ’தெணி’ என்னும் பகுதியில் சந்ததி சந்ததியாகப் பல காலம் வாழ்ந்துவந்த இவரது குடும்பத்தவர்களை ஊரவர்கள் ’தெணியார்’ என அழைக்கும் வழக்கம் இருந்தமையால், ’தெணியான்’ என்ற புனைபெயரையே இவரும் தமதாக்கிக்கொண்டார்.
சுமார் 150 சிறுகதைகள், 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்புலக அறுவடைகள்.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மத்தியில் அவர்களுள் ஒருவராகவே தெணியான் வாழ்ந்து கொண்டிருந்து மக்கள் இலக்கியத்தை படைத்துள்ளார். விடிவை நோக்கி’ வீரகேசரி வெளியீடு, கொழும்பு (1973), ‘கழுகுகள்’ நர்மதா வெளியீடு, சென்னை (1981), ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ முரசொலி வெளியீடு, யாழ்ப்பாணம் (1989), ‘மரக்கொக்கு’ நான்காவது பரிமாணம் வெளியீடு, கனடா (1994), ‘காத்திருப்பு’ பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு (1999), ‘கானலின் மான்’ பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு (2002), ‘தவறிப்போனவன் கதை’ கொடகே சகோதரர்கள் வெளியீடு, கொழும்பு (2010), ‘குடிமைகள்’ ஜீவநதி வெளியீடு, அல்வாய் (2013) என்பன அவரது நாவல்கள்.
தெணியானின் படைப்புக்கள் வெறும் கற்பனை மனிதர்களைப் பாத்திரங்களாக உருவாக்கி நடமாட விடுவதில்லை. அவருடைய படைப்புக்கள் யதார்த்தமானவை. நிதர்சனமான காலக் கண்ணாடிகளே அவரின் படைப்புக்கள். ‘சிதைவுகள்’ மீரா பதிப்பக வெளியீடு, கொழும்பு (2003), ‘பனையின் நிழல்’ மயூரன் நினைவு வெளியீடு, அல்வாய் (2006) ஆகியன குறுநாவல்கள்.
‘சொத்து’ என்.சி.பி.எச். வெளியீடு, சென்னை (1984), ‘மாத்து வேட்டி’ மல்லிகைப் பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம் (1996), ‘இன்னொரு புதிய கோணம்’ பூமகள் வெளியீடு, கொற்றாவத்தை (2007), ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு (2010), ‘தெணியான் ஜீவநதிச் சிறுகதைகள்’ ஜீவநதி வெளியீடு, அல்வாய் (2012) என்பன தெணியானின் இதுவரை வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளாகும்.
எந்தக் காலத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும், தாயக மண்ணை, தமிழ் மக்களை விட்டுத் தூரவிலகி ஓடிப்போகாத ஒருவரே தெணியான். ‘இன்னும் சொல்லாதவை’ வாழ்வனுபவங்கள், எழுத்து வெளியீடு, மதுரை (2011), ‘நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் – பேராசிரியர் கா. சிவத்தம்பி’ குமரன் புத்தக இல்லம், கொழும்பு (2012), ‘பூச்சியம், பூச்சியமல்ல’ இலக்கிய அனுபவங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை (2013), ‘மனச்சோடு பழகும் மல்லிகை ஜீவா’ ஹப்பி டிஜிரல் சென்ரர் வெளியீடு, கொழும்பு (2014) என்பன தெணியானின் கட்டுரைத் திரட்டுக்களாகும். மேலும் ‘டொமினிக் ஜீவாவின் ‘ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்,’ ‘தேவரையாளி’ இரண்டு வெளியீடுகள், ’மல்லிகை ஜீவா’ – (இணையாசிரியர்), ‘அரும்புகளின் கீதங்கள்,’ ‘மூடிமறைக்காதீர்’ என்பன தெணியான் இதுவரை தொகுத்து வழங்கிய நூல்களாகும்.
அவர் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை தான் வரிந்து கொண்ட கொள்கையில் இருந்து தளம்பாது நேரிய நோக்குடன் இருந்து வருபவர். அதனால் இந்தச் சமுதாயத்தில் இருக்கும் யதார்த்தமான பிரச்சினைகளே தெணியானது்இலக்கியங்களாகப் பிறந்தன. வாழ்நாள் இலக்கியப் பணிக்கென இலங்கை அரசு ’சாகித்திய ரத்னா’ (2013), இலங்கை இந்து கலாச்சார அமைச்சு ‘கலாபூஷணம்’ (2003), வடக்கு மாகாணக் கலாச்சாரத்துறை இலக்கியத்திற்கான ஆளுனர் விருது (2008) என்பவற்றை வழங்கி தெணியானைக் கௌரவித்துள்ளன.
ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியம். இச்சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான உந்துசக்தியாக இலக்கியத்தைக் கருதும் தெணியான், ஒடுக்கப்பட்டோர் அழகியலைத் தமது ஆக்கத் திறன் மூலம் தொடர்ந்தும் அழகுபடுத்தி வந்தவர்.இவற்றின் பெறுபேறாக, ஈழத் தமிழிலக்கியப் பரப்பில் விசேட கவனிப்புக்குரிய ஆற்றல் மிகு படைப்பாளியாக இன்றுவரை கணிக்கப்படுபவராவார்! ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மிகுந்த அக்கறையுடன் அவதானித்து இலக்கியங்களை படைத்தவர் தெணியான்.
அடக்கப்பட்ட மக்களின் அவலங்களை எல்லோரும் அறியும் வண்ணம் சுட்டிக் காட்டி வெளியே வருவதை நோக்கமாகக் கொண்டு எழுதியவர் தெணியான். தெணியானின் நாவல்களான ‘கழுகுகள்’ நாவல் ’தகவம்’ பரிசையும், ‘மரக்கொக்கு’ இலங்கை அரசினதும் வடகிழக்குமாகாண அரசினதும் சாகித்திய விருதுகளையும், தேசிய இலக்கியப் பேரவைப் பரிசையும், ’காத்திருப்பு’ வடகிழக்கு மாகாண அரசினது பரிசையும், ’கானலின் மான்’ இலங்கை அரசினது சாகித்திய விருதையும், தேசிய கலை இலக்கியப் பேரவைப் பரிசையும், ’குடிமைகள்’ இலங்கை அரசின் சாகித்திய விருதையும் கொடகே விருதையும் ‘சிதைவுகள்’ குறுநாவல் தேசிய கலை இலக்கியப் பேரவைப் பரிசையும், சுபமங்களா பரிசையும், ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத் தொகுதி கொடகே விருதையும் பெற்ற படைப்புகளாகும்.
நலிந்து துன்பப்படும் மக்கள் தமது பிரச்சினைகளைத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவைகளில் இருந்து விடுபடுவதற்குரிய உணர்வுபூர்வமான பிரக்ஞையை அவர்களுக் கூட்ட வேண்டும் என்பதே தெணியானின் எழுத்தின் குறிக்கோளாக இருந்தது.
தெணியான், சிறுபராயத்திலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் நாட்டம் கொண்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தளகர்த்தர்களுள் ஒருவராக விளங்கியவர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து, ஆலயப் பிரவேசம், தேனீர்க்கடைப் பிரவேசம் போன்ற பன்முகப்பட்ட சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் நேரடியாகப் பங்குகொண்ட ஒரு சமூக விடுதலைப் போராளி. ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியமாக விளங்கியது.
அடக்கி் ஒடுக்கப்பட்ட இச்சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான உந்துசக்தியாகதெணியானை சாதிப் பிரச்சனை தவிர வேறெதையும் எழுத முடியாதவர் எனச் சிலர் விமர்சித்துள்ளனர். ஆயினும் தெணியானின் எழுத்துக்களை படித்தவர்களுக்கு இப்பிரச்சனையை அவர் எவ்வளவு நிதானமாக பதிவு செய்திருக்கிறார் என்பது புலப்படும்.
யதார்த்த நிதானம் தவறிக் கொட்டியழும் சில படைப்புக்களிடையே தெணியானின் நிதர்சன எழுத்தின், யதார்த்த படைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
தெணியான் உண்மையில் அவர் சாதியம் பற்றி மட்டும் எழுதிய எழுத்தாளர் அல்ல. மனிதரின் வாழ்வியல் பற்றிப் புரிந்துணர்வோடு எழுதும் எழுத்தாளராக தன்னை விரிவுபடுத்தியுள்ளமை தெரிகிறது, சாதியால் இழிவுபடுத்தப்பட்டவர்கள் பற்றியும் தெணியானின் எழுத்துக்களில் காணலாம். அத்துடன் பொருளாதார ரீதியாக அடக்கப்பட்டவர்கள் பற்றியும் தெணியானின் எழுத்துக்களில் காணலாம். இனரீதியாகத் துன்பத்திற்கு ஆளாக்கும் தமிழரின் தேசிய பிரச்சனை பற்றியும் தெணியான் பல படைப்புக்களை எழுதியுள்ளார்.
தெணியானின் ஆக்கங்களாக வெளிவந்த படைப்புக்கள் அனைத்தும் ஆய்வாளர்களின் சிந்தனைகளைக் கிளறிவிட்டுள்ளன எனக் கூறலாம்.
படைப்பியல் இலக்கியம் வெறும் பொழுது போக்கிற்கான சாதனமன்று. ஆழ்ந்த சமூக நோக்குடன் எழுத்தாளன் சொல்லுவது தனது தனிப்பட்ட, சமூக ரீதியான வாழ்க்கையின் நடைமுறைச் செயற்பாட்டினது சத்தியமான வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர் தெணியான்.
மறைந்த தெணியான் ஆரம்பக் காலம் முதலே இடதுசாரி முற்போக்கு சிந்தனைகளோடும் அவை சார்ந்த போராட்டங்களோடும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டங்களோடு தன்னைஇணைத்துக் கொண்டு அவர் தனது எழுத்தையும் சமூக மாற்றத்தையும், சீரமைப்பிற்காகக் கூறிய ஆயுதமாகவே பயன்படுத்தியுள்ளார். இருண்மையில்இடர்ப்பட்டு இருந்தவர்களையும் உலுப்பியெழுப்பி ஆர்வமுடன்காது கொடுக்க வைக்கும் பேச்சுக்கலையும் தெணியானின்கைவந்த கலையாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா