இலக்கியச்சோலை
வாழ்நாள் ஊடகவியலாளர் பொ. மாணிக்கவாசகம்: போர்க்கால செய்திகளின் ஆதர்சக் குரல் ! யுத்தகளத்தின் துணிந்த எழுத்தாயுத போராளி !!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
ஈழத்தின் போர்க்கால நாட்களில் இரவு 9.15மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் தமிழோசை கேட்காமல் குறிப்பாக இலங்கை செய்திகளில் வடமாகாண செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்திகளையும் பெட்டகங்களையும் கேட்காமல் பலரும் உறங்கமாட்டார்கள்.
இடர்மிகு காலத்தின் குரல் :
நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் குறித்து தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து சர்வதேசமெங்கும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படுத்திவந்த, ஊடகத்துறையில் உயிரையும் பணயம் வைத்து நான்கு தசாப்தங்களுக்கு மேலாக போரின் மையப் புள்ளியிலிருந்து துணிச்சலுடன் பணிபுரிந்த பொன்னையா மாணிக்கவாசகம் இன்று 12/4/2023 இன்னுயிர் ஈந்தார்.
யுத்த காலத்தில் எழுத்தாயுதத்தை துணிவுடன் பயன் படுத்தியவரும், பத்திரிகைத் தர்மத்தைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு சிறந்த ஊடகவியலாளராகச் சேவையாற்றிய திரு.பொ.மாணிக்கவாசகம் வாழ்நாள் சாதனையாளராக என்றும் விளங்குகிறார்.
போர்க்காலத்தில் வவுனியாவில் இருந்து பொ.மாணிக்கவாசகம் தரும் உடனடித் தகவல் என்ன என்பதை காதுகொடுத்துக் கேட்க காத்திருந்த உலகத் தமிழ் மக்கள் அவரை என்றும் மறக்கமாட்டார்கள்.
வவுனியாவில் இருந்து பொ.மாணிக்கவாசகம் தரும் உடனடித் தகவல்கள் அக்காலகட்டத்தில் அவரது செய்திகளை மாத்திரமே நம்பக்கூடியதாக இருந்தது. பொ மாணிக்கவாசகம் அவர்கள் பத்திரிகயாளராக ஆற்றியசேவையும், அதிலும் விசேடமாக யுத்த காலத்தில் பலமுனை நெருக்கடிகளுக்கு மத்தியில் நடுநிலை தவறாதுஆற்றிய பணிமறக்க முடியாதவை. கல்வி, சுகாதாரம், அரசியல் களங்களில் உண்மை நேர்மை துலங்கும் வகை செய்திகள் தந்த மாண்பு மகத்தானவை.
வாழ்நாள் சாதனையாளா் விருது :
கடந்த வருடம் 13/12/2023இல் கொழும்பில் நடைபெற்ற இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கத்தின் வருடாந்த விருது விழாவில் மூத்த ஊடகவியலாளா் பொ.மாணிக்கவாசகம் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வீரகேசரியிலும், பி.பி.சி.யிலும் நீண்டகாலம் ஆபத்தான ஒரு யுத்தப் பகுதியிலிந்து செய்தி சேகரிப்புப் பணியை துணிச்சலுடன் – திறம்படச் செய்துவந்தவர். அதனைவிட வேறு சில சா்வதேச ஊடகங்களிலும் அவா் பணியாற்றியிருக்கின்றாா்.
அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் “கால அதிர்வுகள்”, “வாழத்துடிக்கும் வன்னி”, “மாற்றத்தை நாடும் மாற்றுத் திறனாளிகள்” என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
மறைந்த வாழ்நாள் சாதனையாளர் பொன்னையா மாணிக்கவாசகம்
தான் கடந்துவந்த கரடு முரடான பத்திரிகைத்துறை அனுபவங்களையும் தொகுத்து அடுத்த நூலையும் விரைவில் வெளியிட உத்தேசித்திருந்தார்.
இந்த நூல்களில் அடங்கியுள்ள விடயங்கள் யாவும் வீரகேசரி நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புகள் என்பது வீரகேசரிக்கும் பெருமை தரக்கூடிய விடயமாகும்.
தமிழ் ஊடகவியலாளா் ஒன்றிய தலைவர்:
தமிழ் ஊடகவியலாளா்கள் கடுமையான ஆபத்துக்களை எதிா்கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளா் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றிய அவா், அந்தப் பதவியின் மூலமாகச் செய்த பணிகளும் முக்கியமானவை.
ஒரு முழு நேர ஊடகவியலாளராக – சுயாதீனமாகப் பணியாற்றிய அவா், தனது அனுபவங்களின் அடிப்படையில் சில நுால்களையும் எழுதியிருக்கின்றாா். அவை தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
பொ மாணிக்கவாசகம் அவர்கள் பத்திரிகயாளராக ஆற்றியசேவை. அதிலும் விசேடமாக யுத்த காலத்தில் பலமுனை நெருக்கடிகளுக்கு மத்தியில் நடுநிலை தவறாதுஆற்றிய பணிமறக்க முடியாதவை.
‘வென்மேரி’ விருது கௌரவம் :
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 18/8/22 நடைபெற்ற ‘வென்மேரி விருதுகள்” விழாவில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்கள் ஊடகத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
“வென்மேரி அறக்கட்டளை”யின் முதலாவது விருதுவிழாவான நிகழ்வு யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் விழா என்ற மகுடத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தார்கள். மூத்த ஆளுமைகள், வாழ்நாள் சாதனையாளர்கள், இளம் முயற்சியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஊடகத்துறையில் உயிரையும் பணயம் வைத்து நான்கு தசாப்தங்களுக்கு மேலாக போரின் மையப் புள்ளியிலிருந்து துணிச்சலுடன் பணிபுரிந்த மாணிக்கவாசகம் கௌரவிக்கப்பட்டமை முக்கியமானதாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா