இலக்கியச்சோலை

திரும்பிப்பார்க்கின்றேன் – இலங்கை வானொலியில் எனது முதல் பாடல் அனுபவம்!… சறோஜினி ஆசீர்வாதம்/

ஏகாந்தமாம் இம்மாலையில் என்னை வாட்டுது உன் நினைவே….

சறோஜினி ஆசீர்வாதம்.

இந்தக்கட்டுரையை நான் அவுஸ்திரேலியா – மெல்பனிலிருந்து எழுதுகின்றேன். ஆனால், இதில் நான் சொல்லவரும் விடயம் எனது தாயகமான இலங்கையில் எனது சிறிய வயதில் நடந்த சம்பவம்.

அதிலும் நான் பாடிய பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான கதையைத்தான் இந்த கட்டுரையில் சொல்ல வந்துள்ளேன்.

எனக்கு சிறியவயது பருவம் முதலே பாடல்கள் பாடுவதற்கு மிகவும் விருப்பம். எனது குழந்தைப்பருவத்தில் இலங்கை வானொலியை நான் விரும்பிக் கேட்பதுண்டு. அதில் நேயர்விருப்பம் நிகழ்ச்சியில் எனக்கு; பிடித்தமான பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பாகும். நானும் சேர்ந்து பாடுவேன்.

நான் அவ்வாறு பாடுவது எனது அம்மாவுக்கு விருப்பம் இல்லை. நான் படிப்பில்தான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று அம்மா அடிக்கடி எச்சரித்துக்கொண்டிருப்பார்.

நான் கற்ற பாடசாலையில் இடைவேளையின்போது நானும் எனது சிநேகிதிகளும் சேர்ந்து அவரவருக்கு விருப்பமான பாடல்களை இராகத்தோடு பாடுவோம். அது இன்பமான அனுபவம்தான்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் நேயர்விருப்பம் நிகழ்ச்சி பற்றியும் நானும் சிநேகிதிகளும் எமக்குள் உரையாடிக்கொள்வோம்.

அந்த நிகழ்ச்சியில் பாடலை விரும்பிக்கேட்கும் நேயர்களின் பெயர்களையும் ஒலிபரப்புவார்கள். எங்கள் பெயர்களும் அவ்வாறு ஒலிபரப்பாகவேண்டும் என நாம் விரும்பினோம்.

குறைந்தது பத்துப்போருக்கு மேற்பட்டவர்கள் ஒரு பாடலை விரும்பிக்கேட்டு கடிதம் எழுதினால் மாத்திரமே அந்தப் பாடலை எமது பெயரையும் சொல்லிவிட்டு ஒலிபரப்புவார்கள்.

அதனால், நானும் எனது சிநேகிதிகளும் எங்கள் பெயர்களை எழுதி, நாம் விரும்பும் பாடலின் முதல் இரு அடிகளையும் குறிப்பிட்டு கடிதம் மூலம் இலங்கை வானொலிக்கு அனுப்புவோம்.

வீட்டில் எமக்கு பொக்கட் மணிக்குத்தரும் பணத்தையே தபால் கட்டணத்திற்கு செலவிடுவோம்.

அவ்வாறு நாம் குறிப்பிட்டு எழுதி அனுப்பிய பாடல்கள் எமது பெயர்களுடன் வானொலியில் நேயர்விருப்பம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும்போது அதனைக்கேட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்.

நேயர்விருப்பம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்வேளைகளில் வானொலிக்கு பக்கத்திலேயே இருப்போம். நானும் தங்கை வதனாவும் இவ்வாறு சினிமாப்பாடல் கேட்டுக்கொண்டிருப்பது எமது அம்மாவுக்கு அவ்வளவு பிடித்தமில்லை.

அம்மா எங்களை எப்போதும் படி படி என்றே நச்சரித்துக்கொண்டிருப்பார். மகளே நீ பாட்டுப்பாடி சினிமாக்காரியாகப்போகிறாயா…? அல்லது படித்து வாழ்க்கையில் முன்னேறப்போகிறாயா…? என்று கேட்பார்.

அதற்கு நான், படிப்பேன் – பாடுவேன் என்று ஒரே வார்த்தையில் சொல்வதுண்டு.

ஒருநாள் வானொலி நிலையத்திற்கு நேரில்வந்து பாடவிருப்பமுள்ள நேயர்கள், தங்கள் பெயர் விபரங்களை எழுதி கடிதம் மூலம் வானொலி கலையகத்திற்கு அனுப்பலாம் என்ற செய்தியை ஒலிபரப்பினார்கள்.

அதனைக்கேட்ட எனக்கு ஒரே குதூகலம். துள்ளிக்குதித்து எனது மகிழ்ச்சியை வீட்டில் வெளிப்படுத்தினேன். நானும் வானொலி நிலையம் வந்து பாட விருப்பம் என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன்.

ஒருநாள் அங்கிருந்து கடிதம் வந்திருந்தது. வழக்கமாக எமது அப்பாவின் பெயருக்குத்தான் கடிதங்கள் வரும். ஆனால், அன்று எனது பெயருக்கு அக்கடிதம் வந்தபோது நானும் தங்கையும் பாடசாலையில் இருந்தோம். அப்பா வேலைக்குச் சென்றிருந்தார்.

அம்மா அக்கடிதத்தை திறந்து படித்திருக்கிறார். அதில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, வானொலிக் கலையகத்தில் நடக்கவிருக்கும் தேர்வுக்கு ( Audition ) வந்து பாடுமாறு அழைக்கப்பட்டிருந்தேன்.

அம்மா மிகவும் கோபத்துடன் அக்கடிதத்தை கிழித்து எறியவும் பார்த்திருக்கிறார். அப்பா வீடு திரும்பியதும் அவரிடம் காண்பித்துவிட்டு, கிழித்தெறியும் யோசனை அவரது மனதில் உதித்தது எனது அதிர்ஷ்டம்தான்.

நானும் தங்கை வதனாவும் வீடு திரும்பியபோது அம்மா இலங்கை வானொலி நிலையத்திலிருந்து வந்த அக்கடிதம் பற்றி எம்மிடம்

எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு, அப்பா வேலையால் திரும்பியதும் காண்பித்தார்.

அப்போதுதான் எனக்கு கடிதம் வந்த விடயம் தெரியவந்தது. அம்மா மிகவும் கண்டிப்போடு என்னை அங்கே அழைத்துச்செல்லவேண்டாம் என்று அப்பாவிடம் சொன்னார். நான் விம்மி விம்மி அழுதேன். அப்பாவுக்கு என்னைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்திருக்கும். அத்துடன் நான் அப்பாவின் செல்லம். எனது கண்களில் கண்ணீர் வந்தால் அப்பா தாங்கமாட்டார்.

மகள் ஆசைப்படுகிறாள். அங்கே சென்று ஒரு பாடல் பாடுவதனால் அவளது படிப்பு ஒன்றும் கெட்டுப்போய்விடாது. அத்துடன் அவள் நன்றாகப்பாடுகிறாள். எங்கள் பிள்ளையின் குரல் வானொலியிலும் ஒலிக்கட்டுமே… நாங்களும் அதனைக்கேட்டு ரசிப்போமே… என்று அப்பா எனக்காக அம்மாவுடன் வாதிட்டார்.

பின்னர் ஒருநாள் அப்பாவே என்னை கொழும்பு – 07 இல் அமைந்திருந்த இலங்கை வானொலி நிலையத்திற்கு பஸ்ஸில் அழைத்துச்சென்றார். இறங்கவேண்டிய இடத்தில் இறங்கி, வானொலி நிலையத்தை தேடினோம். தெருவில் சென்றவர்களிடம் வழிகேட்டு, ஒருவாறாக அந்த நிலையத்தை வந்தடைந்தோம்.

அந்த வெண்ணிறக்கட்டிடத்தை பார்த்து நான் வியந்தேன். இங்கிருந்துதானா, நான் விரும்பும் பாடல்கள் வானெலியில் ஒலிபரப்பாகின்றன…! அவ்வாறு பாடும் பிரபல பாடகர்கள் இந்த நிலையத்திற்குள் இருந்துதானா பாடுகிறார்கள்….! இங்கிருந்துதானா எனது பாடலும் ஒலிபரப்பாகப்போகிறது …? முதலான வியப்புகளோடு அப்பாவின் கைபற்றிக்கொண்டு வானொலி நிலையத்தின் படிக்கட்டுக்களில் ஏறினேன்.

எனது மேனி சிலிர்த்தது.

வரவேற்பறையிலிருந்த பெண்ணிடம் எனக்கு வந்து கடிதத்தை காண்பித்தோம். அங்கிருந்த ஆசனத்தில் எம்மை அமரச்சொன்னார். சிறிது நேரத்தில் ஒரு அன்பர் அங்கே வந்து எம்மை உள்ளே அழைத்துச்சென்றார்.

அங்கிருந்த ஒரு அறையின் நிலத்தில் இருந்த தரைவிரிப்பில் என்னை அமரச்சொன்னார்கள். எனக்கு முன்னே ஒரு ஒலிவாங்கியிருந்தது.

நான் விரும்பிய ஒரு பாடலை பாடவைத்து பயிற்சியளித்தார். பின்னர், பாடவைத்து ஒலிப்பதிவு செய்தார்கள்.

அந்தப்பாடல் : ஏகாந்தமாம் இம்மாலையில் என்னை வாட்டுது உன் நினைவே

ஏகாந்தமாம் இம்மாலையிலே என்னை வாட்டுது உன் நினைவே காற்றே துளிர் அசைக்கும் என் பாஷை கேட்கவும் அஞ்சிடுதே…..

இந்தப்பாடல் வெளிவந்த திரைப்படம் அவன். 1953 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் பிரபல பாடகி ஜிக்கி பாடிய பாடல் இது. அன்று நான் இராகத்துடன் இதனைப்பாடிவிட்டு கலையகத்திலிருந்து வெளியே வந்தேன். அப்பாவுக்கு மிக்க மகிழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியை பதிவுசெய்த ஒருவர், மேலும் சில தேர்வுகள் ( Audition ) இருக்கின்றன. அதன்பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சொல்லி எம்மை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

வீடு திரும்பியதும், அங்கே நடந்த அனைத்து விடயங்களையும் அம்மாவிடம் ஒன்றுவிடாமல் சொல்லி சிரித்தேன். அம்மாவுக்கு மனதில் கலக்கம் இருந்தது அவரது முகத்தில் தெரிந்தது.

சரி… சரி… உனது ஆசைக்கு ஒரு தடவை போய்வந்துவிட்டாய். இத்தோடு நிறுத்திக்கொள். இனியாவது படிப்பில் முழுக்கவனமும்

செலுத்து என்று அம்மா கட்டளை போட்டார்கள்.

ஒலிப்பதிவுசெய்யப்பட்ட அந்தப்பாடல் எப்போது வானொலியில் ஒலிபரப்பாகும் என காத்திருந்தேன்.

ஒருநாள் ஒலிபரப்பானது. நான் எனது பெற்றோருடனும் தங்கை வதனாவுடனும் இருந்து கேட்டேன். அவர்கள் எல்லோரும் என்னை கட்டி அணைத்து வாழ்த்தினார்கள்.

அதன்பிறகும் இலங்கை வானொலி கலையகம் சென்று பாடல்கள் பாடினேன். ஒலிபரப்பானபோது கேட்டு ரசித்தேன்.

மறக்க முடியாத அந்த நினைவுகளை இந்த வயதில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

நினைவுகளை மறக்கமுடியாது. நினைக்கத் தெரிந்த மனதினால் மறக்கவும் முடியாது அல்லவா…?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.