இலக்கியச்சோலை
வாழ்த்தின் பொருளென்ன? அது சொல்லும் கதைஎன்ன?….
கொஞ்சகாலமாகவே எனக்கு விடை தெரியா ஒன்றாக தன்னைவிட மூத்தவர்களை வாழ்த்தலாமா என்பது சவால் விட்டுக் கொண்டிருந்தது. வாழ்த்தலாம் என்பதற்கு ஒரு சான்று. ஒரு வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு அந்த விழாவை நடத்திக் கொண்டிருந்த வீட்டின் சொந்தக்காரரும் அவரது மனைவியும் புரோகிதர் முன் அமர்ந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்து கொண்டிருந்தார்.
பூசை முடிந்தது. பூசை செய்துவித்த புரோகிதருக்கு வயது முப்பது இருக்கும். வீட்டின் சொந்தக்காரருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவரது மனைவிக்கும் நாற்பத்து ஐந்து வயதுக்கு மேல் இருக்கலாம். அவ்விருவரும் புரோகிதர் காலில் விழ அவரும் இருவரையும் வாழ்த்தினார். அந்த தம்பதியர் இருவரும் அவர்கள் பெற்றோர் காலில்கூட அப்படி விழுந்து வணங்கி இருக்கமாட்டார்கள். நீதி என்றால் அனைவருக்கும் ஒன்றாய்த்தான் இருக்கவேண்டும். அதில் மற்ற உயிரினங்களுக்கு கூட வித்தியாசம் காட்டிவிடக் கூடாது என்பதற்காகத்தானே தேர்க்காலில் தான்பென்ற மகனை கிடத்தினான் சோழப்பேரரசன். வாழ்த்தக்கூடாது என்பதற்கும் ஒருசான்று. ஒரு என்பது வயதுப் பெரியவருக்கு பிறந்தநாள் விழாவினை குடும்பத்தினர் கொண்டாடினர். எனக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடில்லை. காரணம் பிறப்பும் இறப்பும் இயற்கையான ஒன்றுதானே. அதற்கேன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பது என் சொந்தக்கருத்து. அதற்காக அதில் நாட்டமுள்ளவர்களை நான் குறைகூறவில்லை. பாரதியாருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் பாரதியார் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினாரா? என்பதை எண்ணிப்பார்த்தால் அங்கே பல விடை கிடைக்கும். அந்த என்பது வயது முதியவரை ஒரு அறுபது வயதானவர் வாழ்த்த வந்தார். இவருக்கும் அவருக்கும் இருபது ஆண்டுகள் வயது இடைவெளி. ஆனால் வாழ்த்தவந்தவரோ அவரை வாழ்த்துவதற்கு பதிலாக வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன் என்று சொல்லி அவரைப்போற்றினார். பலே இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். ஆனால் மனம் வயதில் மூத்தவர்களை வாழ்த்துவதில் என்ன தவறு என்று கேட்டது. எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் என் அறிவுக்கண்களைத் திறந்தார். தெரியாததை தெரியவில்லை என்று சொல்லி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்ற கோட்பாடுடையவன் நான். அதை என்னைவிட சிறியவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் எனக்குண்டு. ஆனால் இந்த மனம் நண்பர் சொல்லியும் அடங்காமல் என்னை குழப்பியது. நண்பர் சொன்ன பதிலால் சமாதானம் அடையாமல் சண்டித்தனம் பண்ணியது. சண்டித்தனம் செய்ய காரணம் அவர் சொன்ன பதில்தான். அவர் சொன்னதாவது சபை நாகரிகம் கருதி அப்படி சொல்லலாம் என்பதே. அப்படியானால் சபையில் வயதில் மூத்தவர்களை வாழ்த்தக்கூடாதா? அதற்கு பதிலாக வணங்கி போற்றத்தான் வேண்டுமா? வாழ்த்துவதற்கு வயதில்லை என்ற சொற்றொடர் என்னை யோசிக்க வைத்தது. தோளில் ஏறி அமர்ந்து அப்பனுக்கே பாடம் சொன்ன குமரனைக் கொண்டாடும் வழிவந்த நாம் மேடே ஏறி ஒரு பெரியவரின் மேன்மையை சொல்லி அவரை வாழ்த்தக் கூடாதா? வாழ்த்த வயதில்லை என்பதை மாற்றி வாழ்த்த வயது தடையில்லை என்று சொல்லி வாழ்த்தலாமே. வாழ்த்துவதை போற்றிப் பாராட்டுவதாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஏன் ஆசி வழங்குவதாக வலியச்சென்று பொருள் கொள்ள வேண்டும்? எதற்காக வாழ்த்துகிறோம் என்பதுதான் அவசியமேதவிர வயது அவசியமல்ல. அவரது அளப்பரிய பணியைப் போற்றி வாழ்த்தலாம். அவர் பெற்ற விருதினை எண்ணி மனமுவந்து பாராட்டி வாழ்த்தலாம். என்பது வயது எட்டியவரை நூறுவயதைத் தொடவேண்டி விரும்பிப் பாராட்டி வாழ்த்தலாம். சமீபகாலமாக நான் இந்தியா சென்ற போதெல்லாம் வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை என்ற கூற்றை பெருவாரியாக கேட்டிருக்கிறேன். யாரோ ஒருவர் என்றோ ஒருநாள் எங்கோ ஒரு அரசியல் மேடையில் சொன்னதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை என நினைக்கிறேன். இப்படி சொல்லும் அரசியல்வாதிகளே வயது வித்தியாசம் பாராமல் காலில் விழுவதையும் பார்த்திருக்கிறேன். இப்படியான கூற்றெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று வடிவேல் கூறுவதுபோல் அமையலாம். ஆனால் அறிவுசார்ந்ந தளங்களில் வாழ்த்துவதற்கு வயதில்லை என்று கூறுவது ஏற்புடையதா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இப்போது எனக்கு கடவுள் தேவைப்படுகிறார். கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறதா இல்லையா என்பது வேறு கருத்து. ஆனால் இங்கு அவர் தேவைப்படுகிறார். கடவுள் நம்மைவிடப் பெரியவர். படைத்தார். படியும் அளக்கிறார். அவரை நாம் வாழ்த்தவில்லையா? கடவுளைவிட நாம் வயதில் முதிர்ந்தவர்களா? கடவுள் பல யுகங்களைக் கடந்த பெரியவராயிற்றே? இரு நூறு ஆண்டுகளைக் கூட தொடமுடியாத நாம் அவரை வாழ்த்தவில்லையா? கடவுள் வாழ்த்து என்றதானே சொல்கிறோம். ஈசனடி போற்றி! எந்தையடி போற்றி என்று போற்றிப்பாடினாலும் அது கடவுள் வாழ்த்தேயாகும். பெற்றதாயைவிட தாய்மொழியை போற்றுகிறோம். தாய்மொழியைப் போற்றி வாழ்த்துகிறோமே அதை தமிழ்த்தாய் வாழ்த்தென்றுதானே சொல்கிறோம். இவ்வாறாக நாம் உயர்வாக எண்ணும் தலைவனையும் தாயையும் தாய்மொழியையும் தாய்நாட்டையும் வாழ்த்தும்போது நம்மைவிட வயதில் மூத்த பெரியவர்களை வாழ்த்துவதில் என்ன தவறு? ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரை வாழ்த்துகிறோம் பிரதமரை வாழ்த்துகிறோம். அவர் நம்மைவிட வயதில் பெரியவர் என்று வயதில் சிறியவர்கள் வாழ்த்தாது விடுகிறோமா? சிலர் அவருக்கு அல்ல வாழ்த்து அவரது பதவிக்கு வாழ்த்து என வாதிடலாம். அப்படியானால் பெரியவருக்கு அல்ல அவரது பண்பை எண்ணி வாழ்த்தலாமே? பொங்கல் வாழ்த்து சொல்கிறோம். தீபாவளி வாழ்த்தென்று சொல்கிறோம். வாழ்த்தென்பதே போற்றிப் பாராட்டத்தான். இதெல்லாம் வயதிற்கு அப்பாற்பட்டது. முதலில் ஒருவரை வாழ்த்துவோம். அப்புறம் பெரியவராயிருப்பின் வணங்குவோம். வாழ்த்த மனமில்லாதவர்கள் வணங்கட்டும். வாழ்த்த மனமுள்ளவர்கள் வாழ்த்தி வணங்கட்டும். வாழ்த்தாத வணக்கமும் போற்றாத புகழும் பொருளற்றதாகிவிடும். அதனாலேயே எவரையும் வயது வேறுபாடின்றி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறார்கள். -சங்கர சுப்பிரமணியன்.