இலக்கியச்சோலை

கருத்தியல் என்ற ஆயுதம் ஏந்திய போர்க்கள ஊடகர் சத்தியமூர்த்தி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

எழுத்தை தன் ஆயுதமாக்கிவன்னிப் போர்க்களத்தின் ஊடகவியலாளரான புசத்தியமூர்த்தி தன்மூச்சை தாயக காற்றுடன் கலந்த நாள் 12-02-2009 நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
வன்னியின் குரல் சத்தியமூர்த்தி :
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று 12-02-2009 அன்று இறந்தார்.
ஊடகத்துறையில் 1990-களில் ஈடுபடத் தொடங்கிய இவர்,
“வெளிச்சம்” சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். 1990-களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார். ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.
2003 ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி.
ஈழ ஊடகங்கள் மீது அரச அடக்குமுறை:
ஈழத்தில் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
1981இல் ஈழநாடு எரிப்புமுதல், பின்னர் இந்திய இராணுவத்தால் முரசொலி, ஈழமுரசு, நிதர்சனம் தகர்க்கப்பட்டதில் இருந்து தமிழ் ஊடகங்களின் மீதான அடக்குமுறை பல்வேறு காலங்களில் ஆதிக்க சக்திகளினால் பிரயோகிக்கப்பட்டது.
தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரட்னம் சிவராம், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், செல்வராஜா ரஜீவர்மன், லசந்த விக்கிரமதுங்க, பரணிரூபசிங்கம் தேவகுமார், என சுதந்திர ஊடகத்துறையை காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
அத்துடன் சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
நிமலராஜன் படுகொலை:
பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன்
கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்லப்பட்டார்.
ஈழப் போரின் மையப்புள்ளியாக இருந்த யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் 22 வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
கொடூரமான போரால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்த வேளையில் பலத்த
ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ந்து போர் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பிபிசி தமிழ் உட்பட பல ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி கொண்டிருந்தவர் நிமலராஜன்.
கருத்தியல் என்ற ஆயுதம் :
கருத்தியல் என்ற ஆயுதம் மூலம் எதிரியை தாக்கி தகர்க்கும் வல்லமை எழுத்துப் போராளிகளுக்கு மட்டுமே உண்டு என்று வலிமையான ஊடகப் போராளியாக என வாழ்ந்து நிரூபித்துக் காட்டியவர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி.
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் எனபதை நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்த தலை சிறந்த ஊடகவியலாளராக விளங்கியவர் சத்தியமூர்த்தி.
ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் மகத்தான ஒரு இனத்தினைப் பிரதிபலிக்கும் என்ற உண்மையை உணர்ந்து இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுத்தவரும் அவரே.
வன்னியில் போர்க்காலத்தில்
தன்னாலான பணிகளை அயர்வின்றி ஆற்றி தமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்த உணர்வு மிக்க ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி.
வன்னியில் ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் பணியாற்றினார்.
வணங்கா மண்ணின் மைந்தன் ;
கால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுத்தார். எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார்.
சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.
ரீ.ரீ.என் – (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார்.
புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
அதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்தன.
தாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது.
வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை செவ்வனே ஆற்றி வந்த சத்தியமூர்த்தியின் இறுதி மூச்சு 12-02-2009 அன்று தாயக காற்றுடன் கலந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.