இலக்கியச்சோலை
இருளின் நிழல் நூலுக்கான அணிந்துரை!…. அண்டனூர் சுரா.
எண்ணக்கதிர்களைப் படியெடுப்பவர்
ஒரு படைப்பாளன் தனிமையைப் போக்கிக்கொள்ள ஒரு பாத்திரத்தைப் படைக்கிறான். அப்பாத்திரம் இன்னொரு பாத்திரத்தைப் படைத்துக்கொள்கிறது. இவ்விரு பாத்திரங்களும் உரையாடுகின்றன. இரண்டில் ஒரு பாத்திரம் வாசகனாகிறது. இன்னொரு பாத்திரம் வாசகனுக்கு என்னவாகிறது என்பதைப் பொறுத்தே, அப்பாத்திரங்களைப் படைத்த எழுத்தாளன் காலத்தின் கணக்கில் வரவு, பற்று, செலவு என வைக்கப்படுகிறான். இதயா ஏசுராஜ் இலக்கியத் தோட்டத்திற்குப் புதியவரில்லை. தான் கண்ட மனிதர்களை, எதிர்கொண்ட அனுபவங்களை எழுதிச்செல்லும் ஆர்ப்பாட்டம், ஆரவாரமில்லாத எழுத்தேனீ. தற்கால இலக்கியங்களைத் தொடர்ந்து கவனிக்கிறவர். புதியப் படைப்புகளைத் தேடி வாசிக்கிறவர். வாசிப்பு என்பது அறிவுப்பூர்வமானது. ஆனால் இவருக்கு அது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இவரது வாசிப்பு நூல்களாக மட்டும் இருப்பதில்லை. சக மனிதர்களின் மனவோட்டங்களை வண்ணப்படமெடுக்கிறவர். அவர்களின் இதயங்களை அறுவைச்சிகிச்சை செய்து எண்ணக்கதிர்களைப் படியெடுப்பவர். இவர்களைத் தன் கதைகளில் உயிரோட்ட மாந்தர்களாகப் படைக்கிறார். இவர்களுக்குள் வாசகர்களை விரல்பிடித்து அழைத்துச்செல்கிறார். இவர் படைக்கும் பாத்திரங்கள் கடல் தாண்டுவதில்லை. குதிரையேறி வாளேந்துவதில்லை. சாமானியர்களின் கதையாளர் இவர். அருகில், அருகாமை, சுற்றங்களைக் கதையாக வடிக்கிறவர். இருளின் நிழல் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதுதவிர பயணிகள் உலவும் காகிதக்காடு என்றொரு நாவல் படைத்திருக்கிறார். இந்நூல்கள் எழுத்தின் மீது தீராக் காதல் கொண்ட இலக்கியப் படைப்புகள். இதுதவிர மேட்டுமைகள் ஊர், உறவுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும் பரத்தை உறவைப் போல மேலும் சில நூல்கள் எழுதியுள்ளார். சினிமா, மாணவர்களுக்கான கட்டுரை நூல்கள் அவை. அந்நூல்களை இலக்கிய வரம்புக்குள் கொண்டுவருவதில்லை, ஆயினும் அவை இவர் படைப்புகளே. இத்தொகுப்பு ஆறு சிறுகதைகள், ஒரு குறும்புதினமென ஏழு படைப்புகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் சொல்நேர்த்தி, செய்நேர்த்தியால் தனித்துவம் கொண்டிருக்கிறது. காதல், புதிர், மர்மம், களவு, கற்பு, ஒழுக்கக்கேடு என்று சமூகப் போக்கைப் படம் பிடிக்கிறது. காதல் கதையாகினும் மர்மக் கதையாகினும் சமுதாய விழுமியங்களை இவரது கதை கொண்டிருக்கின்றன. சிறுகதைக்குள் கதைகள் என்பது இரண்டாவது பட்சம், முதலில் மொழி வாசகனுக்கு இலகுவாக இருக்க வேண்டும். அவனை விரல் பிடித்து படைப்புக்குள் அழைத்துச்செல்ல வேண்டும். ஒரு சிறுகதையில் கதையைச் சொல்லி சமுதாயத்தைப் படம் காட்ட வேண்டும் என்பதில்லை. இவருக்குப் பாத்திரங்கள் போதுமானதாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு கதையில் விக்டர் – பார்வதி என்றொரு தம்பதிகள். இப்பெயர்கள் கதையின் மையச் சரடைப் பேசிவிடுகின்றன. கதை படைக்கும் சமூகத்தை விடவும் மாந்தர்கள் படைக்கும் சமூகம் சாதி, மதங்களைத் தகர்க்கிறது. இருளின் நிழல் கதையின் தலைப்பை வாசிக்கும் யாருக்கும் பன்றியோ காக்கையோ நினைவுக்கு வரும். இந்த நிழலுக்குள் ஒரு காதல் மென்னிய நரம்பாக வலைப்பின்னி கிடக்கிறது. கதைக்குள் ஒரு திருப்பம் வைத்து கதையைக் கட்டியிருக்கிறார். கதையில் ஒரு சொல் துருத்தலில்லை. ஒரு சொல் கூடுதலில்லை. ஒரு சொல்லைக் கதையிலிருந்து உருவினால் மொத்தக் கதையும் குலையும். இதுவே கதையைக் கட்டுதல். சொற்களால் கட்டப்பட்ட கதை இது. ஆத்மா என்கிற சிறுகதை சாதியம் பேசுகிறது. இக்கதையை அவர் இதயம் கொண்டு எழுதியிருந்தாலும் வாசகன் மூளையைக்கொண்டே அணுக வேண்டும். சாதியை யார் பிரேதப் பரிசோதனை செய்தாலென்ன, சாதிக்குள் இதயம் யாரும் கண்டடைந்ததில்லைதானே! இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் நிலத்தில் நகரும் படகுகள் என்கிற கதை குறும்புதினம். இதுபோன்ற கதைகளில் ஓர் எழுத்தாளர் தன்னைக் கதைசொல்லியாக உருவகப்படுத்திக்கொள்ள பெரும்மனம் வேண்டும். ஓர் ஆடவன் மதுவால், போதையால், கற்பொழுக்கம் மீறி, ஆண்மையைத் தொலைத்து நிற்கையில் அவனை நம்பி தன் வாழ்வைக் கொடுத்தவளின் வாழ்க்கை என்னாகும் என்பதைச் சொல்லும் கதை . இக்கதையை வாசிக்கும் யாருக்கும் திருமணத்திற்கும் முந்தைய காதலும் உறவுகளும் நெஞ்சை ஈரப்படுத்தும். சினேநிதன் அளவால் மிகச்சிறிய கதை. கதைக்கு நீளமா முக்கியம்? வாசகன் எதிர்பார்த்திராத திருப்பத்தைக் கதை கொடுத்து மர்மம், புதிர், இருண்மையை அவிழ்க்கிறது. இக்கதை இன்னும் சற்றே விரித்து எழுதியிருக்க வேண்டிய சிறுகதை. அவன் பெயர் மெட்ராஸ், கதையை வாசிப்பவர்கள் மாநகரங்களுக்குள் தொலைந்துபோவார்கள். ஒரு பக்கம் சென்னை காதல், குடும்பம், வறுமை, பிரச்சனைகள். இன்னொரு பக்கம் கிராமம், பெற்றோர், உறவு, பந்தங்கள். இவ்விரு பக்கத் தராசுகளை இலகுவாக கையாளும் கதை இது. ஒளிரும் பிரமை, கலையும் தவம் ஆகிய கதைகளும் ஒவ்வொரு முறையில் மனிதனின் உணர்வுகளைப் பேசுபவை. இதயா ஏசுராஜ் படைப்பிலக்கியத்திற்குப் புதியவரிலலை. இதற்கும் முன்பு ஒரு சிறுகதைத் தொகுப்பு ஒரு நாவல் வழியே வாசகர் பரப்பால் பெரும் கவனத்திற்கு உள்ளாகி பேசும்பொருளாக இருக்கிறவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வருகைக்கான ஆயத்தங்கள்’ என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது பெற்று பரந்த கவனிப்பிற்கு உள்ளானது. விருதுக்காக பரிசுக்காக இவர் எழுதுவதில்லை என்றாலும் இரண்டையும் தன் பக்கமாக திருப்பும் வசீகரம் கொண்டது இவரது எழுத்து. இத்தொகுப்பின் வழியே இவர் படைத்திருக்கும் கதைமாந்தர்கள் பெரும் வாசகர்ப் பரப்பை எய்துவார்கள் என்று நம்புகிறேன், வாழ்த்துகின்றேன் . அன்புடன் அண்டனூர் சுரா