அழகிய உலகம்!…. ( சிறுவர் பாடல் ) …. மருத்துவர் பஞ்சகல்யாணி.
நூல் அறிமுகம்:
குழந்தைகளுக்கான எளிய நடையில்
பஞ்சகல்யாணியின் அழகிய உலகம்
முருகபூபதி….
இலக்கியப்படைப்புகளில், குழந்தைகளுக்கான பிரதிகளை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது எனச்சொல்வார்கள். அதற்கு குழந்தைகளின் உளவியல் தெரிந்திருக்கவேண்டும்.
பெரும்பாலும் குழந்தை இலக்கியம் படைப்பவர்கள் பெரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாரதி முதல் அழ. வள்ளியப்பா வரையில் மாத்திரமின்றி, அதன் பிறகும் குழந்தை இலக்கியங்களை , குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் பெரியவர்கள்தான்.
இவர்கள் தமது வயதையொத்தவர்களுக்கு ஏதேனும் எழுதினாலும், குழந்தைகளுக்காக எழுத முன்வரும்போது, குழந்தைகளாகவே மாறிவிடவேண்டும்.
அவ்வாறுதான் ஒரு குழந்தை இலக்கியம்படைத்திருக்கும் பஞ்சகல்யாணி என்ற மருத்துவரை அவதானிக்கின்றேன். இவர் எழுதி, யாழ்ப்பாணம் – அல்வாய் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள அழகிய உலகம் என்ற சிறிய நூலை ( 56 பக்கங்கள்தான் ) அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் அவர்கள் எனக்கு படிக்கத்தந்தார்.
நாமெல்லோரும் ஒரு காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து வந்தவர்கள்தான். அந்தப்பருவத்தில் அனைவருக்கும் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகள் கோழி, சேவல், குருவி, காகம், புறா, கிளி, நாய், பூனை, முயல், ஆடு, மாடு என்பவைதான்.
இவைதவிர வானத்தில் தவழும் வட்ட நிலாவும் விருப்பத்திற்குரியதாகவே இருக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பிராணிகளையும் வானத்தில் ஒளிரும் நிலாவையும் காண்பித்தே உணவூட்டுவார்கள். உணவருந்த மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு காண்பித்து வேடிக்கையான கதைகளைச் சொல்லி உணவூட்டினால், அவர்கள் சாப்பிட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், அவ்வாறு செய்வார்கள்.
அத்தகைய குழந்தைகளின் உலகம் அழகானது.
பஞ்சகல்யாணி, அத்தகைய உலகத்தையே இந்த நூலின் மூலம் காண்பித்திருக்கிறார். தற்போது இலங்கை வடமராட்சியில் மருத்துவராக பணியாற்றும் பஞ்சகல்யாணி, தனது சிறுவயதுப் பராயத்திலிருந்தே வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர் என அறிகின்றோம்.
புலோலியில் பிறந்திருக்கும் பஞ்கல்யாணி, தமது குழந்தைப்பருவத்திலேயே மலர்கள், மரங்கள், பறவைகள், வீட்டு மிருகங்கள் மீது நேசம் கொண்டிருந்தவர். இயற்கையை ரசித்தவர். அதனால், அவரால் இத்தகைய குழந்தை இலக்கியம் படைக்க முடிந்திருக்கிறது.
பெற்றோர்களிடமிருந்து புத்தகங்களை பெற்று வாசித்து, தனது வாசிப்பு அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டிருக்கும் பஞ்சகல்யாணி, தனது பாடசாலைக்காலத்தில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி பரிசில்களும் பெற்றவர். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயிலும்போது அங்கு வெளியான நாடி என்னும் இதழில் கதைகள், கவிதைகள் படைத்திருப்பவர்.
இந்நூலில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால், இதற்கு முகப்பு ஓவியம் வரைந்திருப்பவர் பஞ்கல்யாணியின் ஆறுவயதான குழந்தை – செல்வ மகள் புராதனி.
தனது என்னுரையில் பஞ்சகல்யாணி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“ எனது குழந்தைப்பருவத்தில் அதாவது 1980 காலப்பகுதியில் நான் எதை ரசித்தேனோ, அதையே கூடுதலாக எழுதியுள்ளேன். அதைவிட எனது மகளிற்கு என்னென்னத்தையெல்லாம் காட்டி ரசிக்கவைத்தேனோ அதையும் எழுதியுள்ளேன்.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன், “ பஞ்சகல்யாணியின் பாடல்களின் உலகம் விசாலமானது. நாம் அன்றாடம் காணும் உயிரினங்களில் இலயித்து வியக்கிறார். காணும் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கிறார். நமது பண்பாட்டுக்கோலங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார் “ என எழுதியுள்ளார்.
அம்மா, பசு, ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, முயல், உட்பட நிலா, கடலும் கரையும், குளம் என இயற்கை குறித்தும், சைக்கிள் வண்டி, ஆகாய விமானம் முதலான வாகனங்கள் பற்றியும் மொத்தம் 27 பாடல்களை இந்நூல் கொண்டிருக்கிறது.
இந்தப்பாடல்களை பஞ்சகல்யாணி, ஓசைநயத்துடனும் எழுதியிருப்பதுதான் சிறப்பு. ராகமீட்டி பாடமுடியும்.
பிரதிகளுக்கு : எஸ். பஞ்சகல்யாணி – “ அரன் “ பிலாவடித்தெரு, புலோலி தெற்கு, புலோலி.