இலக்கியச்சோலை

கோடி கோடியாய்ப் பணம்… தெருக்கோடியில் ஒரு பிணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ‘ரோகிணி’ தியேட்டரில் ‘துணிவு’, ‘வாரிசு’ ஆகிய 2 படங்களும் வெளியிடப்பட்டது. இதில் ‘துணிவு’ படத்தின் சிறப்பு காட்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கும், ‘வாரிசு’ படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் வெளியானது. ‘துணிவு’ படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து அஜித் ரசிகர்கள் ‘ரோகிணி’ தியேட்டரில் குவிந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் பரத்குமார் (வயது 19). ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அஜித் ரசிகரான பரத்குமாரும் ‘துணிவு’ படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் ‘ரோகிணி’ தியேட்டருக்கு வந்திருந்தார். திரையரங்கிற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு முன்பு தியேட்டர் வளாகத்தில் அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம், பாட்டம் என உற்சாகத்துடன் இருந்தனர். அந்த பகுதி முழுவதும் அஜித் ரசிகர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இதனால் தியேட்டர் முன்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றது. அப்போது உற்சாக மிகுதியால் பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பின்னர் பரத்குமார் கீழே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது முதுகு தண்டுவடம் உடைந்துபோனதால் வலியால் துடித்தார். இதை பார்த்து அவரது நண்பர்களும், படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பரத்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

https://www.facebook.com/100003376223848/videos/690467332578814

பரத்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். பலியான பரத்குமார், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவரது தந்தை ஜானகிராமன், கூலி வேலை செய்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான பரத்குமார், கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அஜித்தின் தீவிர ரசிகரான அவர், ‘துணிவு’ படத்தை முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என வந்தபோது பலியாகி விட்டது தெரிந்தது. இந்தநிலையில் தமிழக டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:_ சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகனங்களில் ஏறுவது கட் அவுட்டுகள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும். டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் போது அந்த குடும்பமே சிரமப்படுகிறது. கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்றார்.

அஜித், விஜேய் ரசிகர்களுக்கு இடையே நிகழும் மோதல்களும் அதிகரித்து வருவதால் இந்த அறிக்கையை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன்வெளியிட்டுள்ளார்:

“எல்லா துறைகளையும் போலத் திரை உலகிலும் போட்டியாளர்கள் இருப்பார்கள், இருக்கிறார்கள்!

தமிழ்த் திரை உலகில் அப்படிக் காலந்தோறும் இரு பெரும் நடிகர்கள் போட்டியாளர்களாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். தொடக்கத்தில், எம். கே. டி. பாகவதர், பி .யூ. சின்னப்பா! பிறகு, எம்ஜிஆர், சிவாஜி கணேசன்! அடுத்து, ரஜினிகாந்த், கமல்! இப்போது விஜய், அஜித்! இவர்களைத் தாண்டி இன்னும் பல புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் தமிழ் திரை உலகில் இருந்துள்ளனர் இப்போதும் இருக்கின்றனர்!

மற்ற துறைகளில் எல்லாம். அது தொழில் போட்டியாக, புகழ்போட்டியாக அவரவர்க்கு இடையில் மட்டுமே நிகழும். ஆனால் திரை உலகில் மட்டும், அவர்களைத் தாண்டி, அவர்களின் ரசிகர்களுக்கு இடையிலான போட்டியாகத் தொடர்ந்து மோதலாகவும் சில வேளைகளில் உருவெடுக்கும்!

நடிகர்களுக்கு இடையிலான அந்தப் போட்டியும். மோதலும் அண்மையில் வாரிசு, துணிவு என்னும் இரு படங்கள் வெளியிடப்பட்ட நாளில் உச்சத்திற்கு வந்திருப்பதோடு, நாகரிகத்தின் எல்லைக் கோடுகளையும் தாண்டி இருக்கிறது!

தடைகளை மீறுவது, பொதுமக்களுக்குத் தொல்லை தருவது, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வது – எல்லாவற்றுக்கும் உச்சமாக ஓர் இளைஞர் உயிரையே பலி கொடுத்திருப்பது என்று அந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

அவ்வாறு மோதிக்கொண்ட நடிகர்கள் இருவரின் ரசிகர்களும், உழைப்பாளிகளாக அல்லது உழைக்கும் மக்களின் பிள்ளைகளாகத்தான் இருக்கக்கூடும். அன்றாடம் உழைத்தால்தான் வாழ்க்கை என்னும் நிலையில்

இருக்கும் பல குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், இப்படி நிழலுக்காக மோதி, நிஜத்தை இழந்து கொண்டிருப்பது எவவளவு வேதனை!

புதுக்கோட்டைக்கு அருகில் ஒரு கிராமத்தில் நடந்திருக்கும் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டித்து இளைஞர்கள் குமுறி எழவில்லை. சாதி வெறியால் நடைபெறும் ஆணவக் கொலைகளை அறுத்தெறியப் புறப்படவில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்து கிளர்ந்து எழவில்லை. சமூக அநீதிகளை, பெண் அடிமைத்தனத்தைப் பொறுக்க முடியாமல் போராடத் தெருவுக்கு வரவில்லை. வெறுமனே இரண்டு நடிகர்களின் திரைப்படங்களில் எது சிறந்த படம் என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு முன், இவர்கள் தீர்மானிப்பதற்காக போட்டி போட்டுத் தெருவில் சண்டையில் இறங்கி இருக்கிறார்கள்!

இந்த நிலையை மாற்றியே தீர வேண்டும் என்பதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக, அந்த இரண்டு நடிகர்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். கவலைப்பட வேண்டும்!

கோடி கோடியாக ஊதியம் பெறும் நடிகர்கள், தெருக் கோடியில் இருக்கும் தங்கள் ரசிகர்களைக் காப்பாற்றியாக வேண்டும். அறியாமையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்! தங்கள் ரசிகர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டும்.

இனிமேலாவது ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதை அவர்களே தவிர்க்க வேண்டும்!இரண்டு பேர் புகழ் பெறுவதற்காக, ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கை பலியாகக் கூடாது.

இளைஞர்களை இப்படிப்பட்ட கலவரங்களில் இழந்து விடும் நாடு, எதிர்காலத்தில் தன்னையே இழந்து விடக் கூடிய அபாயம் இருப்பதை அனைவரும் உணர வேண்டும்! பொழுதுபோக்கு என்பது வாழ்வின் ஒரு பகுதி! வாழ்க்கை என்பது பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது!

இளைஞர்களே! எதிர்காலத்தில் உங்களுக்கான எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன . சின்னச் சின்னக் குளங்களில் விழுந்து மறைந்து விடாதீர்கள்!”

அன்புடன்

– சுப வீரபாண்டியன்

பொதுச்செயலாளர்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.