கங்காரு நாட்டில் ஆண்டுதோறும் களைகட்டும் தைப்புத்தாண்டு!… (செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா)
கடந்த பல வருடங்களாக, அவுஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் தைப்பொங்கல் பண்டிகையும், தமிழ்ப் புத்தாண்டும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
விக்ரோறிய மாநிலத்தில், முதன்முதலாக பொங்கல் விழா 1991ஆம் ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. யாழ் எஸ்.பாஸ்கர், முல்லை சிவா, கிருஸ்ணமூர்த்தி, வித்தியானந்தன் முதலிய நண்பர்கள் குழுவினரின் அமைப்பான இளம்தென்றல் கலை மன்றத்தினால் நடத்தப்பட்ட அந்த விழாவில், பண்டார வன்னியன் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 1992 ஆம் ஆண்டு அவர்களது பொங்கல் விழா, சட்டத்தரணி, பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசாவின், மாவீரன் எல்லாளன், யாழ் எஸ் பாஸ்கரின், மெல்பேண் கந்தையா ஆகிய நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் பிரபல எழுத்தாளர், அமரர் எஸ்.பொ. அவர்களின் வலை என்ற நாடகம், சு.ஸ்ரீகந்தராசா அவர்களின்
நெறியாள்கையில் அரங்கேறியிருக்கிறது. இளம் தென்றல் கலை மன்றத்தினர் அதன் பின்னர் பொங்கல்விழாவைத் தொடரவில்லை.
பின்னர், அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத் தலைவர்களில் ஒருவரும், திருமணப்பதிவாளரும், சமாதான நீதவானுமாகிய, என்.ஆர்.விக்கிரமசிங்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட விக்ரோறிய தமிழ்க் கலாசாரக்கழகம், 1994 ஆம் ஆண்டிலிருந்து பொங்கல் விழாவை முன்னெடுத்து இன்றுவரை ஒவ்வொருவருடமும் தொடர்ந்து நடத்திவருகிறது. கலை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, தைத்திருநாள் தமிழரின் புத்தாண்டு என்ற தொன்மைமிகு வரலாற்றை, தமிழ் மக்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் அறியத்தரும் விதமான செயற்பாடுகளும் அந்த விழாவில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை ஒவ்வொரு பொங்கல் விழாவிலும் கலந்துகொள்ளச் செய்து பொங்கல் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு என்பவற்றின் முக்கியத்துவம் அவுஸ்திரேலிய உயர்மட்டங்களில் தெரியவருவதற்கான வாய்ப்புக்களையும் பொங்கல் விழாவின் மூலம் கழகம் செய்துவந்திருக்கிறது.
பல்கலைக் கழகப் புகுமுகப் பரீட்சையிலே, அதாவது 12 ஆம் வருட இறுதிப் பொதுப் பரீட்சையிலே, தமிழ் மொழியில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைப் பொங்கல் விழாவிலே பாராட்டி விருது வழங்கும் செயற்பாட்டையும் விக்ரோறிய தமிழ்க் கலாசாரக்கழகம் பல வருடங்களாகச் செய்துவருகின்றது. அத்துடன், ஒவ்வொரு வருடமும், அந்தப் பரீட்சையில் 98 புள்ளிகளுக்கு மேல் எடுத்து உயர் துறைகளுக்குத் தெரிவுசெய்யப்படும் தமிழ் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து விக்ரோறிய மாநிலத்தில், கேசீ தமிழ் மன்றத்தின் முன்னெடுப்பின் மூலம், பல தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து தமிழர் திருநாள் என்ற கருப்பொருளின் கீழ், தாயகங்களில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சிகளையொத்த வகையில் தைப்புத்தாண்டினைப் பெருவிழாவாக நடத்தி வருகின்றன. இப்பொழுது பதினைந்திற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்து செயற்படும் அந்த நிகழ்வில் தமிழர்களின் உணவுவகைகள், சேவை நிறுவனங்கள், ஆடைகள், அணிகலங்கள், என்பவற்றுக்கான அங்காடிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் அறிஞர்களின் உரைகள், என்றிப்படிப் பரந்துபட்ட வகையில் தமிழர் திருநாள் கொண்டாடப்படுகின்றது. அதே
வேளை மாநிலத்தின் நான்கு திசைகளிலும், பெரும்பாலான நகரங்களில், பல அமைப்புக்களும், வாழும் பிரதேச ரீதியான மக்கள் குழுக்களும் தனித்தனியாகத் தைப்புத்தாண்டினைச் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. எண்ணிக்கையற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு வருடமும், ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததும், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவும், தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கவும் தமிழர்கள் தயாராகி விடுகிறார்கள். தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் புதுவருடம் என்றவகையில் தமிழ் மக்களிடையே பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அதனால், அது, அவுஸ்திரேலியாவில் பல்லினச் சமூகங்கசமூகங்களையும் கவர்ந்த நிகழ்வாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இன்றைய இந்த மகிழ்ச்சியான வளர்ச்சிக்குக் கால்கோள் இட்டவர்கள்
முப்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர், பொங்கல் ,விழாவை இங்கு ஆரம்பித்த இளம்தென்றல் கலை மன்றத்தினரும், பலவருடங்களாக அதனைத் தொடர்ந்து பண்பாட்டுக் கோலத்துடன் நடத்திவரும் விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தவர்களுமே என்றால் அது மிகையில்லை.
தைத்திருநாள்! தமிழரின் புத்தாண்டு!
தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும். தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.
இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே, ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.
தைப் பொங்கல் பண்டிகை ஒரு சமயம் சார்ந்த பண்டிகை அல்ல. அது தமிழ் இனம் சார்ந்த பண்டிகை. அவ்வாறே தமிழ்ப்புத்தாண்டும் எந்த மதத்திற்கும் உரியதல்ல. அது தமிழ் இனத்திற்குரியது.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள், அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள், விண்ணையும், மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள், வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான், கதிரவனின்
ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும், காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தார்கள்.
அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப்
பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.
” சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்”
என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.
தைநீராடல், தைத்திங்களில், பொங்கல் செய்து பலரோடு பகிர்ந்து உண்ணல், விருந்தினர்களை அழைத்து விழாக்கொண்டாடல் முதலிய நிகழ்ச்சிகள் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே தமிழ்மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. சங்க இலக்கியங்களான, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் அதற்கான சான்றுகள் உள்ளன.
அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவே, கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன், தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் முந்திய வரலாற்றைக் கொண்டது தைப்புத்தாண்டைத் தமிழர்கள் கொண்டாடும் வழக்கம்.
தமிழ்ப் புத்தாண்டுத் தீர்மானம்
தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல, அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான், தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும், ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக, 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள், செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல், நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.
மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.
அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அந்த முடிவுகளின்படி, திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்பனவாகும். புதனும், சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன், காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.
அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும், பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும், 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.
2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்ற பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் சட்டத்தரணி, பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில், அன்றைய விக்ரோறிய, பல்லினக் கலாசார அமைச்சர், டண்டினோங்க் மாநகர மேயர், விக்ரோறிய தமிழ்கலாசாரக் கழகத்தின் நிறுவனர் என்.ஆர்.விக்கிரமசிங்கம், அதன் காப்பாளர் சட்டத்தரணி சச்சிதானந்தம், மற்றும் விக்ரோறிய மாநிலத்தின் பல தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், எழுநூற்றுக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்த மண்டபத்தில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று, பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நந்நாள்
என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அம்மொழியே பொன் மொழியாகட்டும், அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும் என்று, தொன்மைமிக்க நமது தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பினை எங்கும் உரத்துச் சொல்வோம். பின்னைய நமது சந்ததிகளையும் பின்பற்றச் செய்வோம்.
எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள். வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை, குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி துப்பரவுசெய்யும் நாள்.
புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வண்ணச்சாயம் தீட்டுவதுமாக அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.
நெல், அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள், முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். அவர்களது இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள்.
வசதியும் செல்வமும் மிகுந்த சகோதரர்களும், உற்றார் உறவினர்களும், வசதியும் வாய்ப்புக்களும் குறைந்த தங்கள் சகோதரர்களுக்கும், அன்பிற்குரியவர்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவற்றைத் தம்மால் இயன்ற அளவில் அவர்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்குவதும் அந்த நாள்தான். மறுநாள் மலரவிருக்கின்ற தைப்பொங்கல் திருநாளிலே, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளிலே எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பண்டைத்தமிழர்கள் பழக்கத்தில் கொண்டிருந்த பண்பாட்டுச் சிறப்பு மிக்க வழக்கம் அது.
மறுநாள் பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டினை மகிழ்வோடு வரவேற்கவும், பொங்கல் பண்டிகையை வளமாகக் கொண்டாடவும், தேவையான பொருட்களையும், புத்தாடைகளையும் வாங்கிக்கொள்வதற்குப் போதிய வசதியில்லாத உற்றார், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று, பொருள்களாகவும், புத்தாடைகளாகவும், பணமாகவும் கொடுத்து மகிழ்ந்து, எல்லோரையும் மகிழ்வைக்கும் இனியநாளும் அந்த நாள்தான்.
எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும்.
தைப்பொங்கல் திருநாளில், தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளில்,
வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும், வெற்றிலையும், பாக்கும்,
பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றி செலுத்தவேண்டும்.
காலையிலே பொங்கலிட்டுக் கதிரவனை வணங்குதல், ஆலயம் சென்று இறைவனை வழிபடல், அதன்பின்னர் பெரியவர்களின் ஆசிபெறல்,
பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களித்து விளையாடல், கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள்!
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது தாயகங்களிலே தாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.
வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வேறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.
தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும், பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். புதிதாகத் தொழிலைத் தொடங்க முயல்வோருக்கு வழி பிறக்கும். தொழிலில் மேலும் உயர முனைவோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.
கடந்த வருடம் அடைந்த துயரெல்லாம் கனவாக மறப்போம்
நடந்த வாழ்வில் மகிழ்ந்ததை யெல்லாம் நினைவோடு சுமப்போம்
புலர்ந்து வருகின்ற தைமுதல் நாளிலே புத்தூக்கமடைவோம்.
காலையில் எழுந்து, கதிரவனை வணங்குவோம்.
புத்தாடை அணிந்து புத்தாண்டை வரவேற்போம்.
இனிக்கும் பொங்கலிட்டு எல்லோர்க்கும் பகிர்ந்துண்போம்.
அதுவே பண்டைத் தமிழர் பண்பாடு. அதைக் கடைப்பிடிப்பது நம் கடப்பாடு.
தைத்திருநாள் தமிழரின் திருநாள்
தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை
தைப்பிறப்பே தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு
தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள்!
வாழ்க தமிழ் வணக்கம்.