அயராமல் ஓடிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் எஸ் என். ஆர். பிள்ளை ஓய்ந்துவிட்டார்!…. முருகபூபதி.
அஞ்சலிக்குறிப்பு!…
இன்று ஜனவரி 09 ஆம் திகதி அதிகாலை எனது வாட்ஸ் அப்பிற்கு கனடாவிலிருந்து எனது நண்பரும், முன்னர் வீரகேசரியில் எம்மோடு பணியாற்றியவருமான சட்டத்தரணி மு. பாலச்சந்திரனிடமிருந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.
எம்மோடு பணியாற்றிய அலுவலக நிருபர் எஸ். என். ஆர். பிள்ளை நேற்று 08 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்ற செய்தியடங்கிய மரண அறிவித்தல்தான் அது.
தாமதிக்காமல், பாலச்சந்திரனுடன் தொடர்புகொண்டு விசாரித்தேன். லண்டனில் வதியும் எம்மோடு முன்னர் பணியாற்றிய அலுவலக நிருபர் அன்டன் எட்வர்ட் மூலம்தான் தனக்கும் அந்தச்செய்தி வந்திருப்பதாக பாலா சொன்னார்.
இறுதியாக எஸ் . என். ஆர். பிள்ளையை கடந்த 2019 ஆம் ஆண்டு கொழும்பு – பொரளையில் ஜயரட்ண மலர்ச்சாலையில் வீரகேசரியில் எம்முடன் பணியாற்றிய ஓவியர் மொராயஸின் இறுதி அஞ்சலி நிகழ்வில்தான் சந்தித்து பேசினேன்.
ஓவியர் மொராயஸின் திடீர் மறைவும் எனக்கு அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவர்தான் எனது இலங்கையில் பாரதி நூலுக்கு முகப்போவியம் வரைந்தவர். அதனைக் காணாமலேயே அவர் விடைபெற்றார். இந்தத் துயரத்தை அன்று நண்பர் பிள்ளையுடன் பகிர்ந்துகொண்டேன்.
இன்று பிள்ளையின் மறைவுத்துயரத்தை நண்பர் பாலச்சந்திரனுடன் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது.
பிள்ளை , சுறுசுறுப்பான பத்திரிகையாளர். நான் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் கல்வி, இளைஞர் விவகார அமைச்சின் செய்திகளுக்கு பொறுப்பாகவிருந்து எழுதிக்கொண்டிருந்தார்.
அதற்காக அவர் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் ஊடக சந்திப்புகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது ரணில் விக்கிரமசிங்கா கல்வி, இளைஞர் விவகார அமைச்சராகவிருந்தார். அத்துடன் போர்க்கால செய்திகளையும் பிள்ளை சேகரித்து எழுதினார். பல பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவத் தளபதிகளுடனும் அவருக்கு செய்திகளுக்காக தொடர்பிருந்தது.
கைத்தொலைபேசி பாவனையில் இல்லாத அக்காலப்பகுதியில் அவரும் ஏனைய அலுவலக நிருபர்களும், எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கினார்கள் என்பதை நேரடியாக கண்ட சாட்சிகளில் நானும் ஒருவன்.
அலுவலக நிருபர்களின் பாவனைக்கென இருக்கும் ஒரே ஒரு தொலைபேசியை வைத்துக்கொண்டு, ஆள்மாறி ஆள் அதனை பயன்படுத்துவார்கள்.
அவ்வாறு தேடித்தரும் செய்திகளை செம்மைப்படுத்தி அச்சுக்கு கொடுக்கும்போது, பத்திரிகையில் வெளிவர முடியாத பல அதிர்ச்சியான மற்றும் சுவாரசியமான தகவல்களையும் பிள்ளை எம்மோடு பகிர்ந்துகொள்வார்.
அக்காலப்பகுதியில் பல தமிழ் இளைஞர்கள் வடக்கு – கிழக்கில் இராணுவ முற்றுகையின் தேடுதல் நடவடிக்கைகளின்போது கைதாகி கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் எங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எழுதுவதில் பிள்ளையும் மற்றும் கனக. அரசரட்ணம், அன்டன் எட்வேர்ட், பால . விவேகானந்தா முதலான அலுவலக நிருபர்கள் சமூக அக்கறையுடன் செய்திவேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் எழுதும் செய்திகளில் அவர்களது பெயர்கள் ( By line ) இடம்பெறுவதைத்தவிர, வேறு எந்த விசேட சன்மானங்களும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட எழுத்துக்கூலிகளாகவே அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், தொழிற்சங்கவாதிகளின் இருப்பையும் புகழையும் பதிவேற்றி, தங்களுக்கு கிடைத்த சொற்ப வருவாயுடன் காலத்தை கடத்தியவர்கள் அவர்கள்.
நண்பர் பிள்ளை, அந்த சொற்ப வருமானத்துடன் திருமண பந்தத்தில் ஈடுபடவும் அப்போது தயங்கியவர். அவருக்கு காலம் தாழ்த்தியே திருமணமும் நடந்தது. அப்போது நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டிருந்தேன்.
இலங்கையில் தங்களை அர்ப்பணித்து ஊடகத்துறையில் சேவையாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இன்னமும் சரியான அங்கீகாரம் கிட்டவில்லை. எப்போதாவது பத்திரிகையாளர்
சங்கங்கள் நடத்தும் விழாக்களில் விருதுகள் என்ற பெயரில் ஏதாவது ஒரு நினைவுச்சின்னம் அவர்களுக்கு கிடைக்கும். அவ்வளவுதான் !?
பல ஆண்டுகள் ஊடகத்துறையில் பணியாற்றி ஓய்வுபெறுபவர்களுக்கு இதுவரையில் அரச ஓய்வூதியம் கிடைக்கவும் இல்லை. ஆனால், அரசுகளை அமர்த்துவதிலும், அமைச்சர் பெருமக்களின் இருப்பினை ஊடகங்களில் பதிவேற்றுவதற்கும் பத்திரிகையாளரகள்தான் கடுமையாக உழைக்கிறார்கள்.
இவர்கள் இல்லையேல், அமைச்சர்களின் பெயர்கள் கூட மக்களுக்குத் தெரியவராது.
எஸ். என். ஆர். பிள்ளைபோன்று ஏராளமான தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எத்தனையோ அரசியல் தலைவர்களை, அமைச்சர்களை பேட்டி கண்டு செய்தி எழுதி, அவர்களுடைய பெயரை பிரபலப்படுத்தியிருப்பார்கள்.
ஊடகவியலாளர்களினால் உயர்ந்துவிடும் அரசியல்வாதிகள், தங்களது உயர்வுக்கு காரணமானவர்களின் நலன்கள் குறித்து இதுவரையில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்கவில்லை என்பது எனது ஆதங்கம் என்பதையும் நண்பர் பிள்ளை குறித்த இந்த அஞ்சலிப்பதிவில் தெரிவிக்கின்றேன்.
1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில், வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் சிக்குண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தென்னிலங்கையில் பூசா முகாமுக்கும் சில பொலிஸ் நிலையங்களுக்கும் கொண்டுவரப்பட்டபோது, அவர்களின் பெற்றோர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியவர்கள் வீரகேசரி அலுவலக நிருபர்கள்.
இவர்கள் பற்றிய விரிவான பதிவை எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் ஒரு அங்கத்தில் எழுதியிருக்கின்றேன்.
அதில் நண்பர் எஸ். என். ஆர் . பிள்ளை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் அவரைக்காணும்போது, பழைய நினைவுகளை அவருடன் மீட்டிக்கொள்வதுண்டு.
ஒரு தடவை மலையகத்தில் ஒரு செய்தி தொடர்பாக ஒருவர் வீரகேசரி நிருவாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு தவணைகளுக்கெல்லாம் நிருவாகத்தின் சார்பில் அன்று மலையக நீதிமன்றம் ஒன்றில் தோன்றியவர்தான் பிள்ளை.
அந்த வழக்கு நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிள்ளை, அந்த வழக்கிற்காக பஸ்ஸில் சென்று திரும்பிக்கொண்டிருந்தார். இவ்வாறு வீரகேசரியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் பலர். இன்றும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் பலர்.
நண்பர் பிள்ளையை நினைவுகூரும்போது, அவரைப்போன்ற சமூகத்திற்காக பேசிய – சமூகத்தையும் பேசவைத்த ஊடகவியலாளர்கள்தான் எனது நினைவுக்கு வருகிறார்கள்.
பிள்ளையின் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் அன்புத்துணைவியாருக்கும் அருமை மகன்மாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் துயரத்தில் தொலைதூரத்திலிருந்து பங்கேற்கின்றேன்.
—0— letchumanam@gmail.com