இலக்கியச்சோலை

மாவை நித்தியானந்தன் By நடேசன்….

ஒரு சமூகம் யாரைக் கொண்டாடுகிறது என்பதை வைத்து அந்த சமூகத்தின் அளவை இலகுவாகத் தீர்மானிக்கலாம் எனப் பலராலும் சொல்லப்பட்ட கருத்து சரியா தவறா என்பதை ஒரு புறம் வைத்தாலும், பல சமூகங்கள் தங்கள் சமூகத்தில் வாழும் உன்னதமானவர்களைக் கண்டு கொள்வதில்லை.

பெரும்பாலானவர்கள் இறந்த பின்பே ஆராதிக்கப்படுகிறார்கள். தென்னாசிய சமூகம் அதற்கு நல்ல உதாரணம் . பாரதியார் போன்றவர்கள் வாழும்போது கண்டுகொள்ளப்படவில்லை . அதுபோல் இலங்கைத் தமிழ் அரசியலில் நான் பார்த்த பல இடதுசாரித்தலைவர்களும் எமது மக்களால் அடையாளம் காணப்படவில்லை . அவர்களது அருமையை அறிந்து கொள்ளவில்லை. சமூகத்தை நாசமாக்கியவர்களைக் கொண்டாடினோம். விருதுகள், பட்டங்கள் கொடுத்து இன்புற்றோம்.

சமீபத்தில் எனது நண்பர் மாவை நித்தியானந்தனுக்கு அவரது பாரதி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர் விழா எடுத்து கௌரவித்தார்கள் . மாவை நித்தியானந்தன் இந்த மெல்பனில் புலம் பெயர் தமிழ் சமூகத்தில் கடுமையாகப் பல விடயங்களில் உழைத்தவர். தனது பணத்தையும் மற்றும் உடலாரோக்கியத்தையும் இந்த சமூகத்தை முன்னேற்றும் முதலாக வைத்தார். அவரது இந்த உழைப்பை அரசியலில் அல்லது ஒரு வியாபாரத்தில் அவர் முன்வைத்திருந்தால் அதனது பலன் மலையளவாக இருந்திருக்கும் .

நண்பராக மட்டுமல்ல, அவரை பல விடயங்களில் அருகிலிருந்து பார்த்தவன் . ஒரு விதத்தில் கர்மயோகி என்றால் இப்படித்தான் இருப்பார் என நினைத்தேன். உழைப்பு மட்டும் பல இடங்களில் போதாது. அவர் திறமையும், அறிவும், அனுபவமும் கொண்டவர் .

உதயம் மாத இதழை நடத்திய காலத்தில், அவரிடமிருந்த தமிழ் – ஆங்கில இரு மொழித் திறமையைப் பார்த்தவன். தமிழில் எஸ். பொன்னத்துரையின் எழுத்துகளிலும் பார்க்க நித்தியின் எழுத்துக்கள் கூர்மையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தன என கருதினேன்.

அதற்கப்பால் செய்திகளை எவ்வாறு செம்மைப்படுத்துவது என்பதையும் நித்தியிடமிருந்தே நான் கற்றுக்கொண்டேன். நித்தி இலங்கையில் மேற்கொள்ளும் தற்கொலைத் தடுப்பு சீர்மீயப்பணி – கை கொடுக்கும் கை நிறுவனம் மற்றும் சேதன உரங்களில் மாதிரிப்பண்ணை முதலான தன்னார்வத் தொண்டுகள் முக்கியமானவை.

அவைகளைப் பற்றி மற்றவர்கள் பேசலாம், எழுதலாம். ஆனால், நித்தி மனிதாபிமானியாகவும் விவசாயப் பொறியிலாளராகவும் இருப்பதால் அவரது செயல்பாடுகள் இயற்கையானது.

அக்காலத்தில் சமூகத்தின் முக்கியமாக இருந்த ஈழத்தமிழ் சங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக பாரதி பாடசாலையை முன்னெடுத்தது இமாலய சாதனை – அதை ஒரு புத்தகமாக எழுதலாம்

மாவை நித்தியானந்தனை நான் வியப்போடு பார்க்கும் ஒரு பகுதி அவரது சிறுவர் நாடகங்கள்.

சிறுவர் நாடகமென்பது சிறுவர்கள், பெரியவர்கள்போல் பேசி உடையுடுத்தி நடிப்பதே சிறுவர் நாடகம் என எமது சமூகமே நினைத்திருந்தது. இன்னமும் அவ்வாறே நினைக்கிறது.

நான்கூட சிறுவனாக இருந்தபோது சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவிகளில் ஒருவராக பெண்வேடம் போட்டு நயினாதீவில் நடித்தேன். அதுவே சிறுவர் நாடகமென நான் நினைத்தேன். எனது ஆசிரியர்களும் நினைத்திருந்தார்கள் என இன்று நினைத்துப்பார்க்கிறேன்.

பிற்காலத்தில் குழந்தைகள் நாடகத்தில் குழந்தைகள் குழந்கைளாக நடிக்கவேண்டும் அல்லது மிருகங்களாக நடிப்பதுடன் சிறிய வசனங்கள் பேசவேண்டும் என அறிந்துகொண்டேன் அப்படியாக அறிந்தபின்னர் பார்ந்தபோது நித்தியின் நாடகங்கள் வித்தியாசமாக இருந்தன.

நித்தி எழுதி இயக்கிய பெரியவர்களுக்கான நாடகங்கள் பலவற்றை நான் பார்க்காத போதிலும், அவரது சிறுவர் நாடகங்கள் என்னைக் கவர்ந்தன.

நான் நித்தியின் சிறுவர் நாடகவிழாவைப் பார்த்தபின் எழுதியதிலிருந்து ஒரு பகுதி:

“ பாரதி பள்ளியின் நாடக விழாவிற்குச் சென்றபோது, மீண்டும் என்னை ஒரு சிறுவனாக நினைத்து ,சிறுவர் நாடகங்களை அனுபவித்து நனைவோடையில் நீந்த முடிந்தது. ஒரு விதத்தில் நாங்கள் சிறுவயதில் அனுபவிக்காத விடயங்கள் என்பதில் பொறாமை மதியத்து நிழலாக மனதில் படிந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின்பு, ஆங்கிலத்தில் பார்த்து, படித்து சிறுவர் இலக்கியங்கள், நாடகம் மற்றும் சினிமாவை புரிந்து கொண்டபோது ,எமது நாடுகளில் முக்கியமாக தமிழ்மொழியில் வறுமைக்கோட்டின்கீழ் கவனிப்பாரற்ற ஒரு துறையாக சிறுவர் நாடகத்துறையை உணர்ந்தேன். அதனால் பல முறை மனத்தில் ஏக்கம் வந்தது.

மொழி என்பது ஒரு இனத்தின் சகல பிரிவில் உள்ளவர்களிடமும் உரையாடுவதற்கு தோன்றிய ஊடகம். அதன் வாயிலாக எமது குழந்தைகள், சிறுவர்களிடம் அறிவுரீதியாக உரையாடத் தயாராக இல்லாத சமூகமாக நாம் இருப்பது ஒரு குறையாக எமது மொழி விற்பன்னர்களுக்குத் தெரியவில்லையா?

கோடிக் கணக்கில் பணம் புரளும் திரைப்படம், பத்திரிகை ,தொலைக்காட்சி முதலான ஊடகச் சந்தைக்கு உரிமையானவர்கள் எமது மக்கள். இந்த ஊடகவெளியில் சிறுவர் இலக்கியம், சிறுவர் நாடகம், மற்றும் சினிமாவிற்கு வெளியற்றுப் போய்விட்டதே? குறைந்த பட்சம் சிறுவர்கள், குழந்தைகளை அள்ள அள்ளக் குறையாத பொருளாதார சந்தையாக நினைக்க முடியவில்லையா? ஆங்கிலத்தில் ஹரிபொட்டர் போன்றவற்றைத் தயாரித்து எவ்வளவு பொருள் குவிக்கிறார்கள்?

மெல்பனில் மாவை நித்தியானந்தனின் உழைப்பில் உருவாகிய நாடக விழாவிற்குச் சென்றபோது அது ஒரு தீப்பொறியாகத் தெரிந்தது. ஆனாலும் இது பாரதி பள்ளியின் மெல்பனுக்கு மட்டுமே சொந்தமானது.

அங்கே நான் பார்த்த பல நாடகங்களை லயித்து அனுபவிக்க முடிந்தது. சிறுவர்களின் நாடகத்தைப் பார்க்கும்போது, நாங்களும் சிறுவர்களாகும் நனவோடை உணர்வு ஏற்படுகிறது. அதேநேரத்தில் அங்கு ஒரு உயர்வான மனித விழுமியம் முன் வைக்கப்படுகிறது. நித்தியானந்தன் பேசும் போது சிறுவர் நாடகங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து நடிக்கவைக்கும் வழக்கமான முறைக்கு மாறாக, சகலரையும் அதாவது 500 மாணவர்களையும் நாடகத்தில்

ஈடுபடுத்தியதாகக் குறிப்பிட்டது எனக்கு அசுர சாதனையாகத் தெரிந்தது.

சிறுவர் நாடகம் என்பது இலகுவானது அல்ல. அவர்களை நெறிப்படுத்துவது மட்டுமல்ல; தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் அவுஸ்திரேலியாவில் அந்த மொழியை மேடையில் பேச வைப்பது என்பது பிரமிப்பான விடயம். நாடகங்களை நெறிப்படுத்தியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

பணம் பற்றிய அறிவைச் சிறு வயதில் வளர்ப்பதற்கு அவுஸ்திரேலிய வங்கிகளில் டொலர் மேற் (Dollar Mate) எனக் குழந்தைகளுக்கு ஒரு சேமிப்பு திட்டமிருக்கிறது. அதேபோல் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் இந்த நாடகப்பங்கேற்பு ஒரு விதமான சிறுவயதின் சேமிப்பு. மனிதர்களுக்கு வாய் மொழி எவ்வளவு அவசியமோ அதற்கு மேல் உடல் மொழி அவசியமானது. மொழி தெரியாத நாடுகளிற்குச் செல்லும்போதும், மற்றும் மிருகங்களுக்கு வைத்தியம் செய்யும் என்னைப் போன்றவர்களுக்கும் இந்த உடல் மொழியின் முக்கியத்துவம் தெரியும். மேடை நாடகத்தில் சிறுயதில் தங்களை வெளிப்படுத்தும் குழந்தைகள் பிற்காலத்தில் எந்த இடத்திலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியும். திறமைகளை எந்தக் கூச்சமுமின்றி வெளிப்படுத்துபவர்களைக் கொண்ட சமூகமே, சமூகப்பரிமாணத்தின் உச்சத்தை அடையும்.

ஆரம்பக் காலத்தில் மெல்பன் பொது நிகழ்வுகளில் சிறுவர்களை, பெரியவர்களது அரசியல் உரிமை , இனப்பிரச்சினைகளைப் பேசவைத்து நாடகம் போட்டதைப் பார்த்து எனக்குள் வருத்தமடைந்தேன். அதைச் சிறுவர் நாடகமென நினைத்து குதூகலமடைந்து கைதட்டியவர்களையும் பார்த்தேன். சிட்னியில் ஒரு பாடசாலையில் வள்ளுவர் இளங்கோ என வேசம் போடவைத்ததுடன் அங்குள்ள எழுத்தாளரைப்போல வினோத உடையிலும் ஒரு பிள்ளையை மேடையேற்றினார்கள் என அறிந்தேன்.

மேற்கு நாடுகளில்கூட சிறுவர் இலக்கியம் தாமதமாக 18 ஆம் நூற்றாண்டில் வந்தது. ஆரம்பத்தில் பெரியவர்களது வாய்வழி கிராமியக் கதைகளே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களாக பயிற்சியளிக்கும் நோக்கம் இருந்தது. ஆனால், தற்போது குழந்தைகளை மற்றும் சிறியவர்களை அவர்களது நிலையிலே வைத்துக் கதை சொல்லவேண்டுமென்பது முக்கியமாகிறது

குழந்தைகள் குழந்தைகளாக சிந்திக்க வேண்டும், குழந்தைகளாக பழகவேண்டும், பேசவேண்டும் . அவர்களை பெரியவர்கள் உலகத்தில் வைப்பது குழந்தைகளுக்கு செய்யும் துஷ்பிரயோகம் என நினைக்கிறேன்

ஆரம்ப காலத்தில் கிறிம் பிறதர்ஸ் (Grimm Brothers) என்ற சகோதரர்கள் ஜெர்மன் மற்றும் ஸ்கண்டிநேவியா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு வாழ்ந்த கிராமிய மக்களின் வாய்மொழிக் கதைகளை சேகரித்தார்கள். அவர்களது அயராத உழைப்பே சிண்டரில்லா (Cinderella), சிலிப்பிங் பியூட்டி (Sleeping Beauty, ஸ்னோ வைட் அன்ட் செவன் டுவாவ்ஸ் (Snow White and the Seven Dwarfs) என உலகப் புகழ்பெற்றவை. பிற்காலத்தில் தொடர்ச்சியாக பலர் வாயிலாக சிறுவர் இலக்கியம் வெளிவந்தது. வால்ட் டிஸ்னியின் தயாரிப்புகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்கின்றன.

வரலாற்றுக்காலத்தில் இந்தியாவில் கிராமியக் கதைகளாக இருந்தவை ஜாதகக் கதைகள். இவை பௌத்த இலக்கியத்திற்குள் அடக்கப்பட்டபோதும் மிருகங்களை முன்வைத்து மனித விழுமியங்களை நிலை நிறுத்த உலகில் முதலாவதாக உருவாகிய நாடு இந்தியாவே. ஜாதகக் கதைகள் புத்தருக்கு முன்பானவை. இவற்றின் அடியொற்றியே ஈசாப் நீதிக்கதைகள், அதன் தொடர்ச்சியாக டிஸ்னி வேள்ர்ட், மிக்கி மவுஸ் போன்றன உருவாகின.

இலக்கியம், நாடகம் மற்றும் சினிமாவை நாம் உணர்வுரீதியாக மட்டும் அணுகுவது ஏற்றதல்ல.

இப்படியான உணர்வுகளின் ஆதாரமான கூறுகளாக நமது நண்பர், பிரதேசம், ஊர், மொழியென்று வைக்கப்படுகிறது. இப்படியான வரைவுகளுக்கு அப்பால் நாம் பார்க்கவேண்டும். சிறுவர்களின் மனநிலையை ஆராய்ந்து , சிறுவர் இலக்கியம், நாடகம் தற்போது இப்படித்தான் இருக்கவேண்டும் என வரையறுக்கப்படுகிறது அந்த அளவுகோல்களின்படி பாரதி பள்ளியின் நாடகங்களைப் பார்த்தேன்.

அவற்றில் சில

1) சிறுவர்கள் அல்லது மிருகங்கள் மட்டுமே பாத்திரமாக இருக்கவேண்டும்.

2) கதை அமைப்பு மிகவும் எளிதாகவும் ஒரு நோக்கத்தை மட்டும் அணுகுவதாகவும் நிச்சயமாக மகிழ்ச்சியான முடிவுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்

3) கதையின் உள்ளமைப்பு ஒரு இலகுவான கற்பித்தலை நோக்கிய நிரந்தரமான முடிவுகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்

4) இலகுவாகச் சொல்லக்கூடிய சரளமான மொழியில் இருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு எழுவாய் , பயனிலை என்ற மாதிரியாக இருக்கவேண்டும்

4) காட்சி வடிவமாக, ஓவியமாக வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்

5) குழந்தைகள் இலக்கியத்தில் ஒரு மாயத்தோற்றம் ( Fantasy) இருக்கும். மற்றைய மொழிகளில் இத்தகைய பல படைப்புகள் உள்ளன.

இப்படியான விதிகளுக்கு உட்பட்டே குழந்தை நாடகம், திரைப்படம், இலக்கியம் இருக்கவேண்டும்.

இவற்றைத் தமிழுக்கு மாவை நித்தியானந்தன் கொண்டுசேர்த்தார் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டால், அதுவே மாவை நித்தியானந்தனுக்குச் செய்யும் கவுரவமாகும் . மாலைகள் பொன்னாடைகள் ஒரு அறிவாளிக்குத் தலையில் மேலும் ஏற்றும் சுமை போன்றவை . ஏற்கனவே அவன் தனது சமூக நோக்கால் தனது தலையை பிய்த்தபடியிருக்கிறான். மாலைகளையிட்டு உடல் புல்லரிக்க அவன் அரசியல்வாதியோ நடிகனோ அல்ல.

ஒரு விதத்தில் மாவை நித்தியானந்தனை நாம் அவரது 75 வயதில் கவுரவிப்பதே மிகவும் காலம் கடந்தது . அதிலும் அவரது செயல்பாடுகள் புரியாது அவரை கவுரவிப்பது எப்படி?

இதற்கும் மேலாக அவரைப்போல் சிலரையாவது நாம் மிகவும் விரைவில் எமது சமூகத்தில் உருவாக்கவேண்டும் என்பதே எனது அவா. அதுவே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.