இலக்கியச்சோலை

வீதிக்கு வருகிறார் க்ஷேலக் ஹோம்ஸ்!

வீதிக்கு வருகிறார் க்ஷேலக் ஹோம்ஸ்!
ஆம், மேற்குலகின் இறுக்கமான காப்புரிமை சட்டத்தின் ‘ஆயுள் கதவுகள்’ அகலத் திறந்து இவ்வருடம் ஜனவரி 1ம் திகதி இக்கதாபாத்திரத்தை பொதுப்பாவனைக்கு அனுப்பிவைத்தது. Arthur Conan Doyle உருவாக்கிய இக்கதாபாத்திரம் துப்புத்துலக்கும் கடைசி நாவலான The Case-Book of Sherlock Holmes நாவலின் காப்புரிமை காலாவதியானதின் மூலம் இக்கதாபாத்திரமும் எவரின் கற்பனைக்குதிரையிலும் ஏறி சவாரி செய்யும் சட்ட உரிமையையும் பெற்றுள்ளது.
இனியென்ன, க்ஷேலக் ஹோம்ஸ் துப்புத்துலக்கும் ஒரு மர்ம நாவலை நீங்களும் எழுதிப் பிரசுரிக்கலாம். சட்டத்தின் பிடி உங்களை அணுகாது!
ஆனால் இந்த விடுதலை அத்தனை இலகுவாய் வென்றெடுக்கப்படவில்லை! Arthur Conan Doyle 1930ல் காலமானதும் அவரின் குடும்பவாரிசுகளின் பிடியில் இருந்த அவரது நூல்களினதும் (நான்கு நாவல்கள், 56 சிறுகதைகள்) கதாபாத்திரங்களினதும் காப்புரிமை இறுக்கமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது.
2020ல் வெளிவந்த நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பான Enola Holmes சீரியலின் மீதும் இவரின் காப்புரிமை உரிமையாளர்கள் சட்டநடவடிக்கை எடுத்தனர்.
 ஆத்தர் கொலண்டையில் 1887ல் தனது 27ம் வயதில் எழுதிய A Study in Scarlett நாவல்தான் ஜனவரி 1, 1981ல் முதல் காப்புரிமை காலாவதியான நாவல். ஆனால் 1995ல் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட காப்புரிமை திருத்தல் சட்டம் மீண்டும் இந்நாவலை காப்புரிமை பெட்டகத்தினுள் வைத்து அடைத்தது. சட்டத்தின் பிடிகளில் இருந்து ஜனவரி 1, 2000 விடுதலையானது இந்நாவல். தொடர்ந்து வந்த வருடங்களில் விடுதலைகள் தொடர்ந்தன. இந்த வரிசையில் கடைசியாக சிறையுடைத்த நாவலே The Case-Book of Sherlock Holmes.
எனவே எவரும் இனி ஆத்தர் கொலண்டையில் உருவாக்கிய பிரபல துப்பறிவாளனான க்ஷேலக் ஹோம்ஷை வைத்து கதை புனையலாம். சட்டத்தின் சீண்டல் இனி இருக்காது.
அடுத்த வருடம் ஜனவரி 1ல் இன்னுமொரு பிரபல கதாபாத்திரத்தின் காப்புரிமை காலாவதியாகிறது. அவர்தான் பல தசாப்தங்களாக எமது குழந்தைகளின் உள்ளங்களை மகிழ்வித்த டிஸ்னியின் “மிக்கி மவுஸ்”! ஆனால் அந்த விடுதலையும் அத்தனை இலகுவாய் கிடைக்கப்போவதில்லை. டிஸ்னி ஸ்தாபனம் ஏற்கனவே இதை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டதாய் செய்திகள் வருகின்றன!
பொன்முட்டையிடும் வாத்தை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்?
கிறிஸ்டி நல்லரெத்தினம்
(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.