அமைதியான சமூக செயற்பாட்டாளன் மகாதேவன் ஜெயக்குமரன் மறைந்தார்!…. முருகபூபதி.
அஞ்சலிக் குறிப்பு!…
அமைதியான சமூக செயற்பாட்டாளன் மகாதேவன் ஜெயக்குமரன் மறைந்தார்
முருகபூபதி
கலை, இலக்கிய , சமூக செயற்பாட்டாளரான மகாதேவன் ஜெயக்குமரன் லண்டனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை கனடாவில் வதியும் எழுத்தாளர் – பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் நண்பர் கிரிதரனின் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.
மிகவும் குறைந்தவயதில் சிறுநீரக உபாதையினால் இவர் மறைந்திருக்கிறார். ஜெயக்குமரனை முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் சந்தித்தேன்.
அக்காலப்பகுதியில், கனடா, கியூபா சென்றுவிட்டு திரும்பும் வழியில் லண்டனுக்கு வந்தபோது நண்பர் நூலகர் என். செல்வராஜா, என்னுடன் பயணித்த இலக்கிய நண்பர் நடேசனுக்கும் சேர்த்து லண்டனில் வரவேற்பு தேநீர் விருந்துபசார நிகழ்ச்சியை ஒரு உணவு விடுதியில் நடத்தியிருந்தார்.
இந்நிகழ்விற்கு மு. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், தாஸீசியஸ், அனஸ் இளைய அப்துல்லா, பாலேந்திர – ஆனந்தராணி தம்பதியர், பாலசுகுமார், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தேசம் ஜெயபாலன், நடா. மோகன், நவஜோதி யோகரட்ணம் ஆகியோருடன் ஜெயக்குமரனும் வருகை தந்திருந்தார்.
இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை அன்றே தெரிந்துகொள்ள முடிந்தது. அதிர்ந்து பேசாமல், மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பவர். அச்சந்திப்பின் பின்னர் மீண்டும் அவரை அவுஸ்திரேலியா சிட்னியில் 2008 ஆம் ஆண்டு நாம் நடத்திய எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் சந்திக்க முடிந்தது.
அந்த விழா காலை முதல் மாலை வரையில் சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடந்தது. கலை – இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகளிலும் ஜெயக்குமரன் கலந்துகொண்டார்.
அன்றைய விழாவில் கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளருமான வி. எஸ். துரைராஜாவும்
பேராசிரியர் பொன். பூலோகசிங்கமும் பாரட்டப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் நாடக கலைஞரும் வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான உடுவை தில்லை நடராஜாவும், லண்டனிலிருந்து எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் வருகை தந்திருந்தனர்.
அந்த விழாவில் காலை முதல் மாலை வரையில் எம்முடன் இணைந்திருந்தவர் ஜெயக்குமரன். அவரும் கலை, இலக்கிய ஆர்வலர் என்பதனால், பேசுமாறும் கேட்டேன். தான் பார்வையாளனாகவே நிகழ்ச்சிகளை அவதானிக்கின்றேன் எனச்சொல்லி, இறுதிவரையில் மண்டபத்தில் அமைதியாகவிருந்தார்.
அவரிடமிருந்த ஆற்றலும் ஆளுமைப்பண்பும் எத்தகையது என்பதை, காலம் கடந்துதான் அறிந்துகொள்ள முடிந்தது.
2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜெயக்குமரன் அவுஸ்திரேலியா சிட்னியைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய செய்திகள் எமக்கு கிடைக்கவில்லை.
2009 மே மாதம் போர் முடிவுற்றபின்னர், வவுனியா அகதிகள் முகாமிலிருந்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, முதலில் மூன்று வருடங்கள் சிறைவாசமும் அனுபவித்து, அதன்பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் அணியின் அரசியல் பிரிவுத் தலைவியாக இயங்கிய தமிழினி என்ற இயக்கப்பெயர்கொண்டிருந்த சிவகாமியை, ஜெயகுமரன் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டபோதுதான், மீண்டும் அவர் பற்றிய மேலதிக தகவல்கள் எனக்கு தெரியவந்தது.
தமிழினி சிவகாமி நோயுற்றபோது உடனிருந்து கவனித்துவந்த ஜெயக்குமரன், தமிழினியின் எழுத்தாற்றலை பலரும் மறந்திருந்த சூழலில் மனைவியின் படைப்புகளையும் சிறைக்குறிப்புகளையும் தொகுத்திருக்கிறார்.
எனினும், தமிழினி சிவகாமி புற்றுநோயின் தீவிரத்தினால் குறிப்பிட்ட எழுத்துப்பிரதிகள் அச்சாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழினி 2015 ஆம் ஆண்டு ஒக்டோபரில் மறைந்ததையடுத்து, அவரது ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ ( தன் வரலாறு ) ‘மழைக்கால இரவு’ (கவிதைத்தொகுப்பு) முதலான நூல்களை ஜெயக்குமரன் வெளியிட்டார்.
இதில் ஒரு கூர்வாளின் நிழல் நூல் எதிர்மறையான – நேர் மறையான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நூல் தமிழ்நாடு காலச்சுவடு
பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு சென்னை புத்தகத் திருவிழாவில் பலரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நூல் மேலும் சில பதிப்புகளையும் கண்டுள்ளதாக அறிகின்றோம்.
ஆஸ்திரேலியா மெல்பனில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடத்திய அனைத்துலக பெண்கள் தின விழாவில் தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழல் நூலை அறிமுகப்படுத்தினோம்.
வானொலி ஊடகவியலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜாவின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்த விழாவில், குறிப்பிட்ட நூலை அறிமுகப்படுத்தி எழுத்தாளர் தெய்வீகன் உரையாற்றினார்.
இந்நூல் பின்னர் சிங்கள மொழியிலும் வெளியானது. அப்போதும் தமிழ் தரப்பிலிருந்து எதிர்மறை விமர்சனங்கள் வெளிவந்தன.
எனினும் இந்நூலை வெளியிடுவதில் தனது முழுக்கவனத்தையும் குவித்திருந்த ஜெயக்குமரன் அவ்வேளையில் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் கவனத்திற்குரியவை என்பதனால் இங்கே அதிலிருந்து சில வரிகளை பதிவுசெய்கின்றேன்.
“ மறைந்த முன்னாள் தமிழ்ப்போராளியான தமிழினியின் புத்தகமா-னது சிங்கள சமூகங்களிடையே, சுயபரிசோதனை செய்வதற்கான ஒரு எழுச்சியை அவர்கள் மனங்களில் உருவாக்கியமையே இப்புத்த-கத்திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்கின்றேன். சிங்களத்தில் கிட்டத்தட்ட ஆறாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இப்புத்தகத்தின் சிங்கள வெளியீட்டாளர் உண்மையிலேயே இப்புத்த-கத்தினால் கிடைக்கும் நிதியை மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலையில் சிறுவர் பிரிவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடு-களைச் செய்கின்றார். தமிழினியின் இறுதி விருப்பமும் இதுவாகவே இருந்தது. “
ஜெயக்குமரன் கனடா பதிவுகள் இணைய இதழில் “ மற்றொரு செப்ரெம்பர் 11 ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும் சல்வடோர் அயெண்டே (1908-2008)’ “ என்ற குறிப்பிடத்தகுந்த சர்வதேச அரசியல் விவகார கட்டுரை ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்ததாக அதன் ஆசிரியர் கிரிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு எழுத்தாற்றலும் உலக அரசியல் விவகாரங்களில் எழுதும் திறனும் பெற்றிருந்த ஜெயக்குமரன் அற்பாயுளில் மறைந்துவிட்டார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.
அன்னாருக்கு எமது இதய அஞ்சலி.
letchumananm@gmail.com