இலக்கியச்சோலை

பன்முக ஆளுமை கலைஞர் மாவை நித்தியானந்தனின் பவளவிழா!…. நித்தியம் சிறப்பு மலரும் வெளியீடு!!

கலை, இலக்கியவாதியும், மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும் தன்னார்வத் தொண்டருமான ஆளுமை மாவை நித்தியானந்தனின் பவளவிழா அண்மையில் மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தது.

1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மாவை நித்தியானந்தன், இலங்கையில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் மாணவர். தமது கல்லூரிக் காலத்திலேயே இலக்கியப் பிரவேசம் மேற்கொண்டவர். அத்துடன் நாடகத்துறையிலும் ஈடுபட்டவர்.

கட்டுப்பெத்தை உயர்தொழில் நுட்பவியல் கல்லூரியில் 1968 இல் இணைந்த மாவை நித்தியானந்தன், இக்கல்லூரியின் தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராகவும், மன்ற வெளியீடான நுட்பம் இதழின் ஆசிரியராகவும் செயற்பட்டவர்.

கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் , தேசிய கலை இலக்கியப் பேரவை முதலானவற்றிலும் அங்கம் வகித்திருக்கும் மாவை நித்தி, இனிச்சரிவராது, ( 1972 ) ஐயா லெக்ஷன் கேட்கிறார் ( 1973 ) முதலான நாடகங்களையும் திருவிழா என்ற கூத்தையும் அரங்கேற்றியவர்.

இங்கிலாந்தில் மேற்கல்வியை தொடர்ந்த மாவை நித்தி, 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, இங்கும் தனது பணிகளை கலை, இலக்கியம், இதழியல் சார்ந்து மேற்கொண்டவர். பாப்பா பாரதி என்ற சிறுவர்க்கான வீடியோக்களை மூன்று பாகங்களில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். சிறுவர் நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியதுடன், சில சிறுவர் நாடக நூல்களையும் வெளியிட்டார்.

மெல்பன் கலை வட்டம் என்ற அமைப்பினையும், அதனையடுத்து பாரதி பள்ளி பாடசாலையையும் உருவாக்கியிருக்கும் மாவை நித்தியின் பணிகள் தாயகம் நோக்கியும் விரிவடைந்தது. தமது பூர்வீக ஊரான மாவிட்ட புரத்தில் இயற்கை விவசாய பண்ணையை ஆரம்பித்தார். அத்துடன் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களையும் யாழ்ப்பாணத்தில் உருவாக்கி சீர்மியப்பணிகளையும் மேற்கொண்டார்.

மாவை நித்தியின் பவளவிழாவை அவர் மெல்பனில் உருவாக்கிய பாரதி பள்ளி சமூகம் வெகு சிறப்பாக அண்மையில் நடத்தியதுடன் நித்தியம் என்ற சிறப்பு மலரையும் வெளியிட்டது.

இவ்விழாவில் மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.

திரு. சத்தியன் நிரஞ்சன் நிகழ்ச்சிகளை தொகுத்து அறிவித்தார்.

மெல்பன் நடனாலயா நடனப்பள்ளி இயக்குநர் திருமதி மீனா இளங்குமரனின் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.

திருவாளர்கள் பரந்தாமன், சிவசுதன், நிர்மலதாஸ், சிவசுப்பிரமணியம், முருகபூபதி, திருமதி புவனா இராஜரட்ணம் ஆகியோரும் விக்ரோரியா பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திரு. தியான் கியூ அவர்களும் மாவை நித்தியானந்தனின் அளப்பரிய சேவைகளைப் பாராட்டி உரையாற்றினர்.

பாரதி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

( படங்கள் : மதியழகன் )

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.