இலக்கியச்சோலை

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ … ( படித்தோம் சொல்கின்றோம்) … முருகபூபதி.

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய, 

வன்னியில் வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை ! …. “ அது ஒரு அழகியநிலாக்காலம் “ …..  படித்தோம்       சொல்கின்றோம்…. >>> முருகபூபதி.

ருஷ்ய இலக்கிய மேதைகள் மாக்ஸிம் கோர்க்கி எழுதிய மூன்று தலைமுறைகள், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி எழுதிய கரமசோவ் சகோதரர்கள் முதலான நாவல்களை படித்திருப்பீர்கள்.

மேற்கு ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் கதையை பேசிய புதினங்கள் அவை.

எமது தாயகத்தில் வன்னி பெருநிலப்பரப்பு, விவசாயத்திலும் அரசியலிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காடாக இருந்த அந்தப் பிரதேசத்தை வளம்கொழிக்கும் மண்ணாக மாற்றியவர்களின் கதையை அறிய விரும்புகிறீர்களா…?

மகாலிங்கம் பத்மநாபன் எழுதி, கடந்த ஆவணி மாதம் வெளிவந்திருக்கும் அது ஒரு அழகிய நிலாக்காலம் நாவலை அவசியம் படிக்கவும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் ஆசிரியப் பெருந்தகை மகாலிங்கம் பத்மநாபன், இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார்.

440 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் படிக்கும்போது, எம்மை அறியாமலேயே நாம் அந்த அழகிய நிலாக்காலத்தில் பயணிக்கின்றோம். வாசகர்களை கைப்பிடித்து உடன் அழைத்துச்செல்லும் தன்மையில் மகாலிங்கம் பத்மநாபன் எழுதியிருக்கிறார்.

கடந்து செல்லும் கதைக்குப் பொருத்தமான ஓவியங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. நூலின் இறுதிப்பக்கங்களில் சில ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதனால், இந்தப்புதினம் வெறும் கற்பனை அல்ல என்ற தீர்மானத்துடன் வாசிக்கலாம்.

கனரக வாகனங்கள் ஓடும் அகலமான விரைவு வீதிகளில் நாம் பயணிக்கும்போது, அவை ஒரு காலத்தில் யாரோ முகம் தெரியாத – பெயர் தெரியாத மூதாதையர்களினால் செப்பனிடப்பட்ட

ஒற்றையடிப் பாதைதான் என்பதை நம்மில் எத்தனைபேர் நினைத்துப் பார்க்கின்றோம்.

வெய்யில் மழை குளிர் கோடை பார்க்காமல் இரவு பகலாக அம்முன்னோர்கள் செப்பனிட்ட பதைகளில்தான் நாம் இன்று உல்லாசமாக பயணிக்கின்றோம்.

அது ஒரு அழகிய நிலாக்காலம் புதினத்தை படித்தபோது காடு மண்டிக்கிடந்த வன்னி பெருநிலப்பரப்பினை பசுமை பூக்கும் மண்ணாக மாற்றி, உழவுத் தொழிலின் மூலம் மக்களின் பசியை போக்கிய அம்மக்களின் கடும் உழைப்பு தெரியவருகிறது.

அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை. சீரான வீதிகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பாடசாலைகளே இல்லை. இவ்வாறு இல்லை எனத் தொடர்ந்தவற்றை இல்லாமல் ஆக்கிய பெருந்தகைகள் பற்றிய கதைதான் இந்தப்புதினம். மூன்று தலைமுறைகளின் வாழ்வுக்கோலங்களை இந்தப் புதினம் பேசுகிறது.

தம்பையர் – விசாலாட்சி – ஆறுமுகத்தார் – கணபதி – மீனாட்சி என கதையின் முக்கிய மாந்தர்களின் அன்றாட வாழ்வுடன், வன்னிமண், எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை சித்திரிக்கிறார் மகாலிங்கம் பத்மநாபன்.

கனவுகள் சுமந்த காலங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளரும் வன்னியாச்சி என பேசப்படுபவருமான தாமரைச்செல்வி இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லப்படும் அரிய பதிவு என்ற தலைப்பில் இந்நூலின் வரலாற்றுப்பின்புலத்தை பதிவுசெய்துள்ளார்.

நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் ஆசிரியராகவும் திகழ்ந்தமையினால், ஒவ்வொரு அங்கத்தின் தொடக்கத்திலும் உள்நாட்டு மற்றும் உலக நாடுகளின் வரலாற்றுச்செய்திகளையும் பதிவுசெய்துள்ளார்.

முதலாவது அங்கம் இவ்வாறு தொடங்குகிறது:

“ ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு புதிய நாட்டை கண்டுபிடித்து முதலில் குடியேறி அபிவிருத்தி செய்து வாழ்பவர்கள் பயனியர் (Pioneer) என்று அழைக்கப்பட்டனர்.

“ Pioneer is a person who among the first to explore or settle a new country or area “ பயனியர்கள் நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்பவர்களாகவே இருந்தனர். “

வன்னியின் மூன்று கிராமங்களின் கதையை பேசும் இந்தப்புதினம், அங்கு வாழ்ந்த ஜீவராசிகள் பற்றியும் பேசுகிறது. மக்களுக்கும் அவற்றுக்குமிடையே வளரும் உறவும் – முரண்பாடும் – பகையும் கூட வாழ்க்கைக்கான போராட்டத்தின் அம்சங்கள்தான் என்பதை நூலாசிரியர் சொல்லாமல் சொல்கிறார்.

1900 ஆம் ஆண்டில் தொடங்கும் வன்னிமாந்தரின் கதை, 1982 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அங்கு நேர்ந்த அரசியல் – பொருளாதார – சமூக மாற்றங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் உணவு நாகரீகத்தையும், சிறு தெய்வ வழிபாடு தொடக்கம், ஆலயம் அமைத்து உற்சவம் நடத்தும் காலம் வரையில் மக்களின் மத நம்பிக்கைகள் பற்றியும் பேசுகின்றது.

அத்துடன் அம்மக்களின் அன்றைய காதல், திருமணம், மறுமணம் பற்றியும் சொல்கின்றது.

போர்த்துக்கீஸர், ஒல்லாந்தர் , பிரித்தானியரின் வருகை அவர்களையடுத்து இலங்கை அரசியல்வாதிகளின் பிரவேசம் பற்றியெல்லாம் கதையோடு கதையாக செய்திகள் நகர்ந்து கொண்டிருப்பதனால், வரலற்றுப்புதினம் ஒன்றை வாசிக்கும் அனுபவமும் ஏற்படுகிறது.

“ இப்படைப்புக்குள் பயணிக்கின்ற பொழுது ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் இத்தொடருக்குள் ஒன்றிப் போகின்றோம். எமது பழைய நினைவுகளை மீட்டு இக்கிராமத்துடன், கிராம மக்களுடன் உறவாடி நாமும் அவர்களின் பண்புகளைச் சுவைத்தோம் என்று பேருவகை கொள்ள வைக்கிறது. “ – என்று நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபனின் சமகால ஆசிரியரும் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் வானொலி ஊடகவியலாளருமான எட்வேர்ட் மரியதாஸ் சொல்லியிருக்கும் கூற்று மிகவும் பொருத்தமானது.

மகாலிங்கம் பத்மநாபனுக்கு எமது வாழ்த்துக்கள்.

வெளியீடு : சுப்ரம் பிரசுராலயம் – இல 77, குமரபுரம், பரந்தன்.

—-0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.