இலக்கியச்சோலை

„தமிழ்ப் புத்தகக் கண்காட்சி „ என்பதே சரி என்பதற்கமைய இப்பதிவை இங்கே பதிவிடுகிறேன்!… ஏலையா க.முருகதாசன்.

அன்புடையீர்,

பணிவானவணக்கம்.ஏலையா க.முருகதாசன்.

15.11.22 அன்று பதிவிட்ட,மொழிக்கு இலக்கணம் முக்கியமா இல்லையா என்பதில்,மொழிக்கு புணர்ச்சி எழுத்துக்களின் இன்றியமையாமை ஏன் என்பதையொட்டி சுமார் இணர்டு கிழமைகளாக எனது முகநூலில் தமிழ்ப் புக்தகக் கண்காட்சி „ என்ற வார்த்தையை „புணர்ச்சி எழுத்தின்றி „தமிழ் புத்தக கணகாட்சி „ என்று எழுதலாமா என்று தமிழாய்ந்தவர்கள்,முனைவர்கள் பேராசிரியர், விரிவுரையாளர்,தமிழாசிரியர்கள்,எழுத்தாளர்கள் எனப் பலரிடமும், நான் படித்த கல்லூரியான மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க சர்வதேச வலையமைப்பு முகநூல் தளத்தினூடகவும் பதிவிட்டறிந்து கிடைத்த பதில்கள் வாயிலாக „

தமிழ்ப் புத்தகக் கண்காட்சி „ என்பதே எம்மொழித்திக்குகள் எங்கினும் நின்றும் பார்க்கப்படுகையில் அதுவே சரியான சரியென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படியானதொரு எம்மொழி சார்ந்த ஒரு விடயத்தில் இவ்வளவு நாட்களும் எனது தேடல் ஏன் தொடர்ந்ததெனில் 15.11.22 அன்று எனது முகநூலைத் திறக்கையில் எனது முகநூலோடு தொடர்புள்ள நட்புகளின் பதிவுகள் தானாக வருகையில், அதில் ஒருவரின் முகநூலின் பதிவில் படங்களுடன் „ தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும் „ என்ற பதாகையை கண்டேன்.

தமிழ் புத்தக கண்காட்சி என்ற வார்த்தையில் புணர்ச்சிச் சொற்கள் இல்லாதிருப்பதைக் கண்டு,அப்பதிவின் கீழ் இந்த வார்த்தைகளில் புணர்ச்சிச் சொற்கள் இல்லாமலிருக்கின்றுது என்பதைச் சுட்டிக்காட்டி அதனை யாருமே கவனிக்கவில்லையா, சுட்டிக்காட்டவில்லையா என நான் எனது கருத்தை பதிவிட்ட சில நிமிடங்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பில் ஒரு தோழர் „ என்ன இப்படி பொதுவெளியில் நாகரீகம் இல்லாது எழுதிவிட்டீர்கள், எங்கே எழுத வேண்டுமென்பதற்கு சில பண்புகள் இருக்கின்றன, உங்களுடைய கருத்துக்களை மெசஞ்சரில் போட்டிருக்கலாம் „ என வேகமான குரலில் காட்டமாக என்னிடம் சொன்னதுடன் „தமிழ் புத்தக கண்காட்சி „ என்று எழுதுவதும் சரியெனச் சொன்னார்.

அவரின் கருத்துக்களைக் கேட்ட நான் திருப்தியடையவில்லை.எனினும் நான் இட்ட பதிவை நீக்கிவிட்டு அதனைத் தோழரின் முகநூல் மெசஞ்சரில் பதிவிட்டேன். என்னோடு தொலைபேசி ஊடாக உரையாடியவர் ஐரோப்பிய நாடொன்றில் தமிழ் சார்ந்த, இன வரலாறு சார்ந்த தேடல்மிகு மிகச் சிறப்பான பணிகளை ஆற்றிவரும் இலக்கியவாதி,ஊடகவியலாளர் ஆவார்.

புலத்தில் பல ஆண்டுகளாக இலங்கை கலை இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமல்ல,எந்த நாடாகியினும் தமிழுக்காக உழைப்பவர்களை அணுகி அவர்களின் பேட்டிகளை, கருத்துக்களை அவர்களுடனான சந்திப்புக்களை சூம் வழியாகவும் ஏற்படுத்தி எங்களையும் சந்திக்க வைப்பதுடன் அருமையான நூல்களையும் இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வருவித்து அவற்றைக் காட்சிப்படுத்தியும், விற்பனை செய்தும் தொணடாற்றி வருபவர்.

ஆளுமையும் தனது கருத்தை ,அதுவும் சரி இதுவும் சரி என்பது போல அங்கும் இங்கும் வளைந்து கொடுக்காமல் எவ்வித சமரசமுமின்றி நேரிடையாகச் சொல்லும் ஆற்றல் உடையவர்.

எழுத்துப் படைபபாளிகளுக்கு இருக்க வேண்டிய துணிச்சலை இவரிடம் கண்டிருக்கிறேன். இலங்கை அரசின் நிர்வாகத் திறமையின்மை,இன ரீதியான பாகுபாட்டின் ஊழல் ஒடுக்குமுறை போன்றவற்றை கண்டித்தும் விமர்சித்தும் எழுதுபவர்.

கோதா கம மக்கள் புரட்சியின் போது „மக்கள் எழுச்சி „ என மகிழ்ந்து தனது உணர்வினைப் பதிவிட்ட மனிதநேய உணர்வாளர் உரிமை,மொழி,மனிதம்,இனம், சட்டங்கள் இவை போன்றவை பொதுவானவை.இவற்றுக்கு இடையூறு வரும் போதெல்லாம் அவை எல்லோருக்கும் பொதுவானவை என்ற ரீதியில் பொதுவெளியில் விமர்சிப்பதில் தவறேதும் இல்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும்.

அந்த வகையில்தான் சுவிஸிலுள்ள சூரிச் என்ற இடத்தில் நடந்த புணர்ச்சி எழுத்துக்கள் இல்லாது எழுதப்பட்ட „தமிழ் புத்தக கண்காட்சி „என்ற வார்த்தையில் உள்ள இலக்கணப் பிழையைச் சுட்டிக் காட்டினேன்.

இலங்கையில் பேருந்துகளில் இடம்காட்டல் பலகையில் தமிழ்மொழி தவறான கருத்துப்பட எழுதப்படுவதை, சிங்களப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்களை எழுத்துப்பிழைகளுடன தமிழில் எழுதுவதை,திணைக்களங்களை இனம் காட்டும் கட்டிடப் பலகையில் தமிழை எழுத்தப் பிழைகளுடன் எழுதுவதையெல்லாம் இது தமிழ்மொழியை அழிக்கும் செயல் என்றும்,தமிழ்மொழிப் பாவனை விதியை மறுக்கும் செயல்,இது இன முரண்பாடுகளை வலுக்கச் செய்யும் செயல் என்று அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் சுட்டிக் காட்டுகின்றோம்.

ஊடகங்களில் விமர்சிக்கின்றோம் கண்டிக்கின்றோம். அது போன்றதே எனது சுட்டிக்காட்டலாகும்.ஆனால் அந்நிகழ்வின் பிரமுகராக கலந்து கொண்ட தோழர் „தமிழ் புத்தக கணகாட்சி’என்றும் எழுதலாம் „புணர்ச்சி எழுத்துக்களைச் சேர்த்தும் எழுதலாம் என்ற பதில் இரு தோணிகளில் கால் வைத்துப் பயணிக்கலாம் என்பதற்கு ஒப்பானதாகும்.

ஒரு தோணியில் மட்டுமே பயணிக்கலாம் என்ற போதும்கூட ஒரு வலுவான எந்த அலைவேகத்திலுமோ, சூறாவளியிலுமோ கவிழ்ந்தும் உடைந்து போகாத தோணியிலேதான் ஒருவர் பயணம் செய்வது பாதுகாப்பானது என்பதற்கமைய இலக்கணங்களால் கட்டமைக்கப்பட்ட மொழித்தோணியிலே பயணிப்பதே மொழியை ஆண்டாண்டு காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்து எதிர்காலத்திலும் தமிழ்மொழி வலுவிழக்காது தொடர்ந்தும் மொழி பேணப்படுவதற்கு அடிப்படை ஆதாரமாகும்.

பொதுவாக எழுத்தாளர்களைச் சுற்றியும் கலைஞர்களைச் சுற்றியும் ஒரு ஆதரவு வட்டம் இருக்கும்.இந்த ஆதரவாளர்கள் சரியாகவும் மிகையாகவும் புகழ்ந்துரைக்கும் புகழுரைகளாலும் வாழ்த்துக்களாலும் அவர்களை அறியாமலே நானே! நான் மட்டுமே என்ற அகங்காரம் (Superiority Complex)குடிகொண்டு விடும்.

இத்தகையவர்கள் மீது இவர்களின் செயல்பாடுகளில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது, தவறு விட்டதை ஒப்புக் கொள்ள தடுத்தாட் கொண்ட அகங்காரம் அல்லது செருக்குஅல்லது தாமே உயர்ந்தவர்கள் என்ற இது சார்ந்த உளவியல் சிக்கல்கள் போன்றவை மறுத்து தவறுகளை நியாயப்படுத்த முயலுவார்கள்,கோபப்படுவார்கள்.

எங்கும் எதிலும் தவறு நடந்தால் சுட்டிக்காட்டும் துணிவு போல தான் தவறுவிட்டாலும் அதற்காக மனவருந்தி தவறை ஒப்புக் கொள்ளுதலும் அதற்காக மன்னிப்பு கேட்பதும் கௌரவக் குறைச்சலாகாது.மன்னிப்புக் கேட்பதும்,தவறை ஒப்புக் கொள்வதும் ஆளுமைப் பண்பாகும்.

தலைமைத்துவத்தின் தகுதியாகும். பல தலைவர்கள், தமது அணுகுமறைத் தொடர்பாக மக்களாலும் ஊடகங்களாலும் பிழைகளைச் சுட்டியகாட்டிய போதெல்லாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டது மட்டுமல்ல ஊடகங்களைப் பாராட்டியுமிருக்கின்றனர்.

அத்தகை தலைவர்களை, அவர்கள் பதவியில் இல்லாத போதும், மக்கள் அவர்களை உதாரணப்படுத்தி இவர்கள் போல தலைவர்கள் இருக்க வேண்டுமெனப் பொதுவெளியில் பேசி வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த நிகழ்வில் பதாகையில் இலக்கண விதிப்படி எழுதியது தவறு,தமிழ் என்ற எழுத்துக்கு

அடுத்து புணர்ச்சி எழுத்தான „ப்’பன்னாவையும், புத்தக என்ற எழுத்துக்கு அடுத்து புணர்ச்சி எழுத்தான „க் „கன்னாவையும் எழுதிவிடுங்கள் எனச் சொல்லி ஏற்பாட்டாளர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தோழர் போன்ற சிறந்த ஆளுமையாளர்களின் கடமையாகும்.

உதாரணமாக எம்மை ஒரு விழாவில் முக்கிய பிரமுகராக மதிப்பளித்து அழைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அவ்விழாவினை விளித்துணர்த்தும் வகையில் மேடையில் தொங்கவிடப்பட்ட பதாகையிலோ அல்லது அழைப்பிதழிலோ எழுத்துப் பிழைகளோ அல்லது இலக்கணப் பிழைகளோ காணப்படின்,எமக்கு மதிப்பளித்து அழைத்துவிட்டார்களே,சுட்டிக்காட்டினால் எம்மை மதிக்காமல் விட்டுவிடுவார்களே என்ற பயந்து அதுவும் இதுவும் சரி என்று சமாளிப்பதோ அதை நியாயப்படுத்துவதோ கண்டும் காணாமல் விடுவதோ மொழிக்கு ஒருவர் செய்யும் பெரும்பிழையாகும்.

அதே வேளை தவறுகளைச் சுட்டிக்காட்டும் போதும் எவ்வித மனச் சங்கடமும் இல்லாமல் தவறுவிட்டதை ஏற்றுக் கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் தவறும் இல்லை கௌரவக் குறைச்சலும் இல்லை.அதுவே ஆளுமைப் பண்பும் தலைமைத்துவப் பண்புமாகும்.

எனது பொதுவாழ்விலும் எழுத்துல வாழ்விலும் நடந்த இரண்டு சம்பவங்களை நான் இங்கே குறிப்பிடுகிறேன். ஏலையா சஞ்சிகையின் ஆசிரியராக நான் நடத்திய காலகட்டத்தின் போது, ஆரம்பத்தில் அது கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது.

ஓவ்வொரு மாதமும் ஒவ்வொருவரைக் கொண்டு எழுதுவித்து புகைப்படப் பிரதிகள் எடுத்த அதற்கு சஞ்சிகை வடிவ உருக் கொடுத்து வெளியிட்டு வந்தோம்.

பெரும்பாலும் குடும்பத் தலைவிகளே எழுதித் தந்து உதவி செய்து வந்தார்கள்.ஒரு நாள், அப்பொழுது விடுதியிலிருந்த திரு.யோகநாதன் என்ற இளைஞர் என்னைத் தொலைபேசியில் அழைத்து’அண்ணை ஏலையாவில் ஒரு பிரச்சினை இருக்கிறது வரமுடியுமா, நேரைதான் கதைக்க வேண்டுமென்றார்.

அவரிடம் போன போதுஅவரின் அறையில் இன்னும் மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். என்னை வரவேற்று உட்காரச் சொல்லி தேநீர் தந்து உபசரித்துவிட்டு,ஏலையாவின் ஒரு பக்கத்தைக காட்டி வாசிக்கச் சொன்னார்.

வாசித்த போது ஒரு குறிப்பிட்ட சொல்லின் கீழ் கோடுகள் இடப்பட்டிருந்தன.என்னிடமிருந்து என்ன பதில் வரப் போகின்றது என்பதைக் கவனித்துக் கொண்டேயிருந்தார்கள்.

அது கல்வியின் முக்கியத்துவம் என்ற கட்டுரை.பல இடங்களில் கல்வி என்ற சொல்லின்’ல’னா என்ற எழுத்தின் மேல் குற்றிடப்படாமல் „கலவி’ என்று பொருளாகியதைப் பார்த்து நான் திகைத்து சங்கடப்பட்டேன்.

ஒரு இடத்தில் „மாணவர்களுக்கு கலவியின் முககியத்துவத்தை பெற்றோரும் ஆசிரியர்களும் உணர்த்த வேண்டுமென்று பொருளுணர்த்தி நின்றது.அத்தவறுக்கு எந்தப் பதிலும் இல்லாது தடுமாறி உடனேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டேன்.

நான் சமாளிப்பதற்காக „எழுதித் தந்தவர் கவனித்திருக்க வேண்டும்’ என்று சொல்ல, துரை என்ற இளைஞர்’ அப்படிச் சொல்லாதீங்கள் அண்ணை,நீங்கள்தானே ஆசிரியர்,உங்களுடைய பொறுப்பு எழுத்துப் பிழைகளைக் கவனிப்பதுந்தான்,இனிமேல் கவனமாக இருங்கள்,ஏதாவது உதவி தேவையென்றால் என்னைக் கேளுங்கள்’ என்றனர்.

ஏலையா வெளிவரும் காலம் வரையும் அந்த இளைஞர்கள் ஏலையாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். இளைஞர்களின் விடுதியிலிருந்து வீட்டுக்க வந்த நான்,கட்டுரையை எழுதித் தந்த குடும்பத் தலைவிக்கு தொலைபேசியில் நீங்கள் எழுதித் தந்த கட்டுரையில் இருந்த எழுத்துப் பிழைகள் வேறு ஒரு

பொருளாக்கிவிட்டது என்று சொல்ல’ நீங்தள்தானே ஆசிரியர்,நான் எழுதித் தந்ததை சரிபிழை பார்த்திருக்க வேண்டும்,பிழையென்றால் திருப்பிச் சரியாக எழுதித் தந்திருப்பேன்.தவறுஉங்களுடையதுதான் எனச் சொல்ல அவரிடமும் மன்னிப்புக் கேட்ட நான் அடுத்த இதழில்’குற்றவாளிக் கூண்டுக்குள் ஏலையா இருப்பது போல கேலிச் சித்திரம் வரைந்து „குற்றவாளிக் கூண்டில் ஏலையா’ எனத் தலைப்பிட்டு,ஆசிரியரின் தவறால்தான் „கல்வியின் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் எழுத்துப் பிழைகள் இடம்பெற்றன அதற்காக வாசகர்களிடம் நான் மன்னிப்புக்கேட்கிறேன்; என அடுத்த இதழில் அதனைப் பிரசுரித்தோம்.

இன்னொன்று நான் சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் முதலாவது தலைவராக இருந்த போது திருமதி.ஜெகதீஸ்வரி இராஜரட்ணம் என்ற கவிஞையின் „புலமும் புலராத பொழுதுகளும்’ என்ற கவிதை நூலை அவரின் நகரான ஜேர்மனியிலுள்ள சார்புறூக்கன் என்ற நகரில் வெளியிட்ட அன்று(25.09.2005),நிகழ்வைப் பார்த்துக் கொண்டு மண்டபத்தில் ஒரு ஓராமாக நின்ற என்னை மேடையிலிருந்த, அப்பொழுது கலை பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்த திரு.முல்லை ஜெயராஜ் அவர்கள்,மேடைக்கு வரும்படி சைகை செய்ய,மேடையேறி அவரருகில் சென்று குனிந்து என்னவென்பது போலக் கேட்க,எனக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக „திரும்பிப் பதாகையில் எழுதப்பட்டிருக்கின்ற புத்தகத்தின் தலைப்பைப் பாருங்கள்’என்றார், பார்த்துவிட்டுத் திரும்ப கவிதை நூலின் முன் அட்டையில் எழுதியிருக்கின்ற கவிதைத் தலைப்பைப் பாருங்கள் என்றார்.

பார்த்தவுடன் எனக்குப் பகீர் என்றது.காரணம் பதாகையில் „புலமும் புலராத பொழுதும்’ என்றிருக்க,கவிதை நூலில் „புலமும் புலராத பொழுதுகளும்’ என்றிருந்து.திரு.முல்லை ஜெயராஜ் எதுவுமே சொல்லவில்லை,ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்தார்.

அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் மேடையேறி,தலைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சபையோரிடம் தலைவர் என்ற ரீதியில் முழுப் பொறுப்பையும் ஏற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இன்னொரு தோழரும் அதுவும் இதுவும் சரி என்றார்.அவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்தான்.அவர் மிகச் சிறந்த எழுத்தாளர்.நூல்களை வெளியிட்டவர்.பட்டிமன்றங்களில் ஆரவாரமில்லாமல்; காத்திரமான கருத்துக்களை முன் வைத்து எதிரணியினரை திகைப்படைய வைப்பவர்.

எம்மோடு இணைந்து „விழுதல் என்பது எழுகையே’என்ற நாவலை எழுதியயவர்.தானும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால் இலக்கணத் தவறைச் சுட்டிக்காட்ட ஏதோ அவரைத் தடுத்திருக்கிறது. மொழிக்கு இலக்கணம் மிக முக்கியமானது என்பதை சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லையே.

தமிழகத்திலிருந்து வரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகை போன்ற ஊடகங்களிலும் புணர்ச்சி எழுத்துக்கள் இல்லாதிருப்பதை சுட்டிக் காட்டி தமது தவறுகளை நியாயப்படுத்த முயற்சிப்பது மிகப் பெரும் பிழையானதாகும்.

தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் இளந்தலைமுறையினர்கள்: மத்தியிலும் ஆங்கில மொழிப் புழக்கம் அதிகரித்து தமிழ் இரண்டாவது மொழியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தித் திணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் தமிழ்மொழிக்கு இலக்கணம் தேவையில்லை என்ற அசட்டைத்தனமும் இந்தித் திணிப்பும் இணைந்து தமிழகத்தில் தமிழ்மொழி படிப்படியாக உருக்குலைந்து போய்விடும்காலம் வரலாம்.

இலக்கணம் முக்கியமானது என்பதற்கு உதாரணமாக புவியீர்ப்பு விசையைக் கூறலாம். இந்த உலகில் எத்தகு பிரமாண்டமான உயரமான கட்டிடங்களையோ அல்லது இராட்சத பாலங்களையோ கட்டலாம்,இன்னும் குறிப்பாக பெரும் இரண்டு மலை உச்சிகளில்கூட ஒன்றோடு ஒன்று இணைத்து

பாலங்கள் கட்டப்படுவதையும் பார்த்து வருகிறோம்.இவை யாவும் புவியீர்ப்பு விதியை மீறிக் கட்டவே இயலாது. சில பிரமாண்டமான பாலங்கள் தூண்களில் நிறுத்தப்படும் போது நிறுத்தப்படும் இடத்தின் அளவு ஒரு அரை மீற்றர் சற்சதுரத்தில் இருக்கும்.

அங்கே ஒரு குமிழ் போன்ற ஒரு பொருளே தூணையும் பாலத்தையும் இணைத்திருக்கும்.இந்த இராட்சத பாலத்தை ஒரு சிறு குமிழ் எப்படி இணைத்து வைத்திருக்கின்றது.இங்கேகதான் புவியீர்ப்பு விதி கணக்கிப்படுகிறது.

எந்த நவீன தொழில்நுட்பமாக இருந்தாலும் புவியீர்ப்பு விதியை மீறி எதுவுமே செய்ய இயலாது.

அது உரு துணில் மட்டுமே கட்டப்படும் மிக மிக பெரும் கட்டிடங்களாக இருந்தாலும் கட்டிடக்கலை நிபுணர்களால் புவீயீர்ப்பு விசையை ஒரு இடத்தில் குவிக்கப்படும் விஞ்ஞான விதியின்படியே கட்டப்படுகிறது.

அது போன்றுதான் மொழிக்கான புவியீர்ப்பு விதி இலக்கணமே.இலக்கண விதிகளில் சொல்லப்படும் அனைத்துமே மொழிக்கான படிமங்கள். ஏதாவது ஒன்றை நீக்கினாலும் மொழியின் கட்டமைப்பு சிதிலமடைந்து பின்னர் குலைந்துவிடும்.

எனவே,தமிழ் மொழிக்கான இலக்கண விதிகளில் ஒன்றாகிய புணர்ச்சி விதி முக்கியம் என்பதுடன் „ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி’ என்பதே சரியென்பது நிரூபிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.