இலக்கியப் பயணத்தில்….. சில நேரங்களில் சில மனிதர்கள்!… முருகபூபதி.
இரண்டு மாத காலத்துள் அடுத்தடுத்து நிகழ்வுகள்
முருகபூபதி.
சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாடொன்றிலிருந்து ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னைத் தொடர்புகொண்டு, அடுத்த ஆண்டு தாம் வெளியிடவிருக்கும் ஆண்டுமலருக்கு ஆக்கம் அனுப்பிவைக்குமாறு கேட்டார்.
அவரது வேண்டுகோளை தட்டமுடியாது. “ எத்தகைய ஆக்கம் தேவை..? “ எனக்கேட்டேன்.
“ கலை, இலக்கிய, ஊடகத்துறை, மற்றும் இதழியல் சார்ந்து இயங்கிய பலர், இலங்கையிலும் தமிழ் நாட்டிலும், புகலிட தேசங்களிலும் கொவிட் பெருந்தொற்று பரவத்தொடங்கிய பின்னர் அடுத்தடுத்து மறைந்துவிட்டனர். அவர்களைப் பற்றிய தொகுப்பாக ஒரு கட்டுரையை எழுதி அனுப்புங்கள். “ என்றார்.
“ அவர் சொல்லவந்த பலரையும் பற்றி முடிந்தவரையில் அஞ்சலிக்குறிப்பு கட்டுரைகளை ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். மீண்டும், ‘ கல்வெட்டு ‘ எழுதப்போகிறீர்களா..? “ எனக்கேட்ட எனது மனைவி மாலதி தாயகம் புறப்பட்டு சென்றுவிட்டாள்.
புறப்படும்போது, “ கொவிட் பெருந்தொற்று முற்றாக மறையவில்லை. உடல் நலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். “ என்றும் அக்கறையோடு சொல்லிவிட்டே விடைபெற்றாள்.
எனது மனைவியின் பயணம் எனக்குக் கிடைத்த நீண்ட விடுமுறைதான் என்று எனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி பெருமிதப்பட்டேன்.
“ அவ… இல்லாமல் எப்படி சமாளிக்கப்போகிறீர்கள். சமையல் சாப்பாடு…. “ என்று என் மீது அக்கறையுள்ள ஒரு இலக்கியவாதி தொலை தூரத்திலிருந்து பரிவோடு கேட்டார்.
“ முப்பத்தியைந்து ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்கின்றேன். எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். ஒரு மணி நேரத்தில் பத்துப்பேருக்கு சுவையான உணவு சமைத்து பரிமாறவும் தெரியும் “ என்று பெருமை பேசினேன்.
மெல்பனிலிருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவிலிருக்கும் ஒரு புறநகரத்தில் நான் தற்போது வசிப்பதனால், மெல்பனில் வதியும்
எனது பிள்ளைகள், “ அப்பா தனியே இருக்கவேண்டாம். வந்து தங்களுடன் நில்லுங்கள் “ என அழைத்தனர்.
அவர்களது அக்கறைக்கு – எனக்கிருக்கும் உடல் உபாதைகளும் நான் உள்ளெடுக்கும் மருந்து மாத்திரைகளும்தான் காரணம். போதாக்குறைக்கு இக்காலத்தில் வீடுகளில் தனியே இருப்பது ஆபத்து என்றும் சொன்னார்கள்.
சமகாலத்தில் silent heart attack என்பதும் பேசுபொருள்.
“ நான் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருப்பவன். கவலை வேண்டாம் “ என்றேன் அவர்களிடம்.
மனைவி எனக்குத் தந்த சுமார் மூன்று மாத விடுமுறை எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே கழிந்தது.
அதற்குக் காரணம் இலக்கியம்தான். இலக்கிய ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் எனக்கு நன்கு தெரிந்த சிலரை சென்று பார்த்து அவர்களின் சுக நலன் விசாரித்தேன். 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து கடந்த இரண்டு வருடகாலத்திற்கும் மேலாக வெளிப்பயணங்களை முடிந்தவரையில் தவிர்த்துக்கொண்டு வீட்டில் முடங்கியிருந்த பலருக்கும் மன அழுத்தம் வருவது தவிர்க்க முடியாதது.
பல மெய்நிகர் அரங்குகளில் இணைந்துகொண்டு, முடிந்த வரையில் ஊர் சுற்றினேன். நிறைய வாசிக்கவும், எழுதவும் நண்பர்களை சந்திக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எனது ஆரம்ப பாடசாலைக் காலத்தில் எனக்கு ஆசிரியர்களாக விளங்கிய சுப்பிரமணியம் – சிவஞானசுந்தரி தம்பதியரின் புதல்வி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி ஒருநாள், கனடாவிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு, “ அண்ணா… லண்டனிலிருக்கும் எனது தங்கை மகளின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்கின்றேன். அந்தப்பயணத்தில் உங்கள் அவுஸ்திரேலியாவுக்கும் வருவதற்கு விரும்புகின்றேன். எனது புதிய சிறுகதைத் தொகுதி “ ஒன்றே வேறே “ மட்டக்களப்பு மகுடம் பதிப்பகத்தினால் வெளியாகிறது. அதனையும் அங்கே அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். வரட்டுமா..? “ எனக்கேட்டார்.
இறுதியாக ஶ்ரீரஞ்சனியை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கடும் குளிர்காலத்தில் பனிபெய்யும் நாட்களில் கனடாவில் சந்தித்தேன். மகாஜனா கல்லூரி முன்னாள் அதிபர் ( அமரர் ) கனகசபாபதி சேருடன் என்னையும் அழைத்துக்கொண்டு, வானொலி ஊடக
கலையகங்களுக்கும் அழைத்துச்சென்றார். இலங்கையில் ஆசிரியராக பணியாற்றியவாறு அவ்வப்போது இலக்கியப்பிரதிகளும் எழுதிவந்திருக்கும் ஶ்ரீரஞ்சனி, மீண்டும் உற்சாகத்துடன் எழுதத் தொடங்கிய காலம் அந்த 2007 ஆம் ஆண்டுதான்.
அதன்பின்னர் – நான் நிழலானால், உதிர்தலில்லை இனி, பின் தொடரும் குரல், முதலான நூல்களையும் வரவாக்கியிருக்கும் ஶ்ரீரஞ்சனி தனது புதல்வியுடன் இணைந்தும் சில சிறுவர் இலக்கிய நூல்களை எமது புகலிடத் தமிழ்க் குழந்தைகளுக்காக வழங்கியிருப்பவர்.
ஶ்ரீரஞ்சனி வரவிருக்கும் செய்தியை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிருவாகக்குழுக்கூட்டத்தில் தெரிவித்தேன். அவருக்காக ஒரு இலக்கிய சந்திப்பினை மெல்பனிலும் நடத்துவதற்கு சங்கத்தின் அனுமதியை கோரியிருந்தேன். அத்துடன், நீண்டகாலமாக எமது சங்கம் சிட்னியில் இலக்கிய சந்திப்புகளை நடத்தவில்லை என்பதையும் நினைவூட்டி, எமது சங்க உறுப்பினர்கள் சிலருடைய புதிய வெளியீடுகளுடன் , ஶ்ரீரஞ்சனியின் புதிய கதைத் தொகுதி ஒன்றே வேறே நூலையும் சிட்னியில் அறிமுகப்படுத்தவும் இந்த காலப்பகுதியை பயன்படுத்தலாம் என்ற எண்ணக்கருவையும் வெளிப்படுத்தினேன்.
சிட்னிக்கு வருவதற்கு விரும்பியவர்களையும் அழைத்தேன்.
எமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும் தற்போதைய காப்பாளருமான கவிஞர் அம்பி அவர்களும், எனது சிட்னி வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் அவரது சொல்லாத கதைகள் தொடரை ( முப்பது அங்கங்களுக்கும் மேற்பட்டது ) அவர் தொலைபேசி ஊடாகச் சொல்லச்சொல்ல எழுதி பதிவேற்றிக்கொடுத்திருந்தேன்.
தனது எழுபது வருட எழுத்தூழியம் தொடர்பாகவும் மற்றும் ஒரு தொடரை எழுதவேண்டும் என அவர் விரும்பியிருந்தார்.
அதற்காக தன்னுடன் நான் வந்து தங்கியிருக்கவேண்டும் எனவும் கோரியிருந்தார். கடந்த சில மாதங்களாக என்னுடன் தொலைபேசி தொடர்பிலிருந்தவர் அவர்.
மெல்பனில் கனடா ஶ்ரீரஞ்சனியின் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிட்னி நிகழ்ச்சி நிரலையும் தயாரித்துக்கொண்டிருக்கையில், கொழும்பில் இலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரனும் வத்தளையில் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பும் அடுத்தடுத்து மறைந்தனர்.
எமது சங்கம் 15-10-2022 ஆம் திகதி சங்கத்தின் மூத்த உறுப்பினர் ‘ பாடும் மீன் ‘ ஶ்ரீகந்தராசா தலைமையில் மெய்நிகரில் “ அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல் “ என்ற தலைப்பில் நினைவேந்தல் அரங்கை நடத்தினோம். அதனையடுத்து, இதே ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழாவை மெய்நிகரில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோது, வத்தளையில் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் ஒக்டோபர் 21 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்ற மற்றும் ஒரு துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்த வெளிநாட்டு மூத்த ஊடகவியலாளருக்கு நான் ஒப்புக்கொண்ட பதிவில் இந்த இரண்டு இலக்கிய நண்பர்களையும் இனி மேலதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மனதிற்குள் உறைந்துபோனேன்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி எமது வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில் நடந்தது. பிரதான பேச்சாளர்கள் தமிழ் நாட்டிலிருந்து எழுத்தாளரும் முன்னாள் ஐ. பி. எஸ் அதிகாரியுமான திலகவதி, மற்றும் எழுத்தாளரும் திரைப்பட கலைஞரும் சிறந்த கதை சொல்லியுமான பவா செல்லத்துரை.
இவர்களுடன் எமது சங்க உறுப்பினர் எஸ். கிருஷ்ண மூர்த்தியின் புதிய நூலான நோபோல் ( சிறுகதைகள் ) பற்றி இலங்கையிலிருந்து கலாநிதி குணேஸ்வரனின் வாசிப்பு அனுபவ உரை, அத்துடன் எமது சங்கத்தின் மற்றும் ஒரு உறுப்பினரான நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவ உரை என்பன நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தது.
திலகவதியை கன்பராவிலிருந்து ஆழியாள் மதுபாஷினியும் பவா செல்லத்துரையை மெல்பனிலிருந்து கிறிஸ்டி நல்லரெத்தினமும் அறிமுகப்படுத்திப்பேசினர்.
கார்த்திகாவின் குறிப்பிட்ட புதிய நூலை வாசித்து அந்த மெய்நிகர் அரங்கிற்காக எழுதிக்கொண்டிருந்தபோது, நண்பர் நடேசன் எனக்கு அழைப்பெடுத்தார்.
அவர் அங்கம் வகிக்கும் Australia South Asia Society (ASAS) அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் கலை விழா ஒக்டோபர் 29 ஆம் திகதி புத்தக கண்காட்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அன்றைய தினம் இரவு 8-00 மணிக்கு எமது தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில். Australia South Asia Society இன் நிகழ்ச்சி மாலை 3-00 மணிக்கு ஆரம்பமாகிறது.
மடிக்கணினியுடன் இனி ஓடவேண்டியதுதான் என மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.
இதற்கிடையில் ஒக்டோபர் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு லண்டனிலிருந்து, கனடா ஶ்ரீரஞ்சனி வந்திறங்கிவிட்டார். அவரையும் பார்க்கவேண்டும்.
மறுநாள் 28 ஆம் திகதி அவர் வந்து தங்கியிருந்த வீட்டுக்குச்சென்றேன். உலகம் எவ்வளவு சிறியது என்பதையும் அப்போது மீண்டும் தெரிந்துகொண்டேன். ஶ்ரீரஞ்சனி மெல்பனில் வந்து தங்கியிருந்த வீட்டுக்காரர் எமது நீண்ட கால நண்பர் ஊடகவியலாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ், மற்றும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் ( அமரர் ) சட்டத்தரணி கே. கந்தசாமி ஆகியோரின் நெருங்கிய உறவினர்.
ஶ்ரீரஞ்சனிக்காக வானொலி நேர்காணல் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தை சிட்னி A T B C வானொலி கானா. பிரபாவுக்கும் S B S வானொலி றைசெல் அவர்களுக்கும் தெரிவித்திருந்தேன்
கானா. பிரபா, மெய்நிகர் ஊடாகவே 28 ஆம் திகதி மாலை ஶ்ரீரஞ்சனியுடனான நேர்காணலை சிறப்பாக பதிவுசெய்துகொண்டார். அதன் ஒலிக்கீற்றை பின்னர் கேட்டபோது, தம்பி கான. பிரபாவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு தெரிந்தது.
ஊடகத்திற்காக ஒருவரை பேட்டிகாண்பதற்கு முன்னர் பேட்டி காண்பவர் மேற்கொள்ளவேண்டிய தேடல்கள் மிக மிக முக்கியம். பேட்டி காணத் தயாராகிவிட்டு, “ உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அதிலிருந்து கேள்விகளை கேட்கின்றேன். “ எனச்சொல்லும் பலரை ஏற்கனவே பார்த்திருக்கின்றேன்.
ஶ்ரீரஞ்சனி குறித்த இலக்கிய தகவல்களையெல்லாம் கருத்தூன்றிப் படித்துவிட்டு, அந்த நேர்காணலை கானா. பிரபா பதிவுசெய்திருந்தார்.
மெல்பன் புறநகரம் மோர்வெல்லில் எனது வீட்டிலிருந்து ஒக்டோபர் 28 ஆம் திகதி காலையில் புறப்பட்டு நவம்பர் 07 ஆம் திகதி மீண்டும் வீடு திரும்பினேன். அந்த பத்து நாட்களும் எனது வீட்டின் வளவில் வளர்ந்த
பயிர்களுக்கும் பூமரங்களுக்கும் வர்ண பகவான்தான் தண்ணீர் பாய்ச்சினார்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி மாலை மல்கிறேவ் சமூக மண்டபத்தில் நடந்த Australia South Asia Society இன் விழாவில் இடம்பெற்ற கண்காட்சிக்காக அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களை எடுத்துச்சென்றேன்.
அவை: மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்பிதழ். பிரான்ஸ் அம்மா இதழ் வெளியிட்ட சிறப்பிதழ். இலங்கை ஞானம் இதழ் வெளியிட்ட சிறப்பிதழ், தமிழ் நாடு கணையாழி வெளியிட்ட சிறப்பிதழ். இவற்றுடன் எமது தமிழர் ஒன்றியம் 1990 இல் வெளியிட்ட அவுஸ்திரேலிய முரசு பாரதி சிறப்பிதழ்.
தென்கிழக்காசிய நாடுகளின் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. நண்பர் கலாநிதி மணிவண்ணன் சொர்க்கம் திரைப்படப்பாடல் ஒன்றையும் பாடினார். அன்று அவர் உபவாசம். தண்ணீர் மாத்திரம் அருந்தினார்.
“ கந்தசஷ்டி, கேதார கௌரி விரதம், சூரன்போர், உபவாசம்… என்று சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது நீங்கள் இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறீர்களே…?! “ என்று ஒரு குரல் எனது செவிக்கு எட்டியது.
இனிமேல் எமது சங்கம் கலண்டர் பார்த்து நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்காமல், பஞ்சாங்கம் பார்த்து குறிப்பதுதான் நல்லது என்று அந்தக்குரலுக்கு பதில் சொன்னேன்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி Australia South Asia Society இன் விழா நிறைவுபெறுவதற்கு முன்பே, எனது மடிக்கணினியுடன் இரண்டாவது மகள் வீட்டுக்கு ஓடினேன்.
இரவு 8-00 மணிக்கு தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில் தொடங்கியது.
சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் அவர்களின் தலைமையில் நடந்த இந்த அரங்கில் தமிழ்ச் சிறுகதைகள்- இன்று என்ற தலைப்பில் திலகவதி விரிவாகவே பேசினார். குளத்தங்கரை அரச மரம் எழுதிய வ.வே. சு. ஐயரிலிருந்து புகலிடத்திலிருந்து சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள் வரையில் முடிந்தளவு தகவல்களை திரட்டி தனது உரையை திலகவதி தயாரித்திருந்தார்.
அவரது உரையை தொடக்கப் புள்ளியாக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில், இலங்கை – தமிழகம் – சிங்கப்பூர் – மலேசியா – அவுஸ்திரேலியா – கனடா – பிரான்ஸ் – இங்கிலாந்து – ஜெர்மனி –
டென்மார்க் – நோர்வே – சுவிட்சர்லாந்து முதலான நாடுகளில் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை மதிப்பீடு செய்யும் பாரிய பணியை எவரேனும் மேற்கொள்ளவேண்டும்.
கடந்துவிட்ட 150 வருட காலத்துள் ஆயிரக்கணக்கான சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துவிட்டன. பலரும் சிறுகதை இலக்கியம் தொடர்பாக விமர்சன நூல்களை எழுதியிருக்கின்றனர். எங்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி, மற்றும் சிட்டி – சோ. சிவபாத சுந்தரம் ஆகியோருக்குப்பின்னர் எவரேனும் இதுவிடயத்தில் ஈடுபட்டனரா…? என்பதும் தெரியவில்லை. ஆனால், குறிப்பிடத்தகுந்த நூறு தமிழ்ச்சிறுகதைகள் என்ற தலைப்பில் மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன. அத்தகைய பட்டியல்களில் பலர் விடுபட்டுமிருக்கின்றனர்.
பவா செல்லத்துரையின் “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ என்ற தலைப்பிலான உரையும் கருத்தாழம் மிக்கதாக அமைந்தது.
அதில் அவர் குறிப்பிட்ட ஜெயகாந்தன் பற்றிய செய்தி மிகவும் முக்கியமானது. ஜெயகாந்தன் எப்போது வாசிப்பதை நிறுத்திக்கொண்டாரோ அப்போதே அவர் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டார். எனவே எழுத்தாளர்கள் தொடர்ந்தும் வாசித்தால்தான் எழுதவும் முடியும் என்ற பவா செல்லத்துரையின் கருத்து ஏற்புடையது.
அவுஸ்திரேலியா நேரம் நடு இரவுக்கு முந்திய பொழுதையும் அந்த மெய்நிகர் அரங்கு நெருங்கியது.
மறுநாள் 30 ஆம் திகதி மெல்பன் வேர்மண் தெற்கு சமூக இல்லத்தில் கனடா ஶ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இந்த அரங்கில் மறைந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பிற்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி சிவமலர் சபேசன், ஶ்ரீரஞ்சனிக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். எனது வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் ஶ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே கதைத் தொகுதியின் வாசிப்பு அனுபவம் சார்ந்த தமது நயப்புரைகளை மெல்பன் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் திரு. பாலசந்தர் சௌந்தர பாண்டியன், திருமதி கலாதேவி பாலசண்முகன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
மருத்துவக் கலாநிதி ( திருமதி ) சாந்தினி சத்தியலிங்கம் எழுத்தாளர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆகியோர் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். ஶ்ரீரஞ்சனிக்கு சங்கத்தினால் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
சிட்னியில் நவம்பர் 05 – இலக்கிய சந்திப்பு
சிட்னி இலக்கிய சந்திப்புக்கான மண்டபத்தை எனது நீண்ட கால நண்பரும் வீரகேசரி நாளிதழின் சிரேஷ்ட செய்தி ஆசிரியருமான ( அமரர் ) கார்மேகத்தின் புதல்வி திருமதி கனகா. கணேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
கனகா. கணேஷ் தேர்ந்த வாசகி. அத்துடன் சிறுகதைகளும் எழுதுபவர். 1990 ஆம் ஆண்டு சென்னையில் இவரையும் இவரது பெற்றோரையும் சந்தித்தபின்னர் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.
எனினும் கனகா, சிட்னிக்கு வந்துவிட்டார் என்ற செய்தி காலம் தாழ்த்தியே எனக்கு கிடைத்தது. இவரை எனது யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றிய நூல் ) மின்நூலின் மெய்நிகர் அரங்கில்தான் மீண்டும் பார்த்தேன்.
“ அங்கிள்… சிட்னி வருவதாயின் எங்கள் வீட்டிலேயே தங்கவும். இலக்கிய சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மண்டபம் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது . “ என்றார். அந்த மண்டபம்தான் Toongabbie Community Centre.
நவம்பர் 01 ஆம் திகதி காலை நானும் நடேசனும் மெல்பனிலிருந்து ரயிலில் சிட்னிக்கு புறப்பட்டோம். Albury ரயில் நிலையத்தை நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டு செய்திகள் கிடைத்தன.
ஒன்று ஒலிபெருக்கியில் வந்தது. அந்த ரயில் Albury இல் தரித்துவிடும். அதன் பின்னர் நகரமாட்டாது. இடையில் வெள்ளம் வற்றாதிருப்பதனால், பயணிகள் அனைவரும் பஸ் வண்டிகளில் அனுப்பப்படுவார்கள். நேர்ந்துவிட்ட அசௌகரியங்களுக்காக வருந்துகின்றோம்.
இரண்டாவது செய்தி எனது கைத்தொலைபேசிக்கும் மின்னஞ்சலுக்கும் வந்தது.
தொலைபேசியில் பேசியவர் சரண்யா பாலகிருஷ்ணன் என்பவர். அவரை அதற்கு முன்னர் கேள்விப்பட்டதுமில்லை. பார்த்ததும் இல்லை. மின்னஞ்சல் செய்தி ஆங்கிலத்தில் இவ்வாறு வந்திருந்தது:
Dear Murugaboopathy ,
Hope you are well. This is Saranya from AUS Tamil TV who spoke to you over the phone regarding the same event.
MDA Events in association with AUS Tamil TV are conducting an event called ” EUPHORIA 2022 ” on 5th of November at Rowville Performing Arts Centre. It’s an entertainment event combined with AUS Tamil TV’s 1st community award event attended by 500+ tamil people.
We are very happy to inform you that you are Selected for the “Linguistics ” Award for showing outstanding commitment to our Tamil language. We are officially inviting you on behalf of AUS Tamil TV to participate in our event.
Kindly accept our humble invitation and grace the ceremony with your gracious presence. All the details related to this award program are also being sent to you with this invitation. We are waiting for your confirmation for your presence to receive the award.
இந்த மின்னஞ்சலை படித்துவிட்டு சரண்யாவுடன் தொடர்புகொண்டு நான் சிட்னிக்கு பயணப்பட்டிருப்பதாகச் சொன்னேன். எனது சார்பில் யாரையாவது அனுப்ப முடியுமா..? எனக் கேட்டார்.
குறிப்பிட்ட நவம்பர் 05 ஆம் திகதி எனது பேரக்குழந்தையின் ( மகன் முகுந்தனின் மகள் ) பிறந்த தினம். அதிலும் கலந்துகொள்ளாமல் தொலைதூரம் புறப்பட்ட இந்த இலக்கியவாதி, தனக்கு கிடைக்கவிருக்கும் விருதை சென்று பெற்றுக்கொள்ளுமாறு எவ்வாறு பிள்ளைகளிடம் கேட்கமுடியும்…? !
இருந்தாலும் கேட்டேன். அனைவரும் மிகவும் பிஸி.
எனது இனிய நண்பர் எழுத்தாளர் – ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தை தொடர்புகொண்டு விபரம் சொன்னேன். அவர் அதற்கு சம்மதித்தார்.
எனது கைத்தொலைபேசியில் சார்ஜ் குறைந்துகொண்டுபோனது.
Albury இலிருந்து பஸ் பயணம். முன்னிரவு ஏழு மணியளவில் சிட்னி மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் இறங்கினோம். நடேசன் East Wood நோக்கியும் நான் Toongabbie நோக்கியும் வேறு வேறு திசையில் ரயிலில் சென்றோம்.
நாம் “ பாப்பா “ என செல்லமாக அழைக்கும், முன்னர் செல்வி கனகாவாக பார்த்தவரை சுமார் 32 வருடங்களின் பின்னர், திருமதி கனகா கணேஷ்வரனாக அன்று என்னை Toongabbie ரயில் நிலையத்தில் வரவேற்க வந்தவரை நேருக்கு நேர் பார்க்கின்றேன்.
கவிஞர் அம்பி, திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தது. கொவிட் பெருந்தொற்று கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரைப் பார்ப்பதற்காக நானும்
நடேசனும் புறப்பட்டோம். தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் ( அமரர் ) சிவகுருநாதனின் பெறாமகன் எழுத்தாளர் – அரசியல் ஆய்வாளர் ஐங்கரன் விக்னேஸ்வரா தமது காரில் எம்மை அழைத்துச்சென்றார்.
இவரது தந்தையார் மருத்துவர் விக்னேஸ்வரா, முன்னர் கவிஞர் அம்பி கற்ற யாழ் . சென் ஜோன்ஸ் கல்லூரியில் அம்பியின் சக மாணவர்.
மருத்துவமனையில் அம்பி எம்மை அடையாளம் கண்டுகொண்டார். அவருக்கு அடுத்த ஆண்டு ( 2023 ) பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி 95 வயது பிறக்கிறது. அவருடைய சொல்லாத கதைகள் தொடரை நூலுருவாக்கி, அன்றைய தினம் மெய்நிகரில் வெளியிடவிருக்கும் நற்செய்தியை செவிக்கருகே சென்று சொன்னேன். எனது கரத்தை இறுகப்பற்றிக்கொண்டார்.
எனது பிள்ளைகளுக்கும் அவர் மிகவும் பிரியமான தாத்தா. அவர்களுக்கும் அவரது அபிமான மாணவன் கலைஞர் மாவை நித்தியானந்தனுக்கும் அம்பி மருத்துவ மனையிலிருக்கும் தகவலை அங்கிருந்தே சொன்னேன்.
என்னை தொடர்ந்தும் சிறுகதை இலக்கியப் படைப்பாளியாகவே பார்க்க விரும்பும் சிட்னியில் வதியும் செல்வி யசோதா பத்மநாதனுக்கு எனது புதிய கதைத் தொகுதியான கதைத் தொகுப்பின் கதை நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன்.
அவரது அருமைத் தந்தையார் ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் எனது இனிய நண்பர். அன்னார் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மறைந்துவிட்டார். அன்னாரின் இறுதி நிகழ்வுக்கு என்னால் செல்ல முடியாது போய்விட்டது.
இந்தப்பயணத்தில் தங்கை யசோதாவையும் அவரது அருமைத் தாயாரையும் பார்க்கச்சென்றேன்.
முன்னர் அங்கே செல்லும்போதெல்லாம் என்னருகே அமர்ந்து கதைகள் பல பேசும் அய்யா பத்மநாதன், அந்த இல்லத்தில் தீபமேற்றப்பட்ட சிறிய மேசையில் ஒளிப்படமாக புன்முறுவல் பூத்தவாறு என்னை வரவேற்றார்.
அவரைத் தொட்டு வணங்கிவிட்டு தாயுடனும் மகளுடனும் உரையாடலை தொடர்ந்தேன்.
எழுத்தூழியத்தினால் – இலக்கியப் பணிகளினால் என்ன அங்கீகாரத்தை பெற்றுவிட்டாய்..? என்று என்னைக் கேட்பவர்களுக்கெல்லாம் எனது பதில்: “ நான் தேடிய நட்பு வட்டம்தான் நான் பெற்ற அங்கீகாரம் ! அதுவே நிலைத்திருக்கும். “
சிட்னி இலக்கிய சந்திப்பில் நான் இரண்டு தலைமுறைகளுக்கு நடுவில் நின்றேன்.
மூத்த பத்திரிகையாளர் ( அமரர் ) கார்மேகத்தின் புதல்வி, திருமதி கனகா . கணேஷ், மூத்த எழுத்தாளர் ( அமரர் ) காவலூர் ராஜதுரையின் புதல்வன் வசீகரன் ராஜதுரை, மூத்த பத்திரிகையாளரும் தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியருமான ( அமரர் ) ஆர். சிவகுருநாதனின் புதல்வன் விஷ்ணுவர்தன், மூத்த முற்போக்கு எழுத்தாளர் ( அமரர் ) நீர்வை பொன்னையனின் புதல்வி திருமதி அநுராதா குசேலகுமாரன் ஆகியோருடன் முன்னர் வீரகேசரியில் என்னுடன் பணியாற்றியவரும் சுதந்திரன் பத்திரிகை பாசறையிலிருந்து வெளியான சுடர் மாத இதழின் ஆசிரியராகவும் இயங்கிய எஸ். கனகசிங்கமும் ( பொன்னரி ) மனித உரிமைச்செயற்பாட்டாளர் கந்தசாமி மற்றும் கொவிட் பெருந்தொற்று நிவாரண உதவிப்பணிகளில் எம்மோடு இணைந்து இயங்கிய சித்தி ரஸீனா ஆகியோரும் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சி சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில், கனகா. கணேஷின் வரவேற்புரையுடன் நடந்தது.
இங்கும் மறைந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் நினைவுகூரப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் வரலாற்றுச்சுவடுகள் ஒளிபடத்தொகுப்பு ஆவணம் காண்பிக்கப்பட்டது.
திட்டமிட்டவாறு உரிய நேரத்தில் ( மாலை 4-00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.
ஐந்து நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மெல்பனில் மறைந்த வானொலி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ( அமரர் ) சண்முகம் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் ( கட்டுரைகள் ) நூல் பற்றி எழுத்தாளர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வராவும் – நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் ( கட்டுரைகள் ) நூல் பற்றி திரு. திருநந்தகுமாரும் – நடேசனின் அந்தரங்கம் ( சிறுகதைகள் ) நூல் பற்றி கவிஞர் திரு. செ. பாஸ்கரனும் – கனடா ஶ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே ( சிறுகதைகள் ) நூல் பற்றி கவிஞரும், வானொலி ஊடகவியலாளருமான சௌந்தரி கணேசனும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பித்து உரையாற்றினர்.
எனது கதைத்தொகுப்பின் கதை ( சிறுகதைகள் ) நூல் பற்றி திரு. கானா. பிரபாவும் எழுதியிருந்த வாசிப்பு அனுபவத்தை மாணவி செல்வி அம்பிகா அசோகபாலன் வாசித்து சமர்ப்பித்தார்.
இவர் ஏற்கனவே மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பின் வாராந்த நிகழ்வொன்றில் கனடா அ. முத்துலிங்கம் அவர்களின் ஒரு கதையை வாசித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இலக்கிய ஆர்வமுள்ள இம்மாணவியை சிட்னி இலக்கியவாதிகள் உற்சாகமூட்டி ஊக்கமளிக்கவேண்டும்.
நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவத்துடன் நூலாசிரியர்களின் ஏற்புரையுடனும் எனது நன்றியுரையுடனும் நிகழ்ச்சி தேநீர் விருந்துபசாரத்துடன் முடிவடைந்தது.
நண்பர் கணேஷ்வரனும் அவரது புதல்வன் செல்வன் காவ்யன் கணேஷ்வரனும் ‘ பாப்பா ‘கனகாவும், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறுவதற்கு எமக்கு பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கினர்.
எனக்கிருந்த சிறிய நெருடலையும் இச்சந்தர்ப்பத்தில் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
தமிழ்த்தேசியப்பற்றாளர் ( அமரர் ) சண்முகம் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூலும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்னாரின் அன்புத் துணைவியார் திருமதி சிவமலர் சபேசனும் வருகை தந்திருந்தார். குறிப்பிட்ட நூலை, அறிமுகப்படுத்திப் பேசியவர் எழுத்தாளர் அரசியல் ஆய்வாளர் திரு. ஐங்கரன் விக்னேஸ்வரா.
இவர் சபேசனின் இரத்த உறவினர் என்பது எமக்கு பின்னர்தான் தெரியவந்தது.
சபேசனை நன்கு அறிந்தவர்கள் – சபேசனின் தமிழ்த்தேசியப்பற்றோடு இணைந்து பயணித்தவர்கள் பலர் சிட்னியில் வசிக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் சபேசனின் நூல் சிட்னியில் வெளியாகும் தகவலும் நன்கு தெரியும். இணைய ஊடகங்கள், வானொலி ஊடகங்கள் மூலமும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
ஆயினும், அவர்கள் வரவில்லை.
“ ஆளை ஆளை பார்க்கிறார்…ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார் “ என மனதிற்குள் பாடியவாறு மண்டபத்தை
விட்டு வெளியேறியபோது, சிட்னி நண்பர் செ. பாஸ்கரன், அன்றிரவு 10 மணியிலிருந்து 12 மணி வரையில் தங்கள் A T B C வானொலியில் சிறுகதை – நாவல் இலக்கியம் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரலையில் ஒலிபரப்பாக விருப்பதாகச்சொல்லி அழைத்துச்சென்றார். அவரது இல்லத்தில் எனக்கும் நடேசனுக்கும் இராப்போசன விருந்து. அதனையடுத்து A T B C வானொலி கலையகம் சென்றோம்.
அந்தவேளையில் எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் NSW Train Link இலிருந்து மன்னிப்பு கேட்டவாறு வந்திருந்தது.
நாளை 06 ஆம் திகதி மெல்பனுக்கான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பஸ் போக்குவரத்தே இருப்பதாக அந்த குறுந்தகவல் சொன்னது.
இலக்கியத்தால் அங்கீகாரம் மட்டுமல்ல, அலைச்சலும் கிடைக்கும்.
இலக்கிய சகோதரி கனடா ஶ்ரீரஞ்சனியும் சிட்னியிலிருந்து கனடா நோக்கி புறப்பட்டார்.
சுமார் பத்து நாட்கள் இவ்வாறு அலைந்துவிட்டு , எனது மோர்வல் ஊர் திரும்பினேன்.
எங்கள் வீட்டுப் பயிர்களும் ரோஜா மலர்ச்செடிகளும் பூத்து மலர்ந்து எனக்காக காத்திருந்தன.
வர்ணபகவானுக்கு மனமார்ந்த நன்றி.
—0— letchumananm@gmail.com
பத்து நாட்களில் ஒரு இலக்கியவாதி என்ன என்ன செய்ய முடியும், எதை சாதிக்க முடியும் எனும் கேள்விக்கு விடையே இக்கட்டுரை. எத்தனை சவால்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை உறவுப்பாலங்கள்? இவர் காலில் என்ன சக்கரமா, கை என்ன யந்திரமா என வியக்கும் வேகம்! இப்படியும் இலக்கியம் வளர்க்கலாம் என்பதற்கு இது சான்று!
கிறிஸ்டி நல்லரெத்தினம்
திரு லட்சுமணன் முருகபூபதி அவர்களுக்கு Linguistics Award.
எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அவர்களுக்கு.
பூபதி அண்ணா ஒரு வியக்கத்தக்க மனிதர்தான். சவால்களை மேவிய சாதனைகளையும் அபிப்பிராய பேதங்களைத் தாண்டிய ஒற்றுமையையும் யதார்த்தத்தில் காண்பிப்பவர்.
சவால்களை மேவிய சாதனையாளராக இருப்பதுடன், அபிப்பிராய பேதங்களைக் கடந்து அனைவருடனும் ஒற்றுமையைப் பேணும் பூபதி அண்ணாவைப் பார்த்து எப்போதும் நான் வியப்பதுண்டு.
அவரின் பாரிய இலக்கியச் சேவைகளால் நானும் பெரும் பயனடைந்திருக்கிறேன் என்பதற்கு இப்பதிவும் ஒரு சான்றாக அமைகிறது.