கவிதைகள்
அவனிதனில் வாழ்வெமக்கு அற்புதமாய் மலர்ந்திடுமே!… மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
வெண்ணிலவு தேய்கிறது மீண்டுமது ஒளிர்கிறது
எண்ணியது பார்ப்பதில்லை ஏக்கமதும் கொள்வதில்லை
இவ்வுலகில் வாழ்க்கையது ஏறியேறி சரிகிறது
இதையெண்ணி ஏக்கமுறல் ஏற்றதுவா எண்ணிடுவீர்
மண்முளைக்கும் வித்துக்கள் எத்தனையோ குவிந்திருக்கு
வித்துக்கள் அத்தனையும் விருட்சங்கள் ஆவதுண்டா
விருட்சங்கள் ஆவதுவே விருப்பமெனக் கொண்டுவிடின்
எத்தனையோ வித்துக்கள் ஏக்கமே கொண்டுவிடும்
மலருகின்ற மலரனைத்தும் வாசமதைத் தருவதுண்டா
வாசமதை வழங்காமல் மலர்களுமே மலர்கிறதே
மலருகின்ற நினைப்பினிலே மலரனைத்தும் திகழ்கிறது
வாசமில்லா மலர்கூட வண்ணமாய் ஜொலிக்கிறதே
எத்தனையோ கனிகொடுத்தும் எம்மரமும் சலித்ததில்லை
தித்திக்க கனிகொடுத்து திருப்தியதே அடைந்திருக்கு
மற்றவர்க்குச் சுவைகொடுக்க மரம்விரும்பி நிற்கிற்கிறது
மனிதமனம் உணர்விழந்து மரம்வெட்டி மகிழ்கிறது
மரமெங்கள் துணையாகும் மரமெங்கள் வாழ்வாகும்
மனிதனது தொடக்கமே மரக்கூட்டக் காடாகும்
மரந்தொட்டு நாகரிகம் வளர்நிலையைக் கண்டதுவே
மரந்தறிந்து காடழிந்து மனிதமிப்போ நிற்கிறது
உணர்வில்லா நிலையிருப்போர் மரமென்று பழிக்கின்றோம்
உணர்வுள்ள நாங்களிப்போ மரமழித்து மகிழ்கின்றோம்
இருந்தாலும் பயனளிக்கும் இறந்தாலும் பயனளிக்கும்
இயற்கையது கொடையான மரமதனை இகழலாமா
தத்துவங்கள் எத்தனையோ எம்முன்னே இருக்கிறது
அத்தனையும் வாழ்வினுக்கு அருந்துணையே ஆகிவிடும்
அர்த்தமதை அகமிருத்த ஆவல்கொண்டால் அனைவருமே
அவனிதனில் வாழ்வெமக்கு அற்புதமாய் மலர்ந்திடுமே.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா.