கவிதைகள்

புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய் !

புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்

பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே
தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே
விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே
வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு
மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட

அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட
பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே
பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே
பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே

பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை
வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை
வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே

பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே
மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்

முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்
அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே

உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே

பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்
பசிகண்டு வெகுண்டதால் பாரழிப்பேன் என்றாயே
பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை யேற்றாயே

அன்னைத் தமிழின் அக்கினிக் குஞ்சானாய்
அமிழ்த மெனத்தமிழை அரியாசனம் வைத்தாய்
அஞ்சாமைக் குணத்தை ஆளுமை ஆக்கினாய்
அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய்

முத்தமிழைப் பாரதியுன் சொத்தாக ஆக்கினாய்
முத்திரையாய் கவியுலகில் முன்வந்து நின்றாய்
எத்திக்கும் உனைநினைக்க இவ்வுலகில் வாழ்ந்தாய்
புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்

ஆண்டவன் நினைப்பை அகமுழுதும் இருத்தினாய்
ஆதிபரா சக்தியின் அருள்வேண்டிப் பாடினாய்
ஆத்திகனாய் வாழ்வதனை அதிசிறப்பு என்றாய்
அசடனாய் வாழாதே எனவுரத்தும் சொன்னாய்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.