கவிதைகள்
நல்லைநகர் கொடிகாண நற்கருணை நல்கிடுவாய்!…. ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
நல்லைநகர் கந்தா வல்வினைகள் அறுப்பாய்
தொல்லை வரும்வேளை துடைத்திடுவாய் கந்தா
உன்னடியார் தினமும் உனைப்பாடிப் பணிவார்
உன்கோவில் கொடியை உளமகிழ்ந்து பார்ப்பார்
ஊரெலாம் இருந்து உனதடியார் குவிவர்
வேலவனே உந்தன் கோடியேற்றம் காண
கால்நடையாய் வருவார் காவடிகள் எடுப்பார்
கந்தாவுன் கருணை வேண்டியவர் தொழுவார்
கொடியேறி விட்டால் குழப்பங்கள் அகலும்
குறையிருந்தால் மனத்தில் நிறைவங்கே மலரும்
உமைமைந்தா உந்தன் ஒளிமுகத்தைக் கண்டால்
உளமதனில் இன்பம் ஊற்றெடுத்தே நிற்கும்
வெள்ளை மணல்மீது தம்முடம்பு புரள
உள்ளமதில் முருகா உன்நினைப்புப் பெருக
கள்ளமனம் கரைய கைகூப்பும் அடியார்
நல்லூரின் வீதியிலே எல்லையிலா விருப்பார்
வள்ளிதெய்வ யானையுடன் வடிவழகா வருவாய்
மால்மருகா வேல்முருகா எனவாயும் ஒலிக்கும்
எல்லையிலாப் பரம்பொருளாய் இருக்கின்றாய் முருகா
நல்லைநகர் நீயிருந்து நல்கிடுவாய் அருளை
ஈழத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கு முருகா
எதுநடக்கும் எதுநடக்கும் எனுமேக்கம் பெருக்கம்
ஆமுடை காதலுடன் அனவருமே உந்தன்
அடிபரவி நிற்கின்றோம் அருள்தருவாய் முருகா
நல்லைநகர் வந்துந்தன் திருமுகத்தைக் கண்டால்
கொல்லவரும் கொடியவரும் நல்லவராய் ஆவார்
எல்லையிலா கருணைநிறை ஈராறு முகமுடையாய்
நல்லைநகர் கொடிகாண நற்கருணை நல்கிடுவாய்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா