கவிதைகள்
காதல்!… ( கவிதை ) ….. அரவிந்த் ஆகாஷ்.
காதல்…
இந்த மூன்றெழுத்தில் முக்குளிக்காதவர் எவரும் இல்லை…
இந்த ஒற்றை வார்த்தையில் தான் ஓராயிரம் மின்சாரம்…
இது மனிதனின் மிருக எண்ணங்களைத் தோலுரிக்கிறது…
காதலின் தனித்துவமே மனிதர்கள் அன்றி மற்றவைகளும் அதனைக் காதலிப்பது தான்…
வானம் மேகத்தைக் காதல் கொள்கிறது
மழைகளாய்…
இரவு நிலவைக் காதல் கொள்கிறது
நட்சத்திரங்களாய்…
கடல் கரையைக் காதல் கொள்கிறது
அலைகளாய்…
பூ காற்றைக் காதல் கொள்கிறது
நறுமணமாய்…
பூமி நிழலைக் காதல் கொள்கிறது
சுவடுகளாய்…
தேகம் நிர்வாணத்தைக் காதல் கொள்கிறது
ஆடைகளாய்…
கவிஞன் கவிதையைக் காதல் கொள்கிறான்
பொய்களாய்…
காதல் கொள்ளாத எவையும்
காற்றில் காணாமல் போய் விடும்…
காதலிக்காதவனும்
காதலிக்கப் படாதவனும்
பூமியில் பாரமே…
காதல் கொள்பவரிடம்
பொய்கள் இன்றி
பொறுமையே மிகுதியாக இருக்கும்…
ஆயுதமின்றி அமைதியே
அதிகமாய் இருக்கும்…
காதலருக்கு இதயம் தவிர
மற்றவை களவாடத் தெரியாது…
இரண்டு கருவி
இணையும் போது தான்
இசை பிறக்கிறது…
இரண்டு வார்த்தை சேரும் போது தான்
கவிதை பிறக்கிறது…
இரண்டு இதயம் மாறும் போது தான்
காதல் பிறக்கிறது…
காதல் எங்கோ அங்கு யுத்தம் இருக்காது…
முத்தத்தின் சத்தம் மட்டுமே
இருக்கும்…
அங்கே வன்முறை இருக்காது…
வாழும் வரை
வயது மட்டுமே பாதியாய் இருக்கும்…
ஆதலால் மனிதா…
ஒரு முறையேனும்
கனவிலாவது காதல் கொள்…
கனவுகள் அர்த்தப்படும்…
உன் கனவுகள் மெய்ப்பட வேண்டுமானால்…
உன் காரியங்கள் நிறைவேற வேண்டுமானால்…
உன் கரங்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டுமானால்…
உன் காலடியில் பூக்கள் பூக்க
வேண்டுமானால்…
ஒன்று செய்…
அதுவும் இன்றே செய்…
கட்டாயம் “காதல்” கொள்…!!!