கவிதைகள்
மேகநதியில் நீராடிய நிலவு!…. ( கவிதை ) …. ஜெகன் மோகன்.
பாம்பின் விடம் உண்ட உடம்புபோல்
வானம் முழுவதும் நீலம் பரவிக்
கிடந்தது! விடமுறிவுக்காய் அதீத
ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள்!
அலைகளின் முதுகிலேறி முன்னும்
பின்னும் போவதுபோல் சில மேகக் கூட்டங்கள் முன்னும் பின்னும்
நகர்ந்து கொண்டிருந்தன!
மழைக்காலத்தில் விடுதியில் தங்கும் மனிதர்போல் நட்சத்திர விடுதிகளில்
படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலவு கண் விரித்தாள்!
மேகநதியில் நீராடி வானத்தின் ஓர்
பகுதியை கிழித்து உடையாய் போர்த்தி ஒரு நட்சத்திரம் கொய்து தலையில் வைத்து இரவின் மகளாய் உலகின் பயணம்!
ஜெகன் மோகன்.