சுழன்றிய சர்ச்சை, மனக் கசப்புகள் – சிஎஸ்கேவிலிருந்து விலகுவதை உறுதிசெய்த ஜடேஜா?
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவுகள் அனைத்தையும் நீக்கியதன் மூலம், அந்த அணியிலிருந்து விலகுவதை மறைமுகமாக ஜடேஜா தெரிவித்துள்ளதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின்போது சுவாரஸ்யமான மற்றும் கசப்பான சம்பவங்கள் வழக்கம்போல் நடந்தாலும், இந்த வருடம் சி.எஸ்.கே. மற்றும் மும்பை அணிக்கு மறக்க முடியாத தருணங்கள் நிறைந்தே காணப்பட்டன. சொல்லப்போனால் ரசிகர்கள் அந்த அணிகளின் மீது இன்றளவும் நம்பிக்கை வைத்திருந்தாலும், மறுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறியிருந்தன. குறிப்பாக உலகத் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர், ராக் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஜட்டு என்கிற ஜடேஜாவைப் பற்றித்தான் சர்ச்சைகள் சுற்றின.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கேப்டன் தோனியை விட, ரவீந்திர ஜடேஜா 16 கோடி ரூபாயக்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டார். இதனால் அப்போதே, தோனிக்கு வயதாகுவதால் இந்த சீசனில் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தான் களமிறங்குவார் எனக் கணிக்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டு சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியநிலையில், சிஎஸ்கே கேப்டன் பதவியை ஜடேஜா ஏற்றுக்கொண்டார்.
சென்னை அணியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஜடேஜாவால் பல நேரங்களில் சென்னை அணி வெற்றிவாகை சூடியிருந்ததும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. மேலும் பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் அசத்தும் வீரராக அறியப்பட்ட ரவீந்திர ஜடேஜா முதன்முதலாக கேப்டன் பதவியை ஏற்றதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்று ஆடிய முதல் 8 போட்டிகளில், 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே பார்மிலிருந்து விலகி விமர்சனத்திற்குள்ளானார்.
களத்தில் தோனியே முடிவுகளை எடுப்பதாகவும், கேப்டன் பொறுப்பில் தோனி தலையீடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சக வீரர்கள் ஜடேஜாவின் பேச்சை மதிப்பதில்லை என்ற தகவலும் வெளியானது. இதனால் சுதந்திரமாக ஜடேஜாவால் கேப்டன் பொறுப்பை சரிவர செய்யமுடியவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது திறமை மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தோனியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தோனி தலைமையில் சென்னை அணி முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. ஆனால் அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய சென்னை அணி படுதோல்வியை சந்தித்து, பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இதற்கிடையில், ரவீந்திர ஜடேஜா ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்காதநிலையில், எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது.
ரவீந்திர ஜடேஜாவின் காயம் பாதிதான் சரியாகியுள்ளதாகவும், இந்த காயத்தோடு அடுத்த போட்டியில் பங்கேற்றால், அது ஜடேஜாவுக்கு பெரிய பிரச்சினையாக மாறும் என சென்னை அணி மருத்துவர்கள் எச்சரித்ததால்தான் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், சென்னை அணி நிர்வாகம் மற்றும் ரவீந்திரா ஜடேஜா தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து ஒருவொருக்கொருவர் ஃபாலோ செய்வதை நிறுத்தியதால், அதிக அளவிலான கேள்விகள் எழுந்தன.
சுரேஷ் ரெய்னாவுக்கு நடப்பது போன்று, ஜடேஜாவிற்கும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அறிமுக அணியான குஜராத் அணிக்கு கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்ட்யாவின் வெற்றியோடு ஒப்பிட்டு முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜடேஜாவின் நண்பர் ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், ஆமாம் சிஎஸ்கே அணியால் ஜடேஜா மன வருத்தத்தில் தான் இருக்கிறார் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகின.
மேலும் ஐபிஎல் போட்டி வீரர்கள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, முதலில் சிஎஸ்கேவிலிருந்து விலகி, தனது சொந்த மாநிலப் பெயரைக்கொண்ட குஜராத் அணியின் கேப்டனாக ஜடேஜா விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் விடவில்லை என்றும் கூறப்பட்டது. பல்வேறு சர்ச்சைகள், மனக்கசப்புளால் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுவரா மாட்டரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
எனினும், சிஎஸ்கே நிர்வாகம், ஜடேஜா அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்றே உறுதி செய்தது. ஆனால் இதனை மறுத்தோ, ஆதரித்தோ ஜடேஜா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதன்பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், ஜடேஜா தனது பலத்தை மீண்டும் நிரூபித்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனாலும், எப்போதும் தோனியின் பிறந்தநாளுக்கு தனது சமகவலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து சொல்லும் ஜடேஜா இந்தாண்டு அப்படி ஏதும் பதிவுகளை இடாமல் இருந்தது ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 429 பதிவுகள் வைத்திருந்தார் ஜடேஜா. அதில் சிஎஸ்கே தொடர்பான அனைத்து பதிவுகளையும் அவர் நீக்கியுள்ளார். குறிப்பாக கடந்த 2021 மற்றும் 2022 தொடர்பான அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சிஎஸ்கே உடனான மனக் கசப்பை வெளிப்படுத்தும் விதமாகவே ஜடேஜா நீக்கியுள்ளதாக ரசிகர்கள் மீண்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் குறைந்த காட்சிகள் இருந்ததால், படத் தொடர்பான பதிவுகளை ஆலியா பட் நீக்கியதாக சர்ச்சைகளை எழுந்த நிலையில், இடம் காரணமாகவே பழைய பதிவுகளை நீக்கியதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதேபோல் ஜடேஜா, இடம் காரணமாகவே நீக்கினாரா அல்லது சிஎஸ்கே அணியுடனான முறிவுதான் காரணமா என்று பொறுத்திருந்தே பார்க்க முடியும். அதேநேரத்தில் சென்னை அணி தூண்கள் ஒவ்வொருவராக இவ்வாறு மனக்கசப்புடன் வெளியேறுவது அந்த அணிக்கு பாதகமாகவே பார்க்கப்படும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.