பஞ்சபூதம் என்பதன் பொருள் என்ன…?
“ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ” என்கிறது உபநிஷத். மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் இவற்றை கீழிருந்து மேலாகவும் நாம் வரிசைப்படுத்திப் பார்க்கலாம். ப்ருதிவீ என்றால் பூமி அல்லது நிலம் என்று பொருள். ஆப: என்றால் நீர். மற்ற வார்த்தைகளுக்கான பொருள் எல்லோரும் அறிந்ததே. அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த உலகில் சிருஷ்டிக்கு அடிப்படை இந்த ஐந்துமே ஆகும். இயற்கையின் அடிப்படையான இந்த ஐந்து மூலங்களைத்தான் கடவுளாக ஆதி மனிதன் வணங்கினான். இந்த ஐந்து மூலங்களும் தனித்தனியே தங்களது சக்தியினை ஒன்று திரட்டி வைத்திருக்கும் இடங்களை பஞ்சபூத ஸ்தலங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் (ப்ருத்வீ லிங்கம்), நீர் – திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் (அப்பு லிங்கம்), காற்று – காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் (வாயு லிங்கம்), நெருப்பு – திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் (அக்னி லிங்கம்), ஆகாயம் – சிதம் பரம் நடராஜர் ஆலயம் (ஆகாச லிங்கம்) ஆகிய ஐந்தையும் பஞ்சபூத ஸ்தலங்களாகச் சொல்வார்கள். புவியியல் அடிப்படையில் நோக்கினால் அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை இந்த ஐந்திற்கும் இடையே உள்ளது என்பதை அறிய முடியும். அட்சரேகை, தீர்க்க ரேகை என்று பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். இந்த ஐந்து ஸ்தலங்களும் அமைந்திருக்கும் தீர்க்கரேகை அளவுகளையும் அறிந்து கொள்வோம். காஞ்சிபுரம் (நிலம்) , திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்). இந்த ஐந்து ஸ்தலங்களும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன என்பது இப்போது புரிந்திருக்கும். இந்த ஐந்தும்தான் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இன்றைக்கு சாட்டிலைட் உதவியுடன்தான் நம்மால் இந்த உண்மையை அறியமுடிகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் எந்த அறிவியல் உபகரணங்களின் துணைகொண்டு இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்புதான் மிஞ்சும். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சந்நதியில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் மலையே சிவனின் வடிவம். அதுவே அக்னி ஸ்வரூபம். இதனை உணர்த்தும் விதமாக மலை உச்சியில் தீபம் ஏற்றுகிறார்கள். சிதம்பரத்தில் வெற்றிடமான அருவுருவமே சிவம் என்று ஒன்றுமில்லாத வெற்றிடத்தை ஆதிமூலமாக வணங்குவார்கள். அண்டமெல்லாம் பரவியிருக்கும் ஆகாயமே இறைவனின் வடிவம் என்ற சித்தாந்தத்தை உள்ளடக்கியது சிற்றம்பல (சிதம்பர) ரகசியம். அம்பலம் என்றால் ஆகாயம் என்று பொருள். இவ்வாறு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் ஒவ்வொரு ஸ்தலத்தில் மையப்படுத்தி காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஐந்தும் பஞ்சபூத ஸ்தலங்களாக அமைத்துள்ளனர். இந்த ஐந்து ஸ்தலங்களுக்கும் நேரில் சென்று தரிசித்தவர்களின் அடிதொட்டு வணங்கினாலே பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும்.
– மகேஸ்வரி.