சிவன் கோவிலில் பனியில் சிவலிங்கம் உருவான அதிசயம்
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில் பனி சிவலிங்கம் உருவாகியுள்ளது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தரிசனம் செய்கின்றனர். இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில், சிவபெருமான் ஒவ்வொரு ஆண்டும், ஒரு பனி சிவலிங்க வடிவத்தை எடுப்பதாக கூறப்படுகிறது.
இதனை கண்டு தரிசிக்க பல்லாயிரம் பேர் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், அமர்நாத் குகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏன் பனிக்கட்டி சிவலிங்கமாக உருவெடுக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல விஞ்ஞானிகள் பனி லிங்கத்தின் பின்னணியில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்தும் பலனில்லை. இந்த நிலையில், நாசிக் மாவட்டத்தில் உள்ள ‘திரிம்பகேஸ்வரர் கோவிலில்’ பனி சிவலிங்கம் உருவாகியுள்ளது. இதனைக் கண்ட பக்தர்களும், பூசாரிகளும் இதற்கு முன் சிவலிங்கத்தின் மையத்தில் பனிக்கட்டிகள் உருவாகியதில்லை என்றும் இதுவரை நடைபெறாத அதிசயம் இது என்கிறார்கள்.
மற்றவர்கள் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள பனி, மனிதனால் உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கின்றனர். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நாசிக் சங்கரர் கோவிலில் ஒரு அர்ச்சகர் பிரார்த்தனை செய்வதும் பனி சிவலிங்கத்தை வணங்குவதையும் காணலாம். பனி சிவலிங்கத்தை சுற்றி பூக்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது .