இந்த நாளில் பூஜை பொருட்கள் தேய்த்தால் செல்வம் வீட்டில் தங்காது…
எல்லா விஷயத்திலும் நாள், நட்சத்திரம், கிழமை போன்றவற்றை பார்த்து செய்யும் பொழுது அதில் தடைகள், தாமதங்கள் ஏற்படுவது இல்லை. நம் முன்னோர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கும், ஒவ்வொரு விதமான பலன்களும் கூறிச் சென்றுள்ளனர். அந்த வகையில் விளக்கு, பூஜை சாமான் போன்றவற்றை எந்த நாளில் தேய்க்கக் கூடாது? இதனால் செல்வம் சேருவது தடைப்படுமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட நாட்களில் ஒரு சில பொருட்களை வாங்கினால் நல்லது என்றும், வாங்கக் கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. அது போல பூஜை பொருட்களை தேய்ப்பது என்பதற்கும் ஒரு நாள், கிழமை உண்டு! அதை கவனிக்காமல் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு வரக்கூடிய நல்ல பலன்கள் தள்ளி செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதை தீட்டு இருக்கும் சமயங்களில் நிச்சயம் தொடக் கூடாது. தீட்டு உள்ளவர்கள் இந்த பொருட்களை சுத்தம் செய்வதற்கு தொடக்கூடாது.
பூஜை செய்கிற நாள் அன்று கட்டாயம் எந்த காரணத்தை கொண்டும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக் கூடாது என்பது நியதி. அப்படி வேறு வழியில்லாமல் அன்றைய நாளில் நீங்கள் சுத்தம் செய்ய நேரிட்டால் சூரியன் மறைவதற்குள் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சூரியன் மறைந்த பிறகு பூஜை பாத்திரங்களை தேய்த்து, பிறகு விளக்கை ஏற்றி வழிபட்டால் அதில் எந்த பலனும் இல்லாமல் போய்விடும், மேலும் தெய்வ குற்றத்திற்கு ஆளாக நேரிடும். பூஜை பொருட்களை நீங்கள் வியாழன் கிழமை அன்று சுத்தம் செய்வது உசிதமானது.
மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய போகிறீர்கள் என்றால், வியாழன் கிழமையில் சூரியன் மறைவதற்கு முன்பே நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்த துணியால் துடைத்து பளிச்சென வைத்து விட வேண்டும். அதன் பிறகு அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கக் கூடாது. பூஜை செய்யும் நாளான வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து பூஜைகள் துவங்க வேண்டும். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த உடன் சிலர் மஞ்சள், குங்குமம் எல்லாம் வைத்து விடுவார்கள், அப்படி எல்லாம் செய்யக்கூடாது.
விளக்கில் எண்ணெய் ஊற்றி வெகு நேரம் காத்திருக்கவும் கூடாது. எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரி போட வேண்டும். திரியைப் போட்டு வைத்துவிட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது. பூஜை பாத்திரத்தை திங்கட் கிழமையிலும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். செவ்வாய்க் கிழமையில் விளக்கை ஏற்றுபவர்கள் திங்கட் கிழமையில் பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாம். திங்கட் கிழமை பூஜை செய்பவர்கள் சூரியன் மறைவதற்கு முன்னர் சுத்தம் செய்து விட்டு பூஜையை துவங்கலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக பூஜை பொருட்களை சுத்தம் செய்த பின்பு தான் பயன்படுத்த வேண்டும்.
பூஜைப் பொருட்களில் பச்சை நிறத்தை எந்த காரணம் கொண்டும் படிய விடக்கூடாது. இது குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும். மேலும் பூஜைப் பொருட்களை கை தவறி கீழே போடக் கூடாது. அதை கவனமாக கையாள வேண்டும். பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்கள் வாங்கும் பொழுது மிகவும் கூர்மையானதாக வாங்கக் கூடாது. நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். கூர்மையான ஆயுதங்கள் போன்று இருக்கும் பூஜை பொருட்கள் குடும்பத்திற்கு ஆகாது எனவே உடனே அதனை மாற்றிக் கொள்வது நல்லது.